ஜோசியர் வீடு/அன்னபூரணி

“இந்த வீடா?” சந்தேகமாகக் கேட்டாள் வனஜா.

பழைய அபார்ட்மென்ட் என்று பார்த்த உடனேயே தெரிந்தது. வாசலில் வேப்பமரம் தலை சாய்த்து வரவேற்றது அழகாக இருந்தது. கட்டிட முகப்பில் கண்திருஷ்ட்டி விநாயர் படம் போட்ட டைல்ஸ் பதித்திருந்தது. போதாதற்கு திருஷ்ட்டி பொம்மையின் படமும் மாட்டி இருந்தது.

வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.

“ஆமா வனஜா.. நீ வா..” என்று அவளுடைய கைபிடித்து அழைத்துப் போனாள் ராஜி.

‘இந்த வீடா? இது.. இது..’ என்று யோசித்தவள்,

“இந்த வீடு.. பெரிய ஜோசியர்ன்னு சொல்ற.. ஒரு போர்ட் கூட இல்லையே ராஜி!?” சந்தேகமாகக் கேட்டாள் வனஜா.

“அதுதான் இவரோட ஸ்பெஷாலிட்டியே.. போர்ட் இல்லாமயே இவ்ளோ பிரபலமா இருக்கார்.. இன்னும் போர்ட் எல்லாம் வெச்சா.. அடுத்த தெரு முட்டும் க்யூ நிக்கும்.. அப்றம் நாம இவர அடுத்த மாசம் பாக்கணும்னா இந்த மாசமே அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டியிருக்கும்..” என்று சொல்லிக் கொண்டே வனஜாவை அந்த பழைய அபார்ட்மென்ட் உள்ளே அழைத்துப் போனாள் ராஜி.

அந்த அபார்ட்மென்ட்டின் தரைதளத்தில் கடைசி வீட்டின் உள்ளே சென்றார்கள்.

ராஜியின் பின்னால் வனஜா அந்த வீட்டினுள் யோசனையுடன் நுழைந்தாள்.

“வாங்கோ ராஜி மாமி..” என்று வாய் நிறைய வரவேற்றார் கோபாலன்.

“இவா என்னோட பால்ய சிநேகிதி..” என்று ஆரம்பித்த ராஜியை வனஜா திடுக்கிட்டு நோக்கிய வனஜா,

‘எனக்கு இவள ரெண்டு வருஷமாதான் தெரியும்.. இவ என்னடான்னா என்ன பால்ய சிநேகிதின்னு சொல்றாளே..’ என்று நினைத்துக் கொண்டாள்.

“ஓஹோ!” என்றபடியே வனஜாவை நோக்கிய கோபாலன் அதிர்ந்தார்.

இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு,

“சொல்லுங்கோ..” என்றார்.

“இவளோட முக்கியமான பொருள் ஒண்ணு காணலயாம்.. அது எப்ப கிடைக்கும்னு..” என்று ஆரம்பித்துவிட்டு, வனஜாவைப் பார்த்து,

“ஏய் சொல்லுடீ!” என்று கிசுகிசுத்தாள் ராஜி.

“ஓஹோ.. நீங்க சொல்லுங்கோ..” என்று வனஜாவைப் பார்த்து சொன்னார் கோபாலன்.

“அது வந்து..” என்று வனஜா ஆரம்பிக்க,

“நீங்க கொஞ்சம் வெளிய இருங்கோ ராஜி மாமி..” என்றார் கோபாலன்.

“நேக்கு தெரியும்.. ஒருத்தருக்கு நீங்க ஜோசியம் சொல்றதுக்கு முன்னாடி சம்மந்தப் பட்டவாளத் தவிர வேற யாரையும் பக்கத்தில இருக்கப் படாதுன்னு சொல்வேள்ன்னு..” என்று அசட்டுத்தனமாய் சிரித்துவிட்டு,

“எல்லாம் விவரமா சொல்லுடீ.. மாமா கண்டிப்பா நல்ல தீர்வு சொல்வார்..” என்று வனஜாவிடம் கிசுகிசுத்துவிட்டு வெளியேறினாள் ராஜி.

அவள் அங்கிருந்து வெளியேறியதும் வனஜா கோபாலனை முறைக்க, கோபலன் வனஜாவின் முன்னே இரண்டு கைகளையும் சேர்த்து கூப்பினார்.

“உன் மன்னியண்ட சொல்லிடாத வனஜா..” என்றார்.

“என்னண்ணா இதெல்லாம்? இந்த ராஜி என்னடான்னா என்ன பால்ய சிநேகிதின்னு சொல்றா.. உன் வீட்டுக்கே என்னைய யாரையோ மாதிரி அழைச்சிண்டு வரா.. வாசல்ல உன் ஸ்கூட்டரப் பாத்ததும் நா டென்சன் ஆயிட்டேன்.. என்ன நடக்கறதுண்ணா..” என்றாள்.

“நேக்கு வேற வழி தெரியலடீ!” என்றார்.

“அப்டீன்னா?!?!”

“ஆறு மாசத்துக்கு முன்னால திடீர்ன்னு என் வேல போயிடுத்துடீ.. சரியா அன்னிக்கு பாத்து இந்தாத்தில இருந்தவாளும் ஆத்த காலி பண்றேன்னு சொல்லிட்டா.. ஒரே நேரத்தில வருமானம் பூராவும் போயிடுத்து.. உன் மன்னியண்ட சொன்னா அவ ருத்ர தாண்டவம் ஆடிடுவா.. இந்த காலத்தில படிச்சவாளுக்கே வேல கிடைக்கறது குதிரைக் கொம்பா இருக்கு.. நானோ பத்தாங்கிளாஸ் ஃபெயில்.. ஏதோ புண்ணியவான் அந்த காலத்தில நேக்கு ஆஃபீஸ் பாய் வேல போட்டு குடுத்ததால இத்தன வருஷமா என் பொழப்பு நாறாம ஓடிண்டிருந்தது.. இப்ப அந்த வேலையும் போனப்றம்.. இந்த ஆத்து வாடகையும் வராதுன்னு ஆனப்றம்.. நேக்கு என்ன பண்றதுன்னே புரியல.. எவன் இந்த வயசுக்கு மேல நேக்கு வேல குடுப்பான்.. திடுதிப்புன்னு இந்த வீட்டுக்கு குடக்கூலிக்கு நா யாரத் தேடுவேன்.. அதான்.. இப்டி..” என்று நிறுத்தினார் கோபாலன்.

“இப்டி எத்தன நாளைக்குண்ணா மன்னிட்ட மறைச்சி வெப்பேள்..” வனஜா கேள்வியாய் அவரை நோக்கினாள்.

“இன்னும் கொஞ்ச நாள்..” என்று அவர் எதையோ ஆரம்பிக்க,

“முன்ன மாதிரி சம்பளம் வந்தா பரவால்ல.. இப்டி ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும்.. எப்டிண்ணா தாக்கு பிடிப்பேள்..”

“இல்லடீ.. இந்த பிசினஸ் நா நெனச்சத விட ரொம்ப நன்னா போறதுடீ.. ஆஃபீஸ் வேல பண்றச்சே மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சேன்.. இப்ப ஒரு நாளைக்கு ஆயிரம் ரெண்டாயிரம்ன்னு வரது.. அப்ப மாசத்துக்கு எவ்ளோன்னு நீயே பாத்துக்கோயேன்..” என்றார் கோபாலன்.

“ஆனா.. நீங்க சொல்றதெல்லாம் நடக்கறதுன்னு ராஜி சொல்றாளே.. அது எப்டி.. உங்களுக்கு ஜோசியம் எப்டி தெரியும்?!” சந்தேகம் கேட்டாள் வனஜா.

“நேக்கென்ன ஜோசியம் தெரியும்? எல்லாம் சும்மா வாய்க்கு வரத அடிச்சி விடறதுதான்..” என்றார் கோபாலன் பெருமையாய்.

“ஐயோ! மாட்டிண்டுடப் போறேள் ண்ணா.. அப்றம் முதுகுல டின்னு கட்டிடுவா.. உங்க உடம்பு தாங்குமா..” என்று பயத்துடன் கேட்டாள் வனஜா.

“அப்டில்லாம் விட்டுடுவேனா.. நா பாக்கறது ஜோசியம்தான். அதனால நடக்கறதும் நடக்காததும் பகவான் கையிலன்னு ஒரு வார்த்தை முதல்லயே சொல்லிடறேன்.. அதே மாதிரி நா பெரிய பெரிய பரிகாரம்லாம் சொல்லவே மாட்டேன்.. ரொம்ப ரொம்ப ஈசியானதா.. சுவாமிக்கு ஒரு மண்டலம் விளக்கு போடுங்கோ.. ஒரு ஏழைக்கு தினம் ஒரு வேளை சாப்பாடு வாங்கி குடுங்கோ.. ஏழை குழந்தைக்கு பென்சில் நோட்டு வாங்கி குடுங்கோன்னு ரொம்ப ஈசியான பரிகாரம்தான் சொல்வேன்.. அதனால நா மாட்டிக்க மாட்டேன்டீ..” என்றார்.

“ஆனா.. என்னிக்காவது மன்னிக்கு தெரிஞ்சா..”

“நானே இன்னும் கொஞ்ச நாள்ல அவ கிட்ட உண்மைய சொல்லிடுவேன்டீ.. இப்ப வர வருமானம் முன்ன விட அதிகம்கறதால அவ என் தப்பை மன்னிச்சிடுவா..” என்றவர்,

“ஆமா.. நீ என்னத்துக்கு ஜோசியர தேடிண்டு வந்திருக்க?” என்று கேட்டார்.

“என் ரெட்ட வடம் சங்கிலி.. எங்க வெச்சேன்னு தெரியல.. போன வாரம் என் நாத்தனார் பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு போட்டுக்கலாம்ன்னு தேடறப்பதான் அது காணலன்னு தெரிஞ்சது.. அதான்..”

“இதுக்கும் என்ன மன்னிச்சிடுடீ..” என்று மன்னிப்பு கேட்டார் கோபாலன்.

“என்னண்ணா உளறரேள்?”

“இல்லடீ.. என் வேல போச்சுன்னு மாப்ளைக்கு மட்டும்தான் தெரியும்.. மாப்ள தங்கமானவர்டீ.. அவர்தான் இப்டி ஒரு ஐடியா குடுத்தார்.. உங்க வீடே சும்மாதான இருக்கப் போறது.. இதுலயே இந்த பிசினசை ஆரம்பிங்கோன்னு சொல்லி.. இந்த டேபிள் நாற்காலில்லாம் வாங்கி குடுத்து இப்டி ஒரு ஜோசியர் இருக்கார்ன்னு அக்கம் பக்கத்தில எல்லாம் சொல்லி நேக்கு இந்த வருமானத்தை ஏற்படுத்தி குடுத்தார். இதுக்கெல்லாம் செலவு பண்ணதான் உன் ரெட்ட வடம் சங்கிலிய அவர் அடமானம் வெச்சி பணம் வாங்கி குடுத்தார்டீ..
இன்னும் ரெண்டு மாசத்தில உன் சங்கிலிய மீட்டு குடுத்துடறேன்டீ..” என்றார் கோபாலன்.

“அட ஆண்டவா!” என்று சிரித்தாள் வனஜா.

“சரி.. சரி.. உன் ஃப்ரண்டு.. ராஜி மாமி வரா.. என்ன தெரிஞ்சா மாதிரி காட்டி குடுத்துடாதடீ..” என்றார் கோபாலன்.

“ம்.. ம்..” என்றாள் வனஜா.

ராஜி உள்ளே நுழைந்து வனஜாவைப் பார்க்க,

“எல்லாம் கேட்டுண்டுட்டேன் ராஜி..” என்றாள்.

“ஆமா ராஜி மாமி.. உங்க சிநேகிதியோட தொலைஞ்சி போன பொருள் இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள அவா கையில இருக்கும்.. கவலப்படாம இருக்க சொல்லுங்கோ..” என்று கோபாலன் சொல்ல,

“ரொம்ப தேங்க்ஸ் மாமா.. ம்.. உங்க ஃபீஸ்..” என்று இழுத்தாள் ராஜி.

“உங்களுக்கே தெரியுமே மாமி.. உங்களால எவ்ளோ முடியுமோ அத தாங்கோ..” என்றார் கோபாலன்.

வனஜாவிடமிருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அடாவடியாகப் பிடுங்கி கோபாலனிடம் நீட்டினாள் ராஜி.

“ம்ஹூம்.. நா இத கையால தொட மாட்டேன்னு உங்களுக்கு நன்னா தெரியுமே ராஜி மாமி.. அந்த மீனாட்சி உண்டியல்ல போட்டுடுங்கோ..” என்றார்.

ராஜியும் அவர் கை காட்டிய உண்டியலில் அந்தப் பணத்தை போட்டுவிட்டு முன்னால் நடக்க, கோபாலனைத் திரும்பிப் பார்த்த வனஜா, குறும்பாகச் சிரித்தபடியே ராஜியைப் பின் தொடர்ந்தாள்.

பின்னே? மீனாட்சி என்பது மதுரை மீனாட்சியல்ல! தன் அண்ணன் கோபாலனின் தர்மபத்தினி மீனாட்சி என்பது வனஜாவுக்கு மட்டும்தானே தெரியும்.

♥♥♥♥♥♥♥