5 வது கதை

அழகியசிங்கரை vpn அடுக்ககத்தில் தினமும் காலை நேரத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 9 மணியிலிருந்து 10.30 மணி வரை இருப்பார்.
அவருடைய நெடுநாள் கனவு அவருடைய இடத்தை ஒரு லைப்பரரி ஆக மாற்ற வேண்டும் என்பது. ஆனால் இதுவரை அவருடைய கனவு நிறைவேறவில்லை.
எல்லா அறைகளிலும் புத்தகங்கள் கலைத்துப் போட்டபடி இருக்கும். ஒரு அலமாரி கவிதைகள் அலமாரி. ஒரு அலமாரி சிறுகதைகள் அலமாரி.
மூன்றாவதில் நாவல்களாக குவிந்திருக்கும். ஆங்கிலம், தமிழ் எல்லாப் புத்தகங்களும் இருக்கும்.எதாவது புத்தகம் வேண்டுமென்றால் கண்டுபிடிக்கத் தெரியாது.
தினமும் காலை அங்கு வரும் அழகியசிங்கருக்கு புத்தகங்களை அங்கிருந்து இங்கே வைப்பது இங்கிருந்து அங்கு வைப்பதில் பொழுது போய்விடும்.
700 சதுர அடிகளில் ஒரு சின்ன அடுக்ககம்.
நானும் காலை நேரத்தில் அங்குப் போவேன். வங்கியில் பணிபுரிந்து பணிமூப்படைந்தவன். அயோத்தியா மண்டபம் அருகிலுள்ள மூர்த்தி தெருவில் என் வீடு. மனைவியும் நானும் இருக்கிறோம். அது என்னமோ நான் புத்தகம் படிப்பது உலகத்துக்கே பிடிக்கவில்லை.
அழகியசிங்கருக்கு எதாவது உதவி செய்யலாமென்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால் என்ன உதவி செய்வது என்று புரியாது.
அவர் எந்தப் புத்தகத்தையும் யாருக்கும் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போக அனுமதிக்க மாட்டார்.
எனக்குப் படிக்கும் ஆர்வம் அதிகம்.
‘மிஸ்டர் மௌலி, நீங்கள் தினமும் அரை மணி நேரம் வந்து படித்தால் போதும்..திரும்பவும் அதே புத்தகத்தை அடுத்த நாள் தொடரலாம், ‘ என்பார் அழகியசிங்கர்.
“லைப்ரரி என்றால் புத்தகத்தை இரவல் கொடுத்தால்தான் சரிவரும்.”
அதை மறுப்பார். காணாமல் போன புத்தகங்களின் லிஸ்ட் கையில் வைத்திருப்பதாகக் கூறுவார்.
“மிஸ்டர் மௌலி என்னிடம் ஒரு முறை புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுப்பதில்லை. காணாமல் போய்விடுவார்கள்.”
நான் ஒருநாள் ஒரு ஆங்கில சிறுகதைத் தொகுப்பை கண்டுபிடித்தேன்.
புத்தகம் பெயர் William Sroyan எழுதிய The Man With the Heart in the Highlands and other stories. அழகியசிங்கரிடம் அந்தப் புத்தகத்தை வீட்டிற்குப் படிக்கக் கேட்டேன்.
“மிஸ்டர் மௌலி உங்களுக்குத் தெரியும். எந்தப் புத்தகத்தையும் இங்கிருந்து எடுத்துக் கொண்டு போக அனுமதிக்க மாட்டேன்.”
“நான் கூடவா..எவ்வளவு வருஷம் பழக்கம் நமக்குள்..”
“மிஸ்டர் மௌலி, முதல்ல புத்தகம் வாங்கும்போது கெஞ்சுவார்கள்.
பின் அவர்களிடமிருந்து புத்தகம் பெற நான் கெஞ்ச வேண்டும்.
சரி வராது மிஸ்டர் மௌலி.”
“ஒரு வாரத்தில் நான் படித்து விட்டுக் கொடுத்து விடுகிறேன்.”
ஒன்றும் பேசவில்லை அழகியசிங்கர்.
“மூன்று நாட்களில் கொடுத்து விடுகிறேன்
அசைந்து கொடுக்கவில்லை.
“சரி ஒருநாள் போதும். படித்துவிட்டுக் கொடுத்து விடுகிறேன்.”
“தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் மௌலி. தர விரும்பவில்லை.”
என்ன மனிதன் இவர் என்று அவர் மீது கோபம் கோபமாக வந்தது.
நான் மேலும் அங்கு இருப்பதா வேண்டாமா என்று தோன்றியது.
மேலும் அவர் என்னை அடிக்கடி மிஸ்டர் மௌலி என்று கூப்பிட்டது எனக்குப் பிடிக்கவில்லை.
நான் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து வந்து விட்டேன்.
