கல்யாண வேளை/பி.ஆர்.கிரிஜா

     விவேக்கும், திவ்யாவும் ஒரே ஆஃபீசில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை பார்க்கிறார்கள். முதலில் நண்பர்களாக இருந்தவர்கள் கடந்த ஆறு மாதங்களாக காதலர்களாக மாறி விட்டனர். வேறொன்றுமில்லை. இருவருக்குமே ஓவியம், விளையாட்டு இரண்டிலுமே ஆர்வம் அதிகம். மணிக்கணக்காக அதைப்பற்றி பேசி பரவசம் அடைவார்கள். மேலும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

    திவ்யா தன் பெற்றோருக்கு ஒரே பெண். எதையும் அப்பாவிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வாள். இந்த விவேக்கின் காதல் விவகாரத்தை முதலில் அப்பாவிடம்தான் தெரிவித்தாள். அவர் அவனைப் பற்றி விசாரிக்க கிளம்பிய போதுதான் தெரிந்தது, அவன் தன் பள்ளி நண்பன் சிவராமனின் மகன் என்று. ஒரே சந்தோஷம். உடனே தன் பெண்ணுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். போனிலும், வாட்ஸ் அப்பிலும் தொடர்பு கொண்டு இருவருக்கும் சீக்கிரம் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவெடுத்தனர். 

     ஒரு நாள் வழக்கம் போல மாலை விவேக்கும் திவ்யாவும் பீச் மணலில் உட்கார்ந்து பேசும்போது திவ்யா தான் பேச்சை ஆரம்பித்தாள். “கேட்டா நீ சிரிக்கக் கூடாது விவேக் சரியா ?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள். ஆவல் அதிகமாக “சீக்கிரம் சொல்லு திவ்யா” என்றான் விவேக். “இல்ல விவேக்…. நீ இந்த சினிமா, டிராமா  இதில் எல்லாம் வருமே…. அது மாதிரி என்ன பொண்ணு பார்க்க வருவியாம்…. நானும் நாணிக் கோணி பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு, தலை நிறைய பூ வச்சுக்கிட்டு, உன்ன ஓரக் கண்ணால பார்ப்பேனாம். நீயும் மிடுக்காக நல்ல பேண்ட் ஷர்ட் இன் பண்ணி போட்டுக்கிட்டு  பந்தா பண்ணுவியாம். நான் சிரித்தபடியே உனக்கு சொஜ்ஜி, பஜ்ஜி, காஃபி கொடுப்பேனாம். நீயும், பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குன்னு சொல்லுவியாம்….. இதை செய்வியா?” என்றாள் திவ்யா.

    “இந்த மீண்டும் கோகிலா படத்துல வருமே கமல் ஸ்ரீதேவிய பொண்ணு  பார்க்க வர மாதிரி…. அந்த மாதிரியா ? எந்த குழந்தையும் என் பேண்ட்டுல ஒன்னுக்கு அடிக்காம இருந்தா சரி…. என்று சத்தமாக சிரித்தான் விவேக். பீச்சில் அருகில் இருந்தவர்கள் நின்று திரும்பிப் பார்த்து கையசைத்து விட்டுப் போனார்கள்.

   “ஏன் விவேக் இந்த அல்ப ஆசைய நீ நிறைவேத்துவதானே ? என்று மீண்டும் சிரித்தாள் திவ்யா. விவேக் அவள் கையைப் பிடித்து விளையாட்டாகக் கிள்ளினான். அந்தக் கற்பனையிலேயே அவன் கையில் முகம் புதைத்தாள் திவ்யா.

    கடல் அலையும் இவர்களைப் பார்த்து வெட்கமடைந்து பின்னோக்கிச் சென்றது.

    ***************************************************************************************