வி பி என் அடுக்ககம்/பி.ஆர்.கிரிஜா

     விழுப்புரம் பிரகாசநாதன் அவர்களைத் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரிலேயே நிறைய தான தர்மங்கள் செய்யும் கொடை வள்ளல். தொழிலதிபர். மனிதநேயம் மிக்கவர். அவர் பெயரில் நிறைய தொண்டு நிறுவனங்களும் உண்டு. வி பி என் என்றால் விழுப்புரத்தை தாண்டி தமிழகம் முழுவதும் அறியக்கூடிய ஒரு பெயர் அவர் மேல் உள்ள. அபிமானத்தால் சென்னையில் எங்கள் வீட்டு அருகில் ஒரு அடுக்ககத்திற்கு அவர் பெயரையே வைத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா உங்களால் ? எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாகப் படவில்லை.

      இந்த அடுக்ககத்தில் தான் என்னுடைய உயிர்த் தோழி பாக்யலட்சுமி குடி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 28 வருடங்களாக எனக்கு ஒரு நல்ல தோழியாகவும், ஆசானாகவும், சகோதரியாகவும் இருப்பவர். அவர் இருப்பதாலேயே எனக்கு இந்த வி பி என் ஃப்ளாட் மிகவும் அழகாகப்பட்டது. நல்ல மனம் படைத்தவர்கள் இருந்தால் அந்த இடமே அழகாக காட்சியளிப்பதில் வியப்பென்ன ? நானும் இந்த அடுக்ககத்தின் அருகிலேயே குடியிருப்பதால் அடிக்கடி சென்று அவரைப் பார்ப்பேன்.

   அவருக்கு ஃபோன் செய்தேன். “கல்யாணி, உன்னப் பத்தி தான் நினைச்சேன்…. உன்ன பார்த்து ஒரு மாசம் ஆச்சு… ரொம்ப பிசியா இருக்க போல… என்று கேட்டார். என்னுடைய உயிர்த் தோழியாக இருந்தாலும் என்னைவிட வயதில் மூத்தவராததால் அவரை மேடம் என்று அழைத்து பழகி விட்டேன். நீங்கள் கூட சிரிக்கலாம் தோழியை யாராவது மேடம் என்று அழைப்பார்களா ? என்று. எனக்கு எப்படி அவர் தோழியானார் ? என்னுடைய பாஸாக இருந்தவர் ஆயிற்றே ? அவரிடமிருந்து நான் பணியில் இருக்கும்போது எவ்வளவு நல்ல விஷயங்களை கற்றிருக்கி றேன்… இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எங்கள் நட்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. பாக்கியலட்சுமி நட்பை நான் பாக்கியமாகவே கருதுகிறேன்.

   ஒருநாள் மாலை வழக்கம் போல வி பி என் ஃப்ளாட்டிற்குள் நுழைந்தேன். வாசலில் புதிதாக ஒரு ஸ்கூட்டர். இத்தனை வருடங்கள் தனியாக வசிக்கும் பாக்கியலட்சுமி வீட்டில் ஒரு 40 வயது ஆண்மகன். மேடத்தின் அண்ணன் பையன் கார்த்திகேயன். “ஹலோ கார்த்தி… எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து… அத்தை ஞாபகம் இப்பதான் வந்ததா ? என சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். 

   “வாங்க கல்யாணி அக்கா உங்களப் பத்திதான் பேசிட்டு இருந்தோம்… ரொம்ப பிசி எழுத்தாளராக  இருக்கீங்க போல” ….என்றான் கார்த்தி சிரித்துக் கொண்டே. 

    “அதெல்லாம் ஒன்னும் இல்ல கார்த்தி… ஏதோ பொழுது போக வேண்டும் அல்லவா… அதான் ஏதோ மனசுல தோன்றத எழுதிக்கிட்டு இருக்கேன்….

    நல்லதுதான்…. எழுத ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது….ஏன், இப்ப எங்க ஃப்ளாட்டையே எடுத்துக்கிட்டா….சந்திரமௌலின்னு ஒரு பிரபல எழுத்தாளர் இருக்கிறார்….சதா சர்வ காலமும் புத்தகமும், கையுமாக இருப்பார்… அவரைப் பார்த்து பேசுவதே கஷ்டம் என்றான் கார்த்தி. 

   ஆம்… எனக்கும் அவரைத் தெரியும் கார்த்தி…. உங்க அத்தை தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினாங்க. ஒரு நல்ல இனிமையான நண்பர் என்றேன் சிரித்துக் கொண்டே.

  “அதானே பார்த்தேன்… அத்தைக்கு எல்லா வயதிலும் தோழிகளும் தோழர்களும் உண்டு. எனக்குப் பொறாமையா இருக்கு என்றான் கார்த்தி.

    பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென்று வாசலில் ஒரு பெரிய இன்னவா கார் வந்து நின்றது. ஏதோ ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த கரை வேட்டி கட்டிய நான்கு பேர்கள் தடதடவென்று இறங்கி வி பி என் அப்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தனர். கீழ் வீட்டில் நாங்கள் மூவரும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது சடார் என்று எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி உள்ளே நுழைந்தனர். ஒரு நிமிடம் நாங்கள் பயந்துவிட்டோம்.

   . அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த நால்வரில் ஒரு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் சட்டென்று பாக்கியலட்சுமி மேடம் காலில் விழுந்தார். “என்ன தெரியலையா மேடம்…நான்தான் தாம்பரத்தில உங்ககிட்ட படிச்ச கதிரேசன்….இப்ப கட்சியில பெரிய பதவியில இருக்கேன்…உங்கள இத்தன வருஷமா தேடிக்கிட்டு இருந்தேன்….உங்ககிட்ட படிச்சதனாலதான் நான் இன்னும் இந்த கட்சியில இருந்து நேர்மையா செயல்பட முடியுது….உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல”….என்று நா தழுதழுக்க கூறிக் கொண்டே மேடத்திற்கு ஒரு சால்வையைப் போர்த்தி ஒரு பெரிய பரிசுப் பொருளை கையில் கொடுத்தார். அவர் மிகவும் பிரபலமான புள்ளி ஆதலால், தெருவே வி. பி. என் அடுக்ககம் முன் கூடி விட்டது. கூட வந்த இரு புகைப்படக்காரர்கள் பளிச் பளிச்சென புகைப்படங்களை எடுத்துத் தள்ளினர். எனக்கு பெருமை பிடிபடவில்லை. அடுத்த நாள் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வருமே, நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. பெருமையுடன் மேடத்தின் கையைப் பிடித்துக் கொண்டு ஃபோட்டோக்கு போஸ் கொடுத்தேன் கார்த்திகேயனும் சிரித்துக் கொண்டே என் அத்தை என்று மேடத்தை அன்புடன் அணைத்துக் கொண்டு போஸ் கொடுத்தான்.  

      வி பி என் அடுக்ககம் என் கண்ணுக்கு மேலும் அழகாகக் காட்சியளித்தது.

       *********************************************************************************