மன ஒற்றுமை/ரேவதி பாலு

நவீனுக்கு கோபம் கோபமாக வந்தது இன்னும் பழைய நாளை போல பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறது காபி குடிக்கிறது, அப்புறம் தகவல் சொல்றேன்னு சொல்றது எல்லாமே எரிச்சலாக இருந்தது. இந்த அம்மா அப்பா ஏதாவது புரிஞ்சு கொண்டா தானே என்று நினைத்துக் கொண்டான்.

“சாதாரணமா ஒரு கோவிலில் பார்த்து கூட முடிவு பண்ணலாமே “என்று சொன்னான். அவர்கள் கேட்டால்தானே? “அவங்க வீட்டுக்கு போய் பொண்ண பாக்குற மாதிரி வராதுடா “என்றார் அப்பா.

” நல்லா தலை நிமிர்ந்து பொண்ண பாருடா” அப்பா தூண்டினார்.

அவன் அவளைப் பார்த்தபோது வாணி அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

நவீனும் வாணியும் தேன் நிலவிற்கு கொடைக்கானல் வந்திருந்தார்கள்.

பெண் பார்க்க வந்திருந்த அன்று கேட்க நினைத்த கேள்வியை இன்று கேட்டான் நவீன். ” அன்னைக்கு நீ எங்கேயோ ஒரு பக்கமா பார்த்து சிரிச்சிட்டு இருந்தியே உன் மனசுல என்ன விஷயம் ஓடிட்டு இருந்தது ? ” என்றான். “தலைமுறை தலைமுறையா நாங்களே காப்பிய தூக்கி வந்து எதிரே நிற்கிறோமே ஒரு மாறுதலுக்கு நீங்க அங்க காபியோட நின்னு நான் எங்க அப்பாவோட எதிரே உட்காந்து இருந்தா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிச்சு பார்த்தேன் . சிரிப்பு தாங்கல” என்றாள்.

“ஆஹா எனக்கு இந்த ஐடியா தோணாம போச்சே . உன்னை எங்க வீட்டுக்குப் வரவழைத்து பார்த்து இருக்கலாமே” என்றான் குறும்பாக. மனதில் விகல்பமின்றி அந்த தம்பதி சிரித்த சிரிப்பு கொடைக்கானல் ஹோட்டல் அறையில் எதிரொலித்தது.