3. கதோபனிடதம் அறிவோமா!/எஸ்.ஆர்.சி

இது ஆறு வல்லிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இரண்டு அத்யாயங்கள் ஆறு கிளைகள். ஒவ்வொரு அத்யாயத்திற்கும் மூன்று வல்லிகள்.    (வல்லி-கிளை.)

தொடக்கத்தில் ஒரு விஷயத்தை இங்கே விளங்கிக்கொள்ள வேண்டும்.

வாஜஸ்ரவசா என்பவன் தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் தானம் செய்துவந்தான். அவனுக்கு  நசிகேதஸ் என்னும்  ஓரு மகன் இருந்தான்.

பசுக்களை தானம் கொடுப்பதற்குத் தனது தந்தை   அவைகளை  ஓட்டிவரும் சமயம் பார்த்துக்கொண்டே இருந்த நசிகேதஸ் ‘ தந்தையே என்னை யாருக்கு தானம் கொடுப்பாய்? என்று கேள்வி கேட்டான்.

ஒன்று இரண்டு மூன்று என மூன்றுமுறை அதே கேள்வியைக்கேட்டான்.

அவனது தந்தை அவன் பக்கம் திரும்பி, ‘ இறப்புக்கு உன்னை த்தானம் கொடுப்பேன்’ என்று பதில் தந்தார்.

அவன் எழுந்து நின்றான். அவன் தந்தை சொன்னார்.

’ நீ  மரணம் அடைவாய்

 மரணத்தின் பொறுப்பாளி எமன்

அவன் இடத்திற்கு

 நீ சென்று தங்கிவிடு.

 மானுட  இறப்புக்கு எல்லாம்

பொறுப்பாளி

 தன்  இருப்பிடத்தில் 

அவன் இல்லை  என்றாலும்  நீ

அவன் இருப்பிடத்தில்

 மூன்று  இரவுகள்

 உணவின்றி  உறை.’

எமன் திரும்ப வந்து

உன்னிடம் வினா வைப்பான்.

‘எத்தனை இரவுகள் இங்கு காத்துக்கிடந்தாய்? என்று..

‘மூன்று’ என்று  சொல்.

முதல் நாள் இரவு என்ன சாப்பிட்டாய்?

 எமன் கேட்டால்

நீ ‘உனது வாரிசைதான் சாப்பிட்டேன்’  பதில் சொல்.

இரண்டாம் நாள் இரவு ? என்று எமன் கேட்டால்

’உனது ஆடு மாடுகளை’  பதில் சொல்.

மூன்றாம் நாள் இரவு ? என்று எமன் கேட்டால்

 ’ உனது நற்செயல்களை’

 பதில் சொல்.

நசிகேதஸ் இறந்து எமன் வசம்  போனான். எமன் அவன் இருப்பிடத்தில் இல்லை .மூன்று இரவுகள் உணவின்றி எமன் இருப்பிடத்தில் தங்கியிருந்தான். எமன் திரும்பி வந்தான் ‘ எத்தனை இரவுகள் இங்கு தங்கியிருந்தாய்?’ கேள்வி  கேட்டான்.

‘மூன்று’ நசிகேதஸ் பதில் சொன்னான்.

‘ முதல் நாள் இரவு என்ன சாப்பிட்டாய்?’

‘உனது வாரிசை’

‘இரண்டாம் நாள் இரவு’

‘உனது கால் நடைகளை’

‘மூன்றாம் நாள் இரவு’

‘உனது நற்செயல்களை’

‘உனக்கு எனது மரியாதைகள் பல. தகுதிக்குரியவன் நீ.  உனக்கு என்ன வரம்  நான் தர வேண்டும் சொல்’ என்றான் எமன்  நசிகேதசிடம்.

’ நான் என் தந்தையிடம் திரும்பவும் செல்லவேண்டும்’

‘சரி ஆயிற்று, உனது அடுத்த வரம்’

‘எனது நற்செயல் எப்போதும் அழியக்கூடாது’

எமன்’ நசிகேதஸ் அக்னி ’பற்றி உனக்குச் சொல்லிக்கொடுத்தேன்.’.’உனது நற்செயல்கள்  ஆக அழியாதன’ என்று வரம் தந்தான்.

’மூன்றாம் வரம் என்ன வெண்டும்?’

‘ இறப்பை எப்படி வெல்வது?’ என்றான் நசிகேதஸ்

எமன் அவனுக்கு ’நசிகேதஸ் மகாயாகம்’ பற்றிச் சொல்லிக் கொடுத்தான். நசிகேதஸ் இறப்பை வென்றான்.

அத்யாயம் ஒன்று.

வல்லி ஒன்று.

ஓம்.  மாணவனையும் ஆசிரியரையும் காப்பற்றட்டும்

..முக்தியின் ஆனந்தத்தை

 நாங்களிருவரும் அனுபவிக்க

அவன்  காரணமாகிறான்.

 புனிதச்சுவடிகளின்

மெய்யான கருத்தை

 நாங்கள் முயன்று காணவேண்டும்.

 எங்கள் கல்வி நிறைவு தரட்டும்.

 நாங்கள் இருவரும்

வீண் தர்க்கம்

செய்யாமல் இருப்போம் ஆகுக.

1.       வாஜஸ்ரவா வின் குமாரன் வாஜஸ்ரவாசா,

2.        தனக்கு மோட்சம் கிடைக்க வேண்டி தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்தான்.

3.        அவனுக்கு நசிகேதஸ் என்ற பெயருடைய குமாரன் இருந்தான்.

4.       தனது தந்தை தானமாக அனைத்துப்பொருட்களையும் வழங்கிய போது நசிகேதசுக்கு  தந்தை பாசம் இதயத்தில் செயலாற்றத்தொடங்கியது. அவன் சிறுவன், ஆயினும் அவன் சிந்திக்கலானான்

5.       பசுக்கள் தண்ணீர் அருந்தி புல் தின்று பால் கொடுத்து இன விருத்தி செய்யமுடியாத நிலையில் உள்ள அவைகளை யாகத்தில் தானமாகக் கொடுத்தவர்கள்  மகிழ்ச்சி தராத உலகிற்குத்தான் செல்வார்கள் .

6.       நசிகேதஸ் தனது தந்தையை நோக்கி’ யாருக்கு நீ என்னைத்தானமாய்க்கொடுப்பாய்’ என மூன்றுமுறை வினவினான். சினமடைந்த தந்தை’ உன்னை எமனுக்குக்கொடுப்பேன்’ என்று விடை சொன்னார்.

7.        நசிகேதஸ் ‘எத்தனையோ பேரில் நான் முதலாமவனோ எத்தனையோ பேரில் நான் இடையில் இருப்பேனோ அந்த எமன்  என்னிடம்  எதனை எதிர் பார்ப்பானோ.’ என்று யோசித்தான்.

8.       நமது முன்னோர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படி  இதரர்களும் நடக்கவேண்டும். ஒரு சோளம் மண்ணில் விழுந்து உருவிழந்து ஒரு செடியாக பிறப்பெடுக்கிறது. மனிதர்களும் அப்படித்தான்  நசிகேதஸ் எமனின் வைவஸ்வதா இருப்பிடம் சென்றான்

அங்கு எமன் இல்லை. யாரும் அவனை வா என்று அழைக்கவும் இல்லை

7.’ஒரு அந்தண விருந்தாளி நெருப்பென  வீட்டிற்குள் நுழைகிறான். அவனை சாந்தப்படுத்த வைவஸ்வதனே தண்ணீர் கொண்டுவா’ என்றார் எமன்..

8. நம்பிக்கை,எதிர்பார்ப்பு,

 நல்லோர் சேர்க்கை,

நட்பு பேச்சு,யாகம்,

 புனித தானம்,

 பெற்ற மகன்கள்

 மற்றும் ஆடுமாடுகள்

 அனைத்தும் அழிந்துபோம்

 எப்போது எனில்  

ஒரு அந்தண விருந்தாளி

ஒருவன் வீட்டில் உணவு ஏதுமின்றி

ஓர் இரவு தங்க நேர்ந்துவிட்டால்.

 எமனோ மூன்று இரவு கழித்து வீடு திரும்பியிருக்கிறான்.

9 ‘. ஓ  அந்தணனே மரியாதைக்குரிய விருந்தினனே மூன்றிரவுகள் உண வின்றி என் இருப்பிடத்தில் தங்கிவிட்டீர். நான் உமக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். உம்மை வணங்குகிறேன். எனக்கு நன்மை உண்டாகட்டும்’

என்றார் எமன்.

10. எமா, நான்  என் தந்தையிடம் செல்லவேண்டும் அவர் கோபம் ஏதும் இல்லாமல் என்னை அரவணைத்துச் சாந்தமாக வேண்டும்.அவர் என்னை வாழ்த்த வேண்டும்.

11. ‘ என்னுடைய அருளினால்  அருணனின் குமாரன் ’ஆடலகி’ உன்னை அடையாளம் காண்பான். நிம்மதியாக இரவில் உறங்குவான். நீ இறப்பின் பிடியிலிருந்து விடுபடுதலைக் காண்பாய். அவன் சினம் தணிந்துவிடும்.

12. சொர்க்கத்தில்  எமன்  இல்லை  ஆக அங்கு எம பயமில்லை. வயதானவர்கள் அங்கு அஞ்சுவதுமில்லை. பிரச்சனை ஏதுமில்லாமல் பசியும் தாகமும் தணிந்து ஒருவன் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக  வாழ்கிறான்

13. ஓ இறப்புக்கடவுளே

 நீ சொர்க்கம்  நோக்கி நம்மைச்செலுத்தும்  யாகம்  எப்படிச் செய்வது என்பது அறிவாய். நான் அதனை முழுவதுமாக நம்புகிறேன். அதனை நீ எனக்கு விளக்கமாகச்சொல்லிக் கொடு. இப்பூவுலகில் வாழ்வோர் என்றும்   அழிவிலா ஒரு  நிலையை எய்துகிறார்கள்.இது எப்படி?

 எனது இரண்டாவது வரம்.

14. ’சொக்கம் நோக்கி

இட்டுச்செல்லும் தீ யை

நான் அறிவேன்.

ஓ நசிகேதஸ்

 நான் உனக்கு அதன் விபரம் சொல்வேன்.

 என்னிடம் இருந்து

அதனை நீ  அறியலாம்.

பேரண்டத்திற்கு ஆதாரமானதும்

 நம் இதயத்தின் மய்யமாய்

 வீற்றிருப்பதுவும்

 அந்த அக்கினியே’.

15. அந்த யாகம் பற்றி எமன் விளக்கினார்’.

உலகில் அதன் ஆதார இருப்பாகச், சிலை செய்வதற்கு செங்கற்கள் எப்படி இருக்கவேண்டும்  எண்ணிக்கையில் அவை எத்தனை வேண்டும். எப்படி அவை வைக்கப்படுதல் வேண்டும்’

நசிகேதஸ் தான்  விளங்கிக்கொண்டதை திரும்பவும் சொன்னான். எமன் சந்தோஷமடைந்தார்.

16’.திருப்தி அடைந்த எமன்  இதனையும் வரமாக ப்பெற்றுக்கொள் என்றார். இந்த யாகம் இனி உன் பெயரால் நசிகேதஸ் யாகம் என வழங்கப்படும். இந்த பல வண்ண மாலையை நீ பெற்றுக்கொள்’ என்றார்.

17. யார் யார்  இந்த,   நசிகேதஸ் யாகத்தை  மூன்று முறை செய்கின்றார்களோ  யார் தனது தந்தை தாய் ஆசான் இவர்களோடு இயைந்து வாழ்கிறார்களோ, படிப்பு வேள்வி தருமம்  என்கின்ற மூன்றை யார் தொடர்கின்றார்களோ, இவர்கள் பிறப்பு இறப்பை க்கடந்துவிடுகிறார்கள்.

 இந்த  மேன்மை பொருந்திய ஒளிமிக்க அனைத்தும் அறிந்த  பிரம்மனிடமிருந்து  வெளிப்பட்ட அக்கினியை உணர்ந்தவர்கள்  என்றும் நிலைக்கும் அமைதியைப்பெறுகிறார்கள்.

18. நசிகேதஸ் யாகம்   மூன்றையும்  முறையே அறிந்து அதற்கு சாந்தி அளித்தவர் இறப்பு எனும் விலங்கை விலக்கித்  துன்பம் தொலைத்து சொர்க்கத்தில் இன்பத்தையே அனுபவிக்கிறார்.

19. நசிகேதனே நீ பெற்ற இரண்டாம் வரம் ஒருவனை சொர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் யாகம் பற்றியது. இந்த யாகம் உன் பெயரால் விளங்குவது. நீ மூன்றாம் வரத்தை கேட்கலாம்.

20. நசிகேதஸ் கேட்டான்  “ஒரு அய்யம்  நீங்கள் எனக்குத் தெளிவு படுத்த வேண்டும். மனிதன் இறந்தபிறகு சிலர் அவனுக்கு  ஆன்மா உண்டென்கிறார்கள். சிலர் அவனுக்கு  அது இல்லை என்கிறார்கள்”

21. எமன் விடை சொன்னார். “ இந்த விஷயத்தில்  பழங்காலத்திலிருந்து கடவுளர்க்கே கூட அய்யமுண்டு. இதனை எளிதில் விளங்கிக்கொள்ள முடியாது.   பூடகமானது. இதனை எனக்காக விட்டுவிடு வேறு ஏதும் வரம் கேள்”.

22. நசிகேதஸ் கேட்டான்.

”  எமா நீ யே சொல்கிறாய்

இதனில் கடவுளர்க்கே

 அய்யம் என்று

. அதனை எளிதில்

அறிய முடியாதென்று.

உன்னைப்போல்

 இனி ஒரு ஆசிரியர்

 கிடைக்கவும் மாட்டார்.

நிச்சயமாக இதனைவிட

  வேறுஒர் வரமும்

இருக்கவும் முடியாது.”

23.’மகன், பேரன் என்று பெற்று   நூறு ஆண்டுகள் வாழவேண்டும்,  மந்தையென மாடுகள் யானைகள்,தங்கம், குதிரைகள் என வரம் கேள். உலகில் விரிந்து , பரந்த வசிப்பிடம்   எத்தனை ஆண்டுகள் வாழ்க்கை வேண்டுமோ  அவற்றைக்கேள்.’ என்றார் யமன்.

24.’ இன்னும் இதுபோன்று நிறைந்த  செல்வமும் நெடிய ஆயுளும்  நீ கேட்கலாம்.  பரந்த புவியுலகின் அரசனாக விருப்பமா, நீ விழைவது எல்லாம்  அனுபவிக்க விருப்பமா’  எமன் கேட்டார்.

25.’  இந்த அனித்ய உலகில் எவையெல்லாம் கிட்டாதோ அவைகளைக்கேள்.  ரதம் ஏறி வரும் இசைக்கருவிகளோடு அழகு தேவதைகள் உனக்குப்பணிவிடை செய்யவேண்டுமா. நான்  அளிக்கிறேன். இறப்புக்குப்பின் ஆன்மா என்னவாகும் என்பத மட்டும் விட்டு விடு கேட்காதே.’ எமன் தொடர்ந்தார்.

26.’ எமா  நீ சொல்லும் இவை  எல்லாம் நாளைக்கே அழிந்துபோம்.  நமது  பொறிகளின் உணர்வுகளை எல்லாம்  அவை  நீர்த்துபோகச்செய்துவிடும்.

நீண்ட ஆயுள் என்பதும் மிகச் சிறியதுதான்.தேர் நடனம் இசை இவைகள் உன்னிடமே இருக்கட்டும்.’

27. ’பொருளால் எந்த ஒரு மனிதனும் மகிழ்ச்சி அடைந்துவிடமுடியாது. பொருள்பல பெறலாம் ஆயின்,  நீ விரும்பும்வரை மட்டும்தானே பூவுலகில் ஒருவர்  உயிர்வாழ்தல் சாத்தியம். ஆக எது  நான் கேட்டேனோ அது மட்டுமே அதுவே சரியானது.’

28. அழியாத என்றும் நிலைத்த ஒரு  பெரு விஷயத்தை தெரிந்துகொண்டபின் அழியும் இந்தப் பூவுலக வாழ்வில் நீண்ட ஆயுளோடு அழகும்  காதலும் பெற்றுவிட்டதால் சந்தோஷிப்பானா?

29. எமா,  மனிதனுக்கு எதனில் அய்யம் எழுகிறது? எதற்குப்பின் பெரு விஷயம் அவனுக்கு  சாத்தியமாகும்?

 நசிகேதஸ் ’ஆன்மாவை  அறிதலைத் தவிர்த்து எந்த வரமும் கேட்கவிரும்பவில்லை.’என்றான்.

வல்லி     II

1.எமன் பேசுகிறார்,

’ஒன்று நன்மை தருவது

மற்றது இன்பம் தருவது

வேறுபட்ட இவை

மனிதனைப்  பிணிக்கின்றன.

 இன்பம் விழைந்தவன்

உண்மைப்பொருளைத் தொலைக்கிறான்.

நன்மை விழைந்தவன்

ஆசீர்வதிக்கப்படுகிறான்

. நன்மையும் இன்பமும்

 மனிதனை ஆட்கொள்கின்றன

புத்தியுள்ளவன் ஆராய்கிறான்.

 இரண்டிற்குமுள்ள வேறுபாடு

தெரிந்துகொள்கிறான்

.புத்திமான் நன்மையத்தொடர்கிறான்.

 புத்திகெட்டவன்

  உடல்  இன்பம் தேர்கிறான்.

3. ஓ நசிகேதா  நீ இச்சை தருவிக்கும் பொருட்களை வேண்டாமென்கிறாய்.

இன்பம் கொணர்கின்ற பொருட்களை வேண்டாமென்கிறாய். மெய் எது என  நீ அறிந்துள்ளாய். அழிவு தரும் பொருட்செல்வம் நீ கேட்கவில்லை.

4. பேதமையும் அறிவும்

வேறு பட்டவை.

அவை வெவ்வேறு

இலக்கு நோக்கி இட்டுச்செல்பவை

.எந்த ஆசையாலும்

அசைக்கமுடியாத நசிகேதா

 நீ அறிவுப்பாதை விரும்புகிறாய்.

5.பேதை இருளின்

மய்யமாய் வாழ்பவன்.

தன்னைத்  தெரிந்தவனாய்

 அறிவாளியாய் எண்ணுபவன்.

தவறான வழிகளில்

 சுற்றிச் சுற்றி வருபவன்.

ஒரு குருடன் இன்னொரு குருடனை

  வழி நடத்துவது போல.

6. இதையும் தாண்டி என்ன

 என்பது பற்றிப்

 பேதை அறியான்

பொருளின் மயக்கத்தில் அறிவிலியாய்

 முட்டாளாய்ச் சுழன்று வருவான்.

 இதுதான் உலகம் 

வேறொன்று ஏதென்பான்.

என்னுடைய பிடியின் சுழலில்

மட்டுமே உழலுவான்

7.பலர் காதுகொடுத்துக்

கேட்கமாட்டார்கள்.

 கேட்டாலும் விளங்கிக்

கொள்ளமாட்டார்கள்.

 ஆன்மாவை அறிபவன்  ஆச்சர்யமானவன்.

 அவன்  ஆன்மா பற்றித்

  தகுதி வாய்ந்த ஆசான்  

சொல்லிக்கொடுக்க

ஆன்மாவை விளங்கிக்கொள்பவன்.

8.ஆன்மா பற்றி மந்த புத்தி உள்ளவன் கற்பித்தால் அதனை எளிதில் கிரகித்துக்கொள்ள முடியாது. அதற்கு பல  வழிமுறைகள் தெரிந்தாகவெண்டும்.ஆக  ஒரு ஆசிரியன் பிரம்மத்தை அறிந்து அதுவாகவே ஆகிப்போனவனுக்குக் கற்பித்தலில் சிரமம் இராது. ஆன்மா என்பது நுண்ணியதில்  நுண்ணியது.

  விவாதம் செய்து  ஆன்மஅறிவு கிட்டிவிடாது

9.       விவாதித்துப் பெறப்படுவது

அல்ல  ஆன்ம அறிவு.

 எளிதில்  விளங்கிக்

கொள்வது சாத்தியம்.

 அனைத்தும் ஒன்றெனத்தெளிந்து

 உணர்ந்தே ஆசிரியன்

 கற்பிக்கவேண்டும்.

 நசிகேதனே  நீ

அந்நிலை எட்டியுள்ளாய்.

 மெய் எதுவெனத்தெளிந்துள்ளாய்.

 நின்னைப்போல்

ஒரு விசாரணைக்காரன்

 கிடைக்கவேண்டுமே.

10. செல்வம் நிலையில்லாதது

 நான் அறிவேன்.

 நிலைத்த ஒன்றை

நிலைத்த ஒன்றால்தான் பெறமுடியும்.

ஆகத்தான் நசிகேத அக்னியைத் திருப்படுத்தினேன்.

 அதற்கு நிலயற்ற

 பொருட்களை க்கொடுத்து

 நிலைத்த ஒன்றினைப் பெற்றிருக்கிறேன்.

11எல்லா விருப்பங்களின் முடிவு,

 இப்பூவுலகின் ஆதாரம்

,.முடிவில்லாத் தியாகங்களின் வெகுமதி ,

அச்சமேயில்லாத அடுத்த கரை ,

மதிப்பு மிக்கது, மகத்தானது,

 அனைத்து ஆன்மாக்களையும் தாங்கும்

விரிந்த உலகு  இது.

 இவை அனைத்தும் பார்த்த  நசிகேதனே  நீ 

எல்லாவற்றையும்

 உறுதியுடன் நிராகரிக்கிறாய்.

12.கற்றறிந்த ஞானி

 தன்னுள்ளே  தவம் செய்து

 காணக்கிடைக்காத ஆதியைக் காண்கிறான்.

அதனை ஆழம்காணமுடியாது

மறைந்திருக்கும் ஒன்று அது ,

இதயத்தில் குகைஎன்னும் பள்ளத்தில்

பொதிந்து கிடப்பது

 புத்தியில் உறைந்து கிடப்பது

 இன்பம் துன்பம்

இரண்டும் அறியாதது அது.

13.  ஆன்மா குறித்து காதால் கேட்டு,

அதனை  பூரணமாய் உள்வாங்கி,

 புனித ஆன்மாவை

 நிலையற்றவைகள் தடுப்பதை உணர்ந்து,

 மறைந்திருக்கும் ஆன்மாவைத்  தெரிந்து

மகிழ்ச்சி பாவிக்கிறான்

ஏனெனில் அவன் மகிழ்ச்சிக்கான

காரணத்தை மூலத்தைத்

 தெரிந்துகொண்டவன்.

 பிரம்மத்தின் இருப்பிடம்

நசிகேதனுக்கு அகலத்திறந்து கிடக்கிறது

 என்பது என் எண்ணம்..

14 கேட்கிறான் நசிகேதன்.

‘ தர்மம் அதர்மம்

 இவை இரண்டையும் தவிர்த்து

இறந்தகாலம் எதிர் காலம்

 இவை இரண்டையும்  தவிர்த்து

நீ  எதனைக் காண்கிறாய்

 அதனை எனக்குச்சொல்’

15.எமன் விடை சொல்கிறார்.

வேதங்களின் முடிவு,

எல்லா தவங்களின் உறுதிப்பொருள்,

பிரம்மச்சரிய வாழ்க்கை

வாழ்வதன் நோக்கம்

அனைத்தும் சுருக்கமாய்ச்சொன்னால்

ஒரு வார்த்தையில்

 அது ’ஓம்’ என்பதே.

16. இந்தச் சொல் ஓம்

 பிரம்மம்.

 அதுவே மகத்தானது

, இதை விளங்கிக்கொண்டவன்

 விரும்பியது பெறுகிறான்.

17. இதுவே மிகச்சிறந்த துணை,

 இதுவே உச்சபட்ச துணை

, இதனை அறிந்தவனை

 பிரம்மலோகத்தில் ஆராதிக்கிரார்கள்.

18. அறிவே ஆன ஆன்மா

 பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை.

எதனின்றும்

அது முளைப்பதுமில்லை.

 அதிலிருந்தும் எதுவும் முளைப்பதில்லை.

 பிறப்பில்லாதது,என்றுமிருப்பது,

ஆதியானது.

 உடல் கொல்லப்படலாம்

ஆன்மா கொல்லப்படாதது.

19. கொல்கிறேன் என்பதுவும்

கொல்லப்படுகிறேன் என்பதுவும்

 அறியாதவன் பேசுவது.

 கொல்வதுமில்லை கொல்லப்படுவதுமில்லை.

20.ஆன்மா சூக்குமத்தின் சூக்குமம்,

பெரிதினும் பெரிது

 இதயத்தில் வாசம் செய்வது

 மன உணர்வுறுப்புக்கள்

கட்டுப்படுத்தியவன் ஆன்மாவைக்காண்பான்.

 அவனுக்குத்துயர் இல்லை.

21.அவன் இங்கு அமர்ந்திருப்பான்

தூரம் போவான்,

அவன் எங்கும் செல்லவல்லவன்.

அவனைத்தவிர

பிறகு  இன்ப துன்பம் தொடாத

 இறையை யார் அறிவார்

22.ஆன்மாவுக்கு உடலில்லை

ஆயின் அழியும் உடலில் அது உறையும்

மகத்தானது ,எங்குமிருப்பது

 இது அறிந்த ஞானியோ

 துயர் உறுவதில்லை.

23.இவ்வான்ம அறிவை

  வேதங்களைப்படித்தோ,

புத்தி கூர்மையாலோ,

 சத் விஷயங்கள் கேட்பதாலோ பெறமுடியாது

அவன் ஆன்மாவே

அவனைத்தேர்ந்துகொண்டு

ஆன்மாவை அறிதலின்

 மெய்மையை அறிவிக்கும்.

24. தீயவைகளிலிருந்து மீளாதவர்கள்

, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதவர்கள், 

மன ஒருமைப்பாடு எட்டாதவர்கள்

மனத்தை நல்வழிப்படுத்தாதவர்கள்.

 படித்தலின் வழி

 ஆன்மாவை அறிதல் முடியாது.

25. பிராம்ண, க்‌ஷத்ரிய என்னும்

 வர்ணபேதங்கள்  உண்ணும் சோறு என்பதாய்

 மானுட மரணம் என்பதைத்

 தொட்டுக்கொள்ளும்

 ஊறுகாய் என்பதாய்ப்

 பேசியே போது கழிக்கும்

தகுதியற்றவர்கள்

 ஆன்மாவை எப்படி  அறிவார்கள்?

வல்லி  III

1.பரமாத்மாவும் ஜீவாத்மாவும்  நல்வினைகளினபலனைஅனுபவிக்கின்றனர் உயர்இருக்கையில் அமர்ந்த உன்னதமான அந்த பிரம்மத்தைஅறிந்தவர் அவைகளை ஒளி மற்றும் நிழல் என்றழைக்கிறார். இல்லறம் நடத்தி ஐந்து முறை  அக்னி காப்போரும், மூன்றுமுறை நசிகேத யாகம் செய்வோரும் அவ்விதமே செய்வர்.

2.இரு யாகங்களையும் நாம் அறிவோம். நசிகேத யாகம் அனைத்து யாகங்களையும் இணைப்பது. உன்னதமானது. அழிக்கமுடியாத பிரம்மம். அது அச்சமில்லாதது பிறவிக்கடலை க்கடக்க விரும்புவோர்க்கு உறுதுணையாவதாகும்.

3. ஆத்மா  தேரில்  அமர்  பெரும்பொருள்

, உடல் தேர்

,புத்தி தான் தேரோட்டி,

 மனமே கடிவாளம் ,

4.ஐம்புலன்கள் குதிரைகள்,

  சாலை அவைகளின் நோக்கம்,

 , ஐம்புலன்களோடு, மனம் ஒன்றாய்க்கூட

  ஆன்மாவே அனுபவிக்கின்றோன் ஆகிறான்

 அறிஞர்கள் அப்படிச்சொல்வர்.

5. பகுத்து அறியாதவன்,

 மனம் எப்போதும் கட்டுப்படாதவன்,

 ஐம்புலன்கள் எனும்  தீய எண்ணங்கொண்ட

குதிரைகளை அடக்காத

 குதிரை ஓட்டியாவான்.

6.விஷயங்கள் புரிந்தவன்,மனத்தை அடக்கியவன், அவனது ஐம்புலன்கள் ஒரு குதிரை ஓட்டிக்கு நல்ல புரவிகளாகின்றன.

7.பகுத்து அறியாதவன்

,மனமடங்காதவன்,

 தூய்மையில்லாதவன்,

 இலக்கை அடையமாட்டான்.

 பிறப்பு இறப்பு எனும் சுழலில்

 அகப்பட்டுக்கொள்வான்.

8. யாருக்கு விஷயங்கள் விளங்குகிறதோ,

 மனம் கட்டுப்படுகிறதோ

  யார் தூய்மையானவனோ, 

அவன் இலக்கை அடைகிறான்.

அவன் மீண்டும் பிறப்பதில்லை.

9.பகுத்தறியும் அறிவுடையோன்,

 மனக்கடிவாளத்தை நன்கு  வசமாக்கியவன்

 பயணத்தின் இலக்கை

ஒரு நல்ல சவாரிக்கரனாய் அடைந்துவிடுவான்

அவ்விலக்கு திருமாலின் உறைவிடம்.

10.ஐம்புலன்களினும் 

விஞ்சியவை பஞ்ச பூதங்கள்,

அவைகளை விஞ்சியது மனம்,

 மனத்தை விஞ்சியது புத்தி

 புத்தியை விஞ்சியது ஆன்மா.

11. காணும் பிரபஞ்சத்தை விஞ்சியது

 காணாப் பெருவெளி,

 அதனையும் விஞ்சியது ஆன்மா

அதனைத்தாண்டி எதுவுமில்லை.

 அதுவே உன்னத இலக்கு.

12. எல்லா ப்பொருளிலும்

 ஆன்மா மறைந்து உறைகிறது

.ஒளிர்வதில்லை

.கூரிய ஆழ்ந்த ஞானவான்கள்

அமைதியாய் அதனைத் தரிசிக்கிறார்கள்.

13.அறிஞன் பேச்சை

 மனத்தில் ஆழ்த்தி,

 மனத்தை புத்தியில் ஆழ்த்தி,

 புத்தியை பரமாத்மாவில் செலுத்தி,

அந்த பரமாத்மனை

 அமைதியில் ஆழ்த்துவான்.

14.எழு, விழி,பேராசான் சமீபம் ,

 ஆன்மாவை அறிவாய்

.கடினமான வழிதான்

 கூரிய கத்தி போன்றவழிதான்.

அறிஞர்கள் மொழிவார்களப்படி.

15. அது ஒலி இல்லாதது

,உணரமுடியாதது,

 உருவமில்லாதது,

 அழியாதது,ருசியில்லாதது

, எப்போதுமிருப்பது, மணமற்றது,

ஆரம்பமில்லாது, முடிவில்லாது, பெரிதினும் பெரிது,

 மாறாதது,

இப்படி ஆன்மாவை அறிந்தவன்

 இறப்பின் பிடியிலிருந்து  விடுதலை எய்துகிறான்.

16  எமன் சொன்ன நசிகேதனின் கதையைக்கேட்பவர்கள் சொன்னவர்கள் பிரம்மலோகத்தில் சிறப்பு அடைகிறார்கள்.

17. பிராம்ணர்கள் சபையிலே, முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்ற போதினிலே பக்தியோடு இந்த ரகசியத்தைதை ச்சொன்னவர்கள் இறவா நிலைஅடைவர். இறவா நிலை அடைவர்.

பகுதி 2

வல்லி 4.

 1.எமன் கூறினார்.

 ‘தானாக உருவான பிரம்மா

  மனிதனுக்கு  ஐம்புலன்களை

வெளி  நாட்டமுள்ளவைகளாகவே படைத்தார்.

ஆக மனிதன் வெளி உலகை மட்டுமே காண்கிறான்.

 உள்ளிருக்கும் ஆன்மாவைக்காண்பதில்லை.

சில மனிதர்களே

 தமது கண்களால் உணர்வுகளை

வசீகரிக்கும் விஷயங்களைத்தவிர்த்து

  நிலைத்த   ஒன்றை விரும்பித்

 தன் உள்ளே  கடந்து

பொதிந்திருக்கும்

ஆன்மாவைக்காண்கிறார்கள்’

2.அறிவிலி  தான் ஆசைப்பட்ட

வெளிப்பொருட்களின் பின்னே ஓடி

இறப்பெனும் வலையில் வீழ்கிறான்

 அறிவாளியோ அழியா

 ஒன்றின் தன்மை  தெரிந்து

 அழியும் பொருட்களை விரும்பமாட்டான்.

3.உருவை , சுவையை ,

மணத்தை, ,ஒலியை,

 உணர்ச்சியை மகிழ்ச்சியை

 எது ஒன்று பற்றியும் அறிவது

ஒருவன் அறிவது ஆன்மாவினாலியே

 நீ  கேட்பது அது பற்றியே.

4. விழிப்போ உறக்கமோ

  அனைத்தையும் அறிவது

 எங்கும் நிறைந்துள்ள

ஆன்மா ஒன்றினாலேதான்.

 அப்படி அறிபவன் துயர் உருவதில்லை.

5.ஆன்மாவை தேனினும் இனியதாய்,

 இதயமாய்க்

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்

 கடவுளாய்க்காண்பவன் அச்சப்படுவதில்லை.

அதுவே இது.

10.   ஐம்பூதங்களில்

அவன் உறைந்திருப்பதைக்காண்பவன்

தவங்களின் பயனாய்ப்பிறந்தவன்.

 தண்ணீர் தோன்றியதற்கு

 முன்பாகத்தோன்றிய அது.

 இதயக்குகையில் எழுந்தருளி

 வசிப்பது  அது.

7 உயிரோடு பிறக்கும் ஆன்மா

 அனைத்து கடவுளர்களின் உருவிலும்,

இதயத்திள்லும் நுழைந்து

அங்கே  வதிகிறது.

அது பஞ்ச பூதங்களோடும் தோற்றுவது.

8.கருவை ப்பாதுகாப்பய்ச் சுமக்கும்  ஒரு பெண் ஒப்ப

 இரு கட்டைகளுக்கிடை

அக்கினியை வைத்துத்

 தினமும் விழிப்புப்

பெற்றவர் வழிபடுகின்றனர்

ஆராதிக்கின்றனர்.இதுவே அது.

11.   சூரியன் எங்கிருந்து எழுகிறான்

எதற்கு மறைகிறான்.

 அனைத்து கடவுளர்களும் அது ஒப்பவே.

அதனை விஞ்சி எதுவுமில்லை. இதுவே அது.

12.   இங்குளதே அங்கும் உளது.

அங்குளது இங்கும்.

ஒரு  இறப்பினின்று

 அடுத்த இறப்பைத் தொடரும் அவன்

ஆன்மாவுக்கும்  இந்த உலகிற்குமான

  வேறுபாடு அறிந்தவன்.

11.மனத்தினாலே

ஆன்மா அடையப்பெறுவது.

பிறகு  அவைகட்கு இடையே

 வேறுபாடென்பது எதுவுமில்லை.

வேறுபாடு அறிபவனோ 

 ஒரு இறப்பினின்று

 அடுத்த இறப்புக்கு ப்பயணிக்கிறான்

.

12.கட்டை விரல் ஒத்த ஆன்மா

 உடலின் நடுவில் உறைவது.

அது  கடந்தகாலம் எதிர்காலம் அறிந்தது.

இது அறிந்தவன் அஞ்சுவதில்லை.

இதுவே அது.

13.கட்டைவிரல் ஒத்த ஆன்மா

 புகை தரா ஒளி.

கடந்தகாலம் வருங்காலம் அறிந்த கடவுள்.

இன்றும் நாளையும்

இருப்பது அதுவே

.இதுவே அது.

14. மலையினின்று வீழும் மழை நீர்

  பாறைகளின் மீது விழுந்து

 அனைத்து திசைகளிலும் சிதறும்.

அப்படி

வேறுபாடு மட்டுமே அறிபவன்

 அனைத்து பக்கங்களிலும் சிதறித்திரிகிறான்.

15. சுத்தமான நீர் 

சுத்தமான நீரோடு சேர்ந்து

 சுத்தமான நீராகவே முடிகிறது.

இப்படி  நினைப்பவரின் ஆன்மா

இதனையே அறிகிறது   அதுவே  கவுதமனாகிறது.

வல்லி 5.

1.       நிலைத்த ஞானமுள்ள ஆன்மா பதினோரு வாயில் கொண்ட  மாநகரத்தை உடலை ஆள்வது. அவ்வான்மாவை வணங்குபவன் துயருறமாட்டான். அனைத்துப் பேதமைகள் என்னும் தளைகளிருந்தும் அவன் விடுதலை பெறுவான்.இதுவே அது.

2.       சூரியன் மேலுலகில்

, காற்று ஆகாயத்தில்,

 அக்கினி பூவுலகில், 

 ,விருந்தினர்கள்  இல்லத்தில்,

 மனிதர்கள் வீடுகளில்,

 கடவுளர்கள் மெய்யாக

  அண்டவெளியில்

  எங்கனம் இருப்பார்களோ

 அவ்விதமாய் இவ்வான்மா..

 ஆன்மா நீருக்குள்

,பூமியில், வேள்வியில் ,மலைகளில் பிறக்கிறது.

 ஆன்மா அவன் மெய்யானவன்

,ஆகப்பெரியவன்.

3.       ஆன்மா தேவர்களால்

வணங்கப்பெற்று

 உடலில் மய்யமாய் அமர்ந்து

 பிராணனை மேலாகவும்

  அபானனை கீழாகவும் செலுத்துகிறது.

4.       ஆன்மா உடலில் வசிக்கிறது. பின் விடைபெருகிறது. எஞ்சுவது எதுவுமில்லை. இதுவே அது.

5.       மனிதர்கள் பிராண அபானன்களால் உயிர்வாழ்வதில்லை. இவை எதனைச் சார்ந்து இயங்குகிறதோ அதனால் மனிதன் வாழ்கிறான்.

6.       கவுதமனே, நான் புரியாத ஒன்றான புராதன பிரம்மம் பற்றி மரணத்திற்குப்பிறகு ஆன்மாவுக்கு என்ன நேரிடுகிறது என்பது பற்றி விளக்குகிறேன்.

7 சில ஜீவர்கள் அன்னை வயிற்றில்

 நுழைந்து உடல் எடுப்பார்கள்.

 சிலர்  நிற்கும் அனங்ககப்பொருட்களில்

 அடங்கிப்போவார்கள்.

 ஒருவற்கு கருமம் ஞானம் இவை

அதற்கு ஆதாரமாக நிற்பவை.

8 ஆன்மா விழித்திருப்பது

 எது உறங்கினும் அது உறங்காது.

அது பிரம்மன் எனப்படுவது

 என்றுமுளது

எல்லா உலகங்களும்

அதன்மீது எழுபவை.

அதனை விஞ்சி

யாரும் செல்ல முடியாது.

இதுவே அது.

9 அக்கினி போன்றது ஆன்மா.

 எதனுள்ளும் நுழைந்து

 அதன் உருவம் பெறும். 

அதனை எரிக்கும். 

ஆன்மா  எதன்

 உருவும் எடுக்கும்.

அதன் உள்ளும் புறமும் வதியும்.

10  ஆன்மா வாயுவைப்போன்றதே.

எதனுள் அது  நுழைகிறதோ

அதன் உரு எடுக்கும்.

அதன் உள்ளும்

புறமும் அதுவாகவே.

11  ஆன்மா சூரியன் ஒத்தது.

 உலகத்தின் கண் போன்றது.

 எந்தக் குறை யும்

அழுக்கும் இல்லாதது.

 உலகின்கண் உள்ள குறைகள்

எதுவும் தொடமுடியாதது.

12   உயிரினங்களின் ஆட்சியாளன் அது.

 உலகின்  குறைகள்

எதுவும் அணுகமுடியாதது.

 அனைத்திற்கும் அப்பாலாய் வதிவது..

13   ஆன்மாவை என்றுமுளதாகப்

 பார்க்கும் ஞானி

உணர்வுகளின் உணர்வாகத்தானே

அதனை உணருவான்

.அவரவர்கள் விருப்பத்தை

 அவரவர்களுக்குள்ளாய் அமர்ந்து

பூர்த்திசெய்பவனாய்

ஆன்மாவைப்பார்க்கும்.

 ஞானிகளுக்கே நிரந்தரமாய்

 கிட்டும்  அமைதி

 மற்றவர்களுக்கு அன்று.

14   அவர்களே விளக்கமுடியாத

 ஆனந்தமாகிய இதுவே அது

 என்பதனைப் பெறுவார்கள்

. எப்படி அறிவது இதை?

அது தானே ஒளிருமா? இல்லை

 வேறு ஒளி அதன்மீது விழ ஒளிருமா?

15.அங்கு சூரியன் பிரகாசிப்பதில்லை

, நிலவும் பிரகாசிப்பதில்லை,

 விண்மீன்கள், மின்னலொளி

,இவ்வக்கினி, பிரகாசிப்பதில்லை

.ஆன்மா ஒளிர அனைத்தும் ஒளிர்கின்றன

. ஆன்ம ஜோதியால் எல்லாம் ஒளிர்கின்றன.

வல்லி 6.

எமன் கூறுகிறார்;

1.பழைய அரசமரம் இருக்கிறது.

அதன்  வேர்கள் மேலேயும்

,கிளைகள் கீழேயும் படர்ந்துள்ளன.

அது தூய்மையானது.அது பிரம்மன்.

 அது என்றுமுளது.

அத்தனை உலகங்களும்

 அதனை ஆதாரமாகக்கொண்டுள்ளன.

இதுவே அது.

2.இப்பேரண்டமே

பிரம்மனிலிருந்து உருவானது.

பிராணத்தில் இயங்குவது.

 இடியோசை எழுப்பும்

பேரச்சம் தரும் பிரம்மன் அது.

இது அறிந்தவர்கள் அழிவதில்லை.

3பிரம்மனுக்கு அஞ்சி

நெருப்பு தகிக்கிறது.

கதிரவன் ஒளிர்கிறான்.

இந்திரன் வாயு  எமன்

எனப் பணியாற்றுகின்றனர்.

4.இவ்வுடல் முடிந்துபோவதற்குள்ளாகப்

பிரம்மத்தை அறியவே முற்படுவாய்.

 முற்படும்அவன் மட்டுமே

 உலகத் தளைகளிருந்து

விடுதலை அடைவான்.

அப்படி அறியாதவன்

 மீண்டும்  இவ்வுலகில் பிறப்பெடுப்பான்.

5.கண்ணாடியில் பார்ப்பதுபோல்

 தனது ஆன்மா,

கனவு காண்பதுபோல்

 பித்ருக்களின் உலகு,

தண்ணீருக்குள் இருப்பதுபோல்

கந்தர்வர்களின் உலகம்,

நிழலும் ஒளியும் போல்

பிரம்மனின் உலகு.

6.ஐம்புலன் உணர்வுகளும்

ஆன்மாவும் வேறு வேறு.

அவை எழுவதும் வீழ்வதும் அப்படியே.

விவேகி இதனை அறிந்தவன்.

7.உணர்வுகளுக்கு அப்பால் மனம்,

 மனத்திற்கு அப்பால் புத்தி

,புத்தியினும் உயர்ந்தது பேரான்மா.

 புலப்படா ஒன்று. எல்லாவற்றினும் பெரிது.

8.புலப்படா ஒன்றைத்தாண்டியது

 எங்கும்  நிறைபுருஷம்.

உருவற்றது.

 இது அறிந்தவன் விடுதலை அடைகிறான்.

இறவா நிலை எய்துகிறான்.

9.அவன் உருவைக்காணமுடியாது.

இந்தக்கண்களால் பார்க்கமுடியாது

.மனதை புத்தியினால்கட்டுப்படுத்தி,

தொடர்ந்த தியானத்தால்

அது காட்சியாகலாம்

.இப்படி அறிந்தவர்கள் அழிவதில்லை.

10.ஐம்புலன்களும் அடங்கி,

மனம் அடங்கி,

 புத்தி அமைதியுற

 ஒருவற்கு பெரு நிலை வசமாகும்.

11.ஐம்புலன்கள் வசமாவது  யோகம்.

 யோகத்தில் கவனமாய் இரு

 சாதிப்பாய்  நீ

பெற்றது போகாமலிருக்கும்.

12.ஆன்மாவை பேச்சினால்

 மனத்தினால்,கண்களால்

நெருங்கிவிடமுடியாது.

ஆன்மா  இருப்பதை எப்படி உணர்வது?

13 ஆன்ம இருப்பு வெளிப்படுவது.

 ஆன்மா மெய்யாகவே இருப்பது..

இந்த இரண்டு நிலைகளில் 

அதன் இருப்பு வெளிப்பட

 உண்மைத் தன்மை காட்சியாகும்.

14 மனதிலுள்ள ஆசைகள் அற

 அழி நிலையிலிருந்து  ஒருவன்

அழியா நிலைக்குச்சென்று

 பிரம்மத்தை அடைவான்.

15.இவ்வுலகின் அறியாமை எனும் 

பந்தங்கள் அறுபட

 அழி நிலையிலிருந்து 

அழியா நிலையை  அடைவான்

.இதுவே வேதங்களின் அறிவுரை.

16.இதயத்தில் 101 நரம்புகள்  உள்ளன.சுஷும்னா எனும் நரம்பு மண்டைக்குள் செல்கிறது. மேல் எழும் அது இறக்கும் தருணத்தில்  ஒருவனை   அழியா நிலைக்கு கொண்டு சேர்க்கிறது.  பிற நரம்புகள் வேறு பணி செய்கின்றன.

17. ஆன்மா கட்டைவிரல் போன்று உள்ளே இதய மத்தியில் எல்லா உயிர்களிலும் இருப்பது. ஒரு செடியின் தண்டிலிருந்து அதன் உள்ளிருப்பை இழுப்பதுபோல் ஒருவன் உடலில் இருந்து அதனை ச்சரியாக வெளியே கொண்டுவரவேண்டும்.அது தூய்மையானது அழியாத ஒன்று என்று அறிதல் வேண்டும்..

18.       நசிகேதன் இவண்

 எமன் சொல்லச்சொல்ல 

இவைகளை த்

தெரிந்துகொண்டான்

 யோகத்தை அறிந்தான்

.அனைத்து அழுக்குகளிலிருந்தும்

இறப்பினின்றும் விடுபட்டு

 பிரம்மத்தை அடைந்தான்

.ஆன்மாவைப்பற்றித்

தெரிந்துகொள்பவர்கள்

அனைவர்க்கும் இப்படியே.

·         <