பெண்/ஜெ.பாஸ்கரன்

.

சுதாகருக்கு டென்ஷனாக இருந்தது.

“மாமா நம்ம திட்டம் சரியாப் போகுமா? எனகென்னமோ பயமா இருக்கு மாமா”

“அசடு மாதிரிப் பேசாத; பிரேமா புத்திசாலி, சொன்னபடி நடந்துப்பா. நல்லதுக்குத்தான் நாம இதைச் செய்யறோம்ன்னு அவளுக்குத்தான் தெரியுமே”

சம்பிரதாயமாகப் பிரேமாவைப் பெண் பார்க்கப் போகும்போதுதான், சுதாகர் தன் மாமாவிடம் இதைக் கேட்டான்.

சுதாகர் அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. இவன் பிறந்து, மூன்று வருடங்களுக்குள் கணவனை இழந்து, தன் பிள்ளை சுதாவே தன் வாழ்க்கை என ஒரு யோகி போல வாழ்ந்து வருபவள் கோமளா. சுதாவுக்கு ஒரு குறையும் வைக்காமல், கண்ணை இமை காப்பதுபோல் வளர்த்து வந்தாள். யாரும் விளையாட்டுக்குக் கூட அவனிடம் சொந்தம் கொண்டாடிவிட முடியாது. கோமளாவால் தாங்கிக் கொள்ள முடியாது. நன்கு படித்து வேலை என்று வரும்வரை சுதாகரை வளர்த்தவளுக்கு, அவனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என அவளது அண்ணா சொன்னபோது, கொஞ்சம் மிரண்டு போனாள் – இது பற்றி அவள் சிந்திக்கவே இல்லையே… தன் மகனின் அன்பை வேறொருத்தி பங்கு போட்டுக்கொள்வதை அவளது மனம் ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும், தனக்குப் பிறகு அவனைக் கவனித்துக்கொள்ள ஒரு துணை தேவைதானே என்ற எண்ணமும் எழுந்தது. ஆனால் வருபவள் எப்படியிருப்பாளோ என்ற கவலையும் உடன் இருந்தது – பெற்ற மனம் சிறிது படபடத்தது.

நியாயமான சுதாகரின் திருமணத்திற்கு சம்மதித்தாள். ஆனால், பெண்ணை மட்டும் தானே தேர்ந்தெடுப்பேன் என்றாள்!

இது நான்காவது பெண் பார்க்கும் படலம்.

முதலாவது பெண் லெக்கின்ஸ், குர்த்தா, குதிரைவால் கொண்டை என அழகாக இருந்தாள். ஏனோ கோமளா ‘வேண்டாம்’ என்றாள். இரண்டாவதாகப் பார்த்த பெண், எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டு, ‘திருமணத்திற்குப் பிறகும் உங்க அம்மா உங்க கூடதான் இருப்பாங்களா?’ என்றாள். மூன்றாவதாகப் பார்த்தவள், ‘மாப்பிள்ளை பரவாயில்லை, அவரது அம்மாவையும், மாமாவையும் எனக்குப் பிடிக்கவில்லை’ என்றாள்.

இன்றைய யதார்த்தம் அறிந்திருந்தாலும், சுதாகரால் அம்மாவுக்கு எதிராக முடிவெடுக்க முடியவில்லை.

“மாமா, அம்மாவுக்குப் பிடித்த மாதிரி பெண் அமைவது மிகவும் கஷ்டம். அம்மாவைப் பார்த்தாலும் பாவமா இருக்கு மாமா”

“சுதா, அம்மாங்கிற கேரக்டர், தன் வீட்டுக்காரனைக்கூட விட்டுக்கொடுத்திடும். தான் பெற்ற பிள்ளையை மட்டும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அதுவும் கோமளம் உன்மேல உயிரையே வெச்சிருக்கா.. கொஞ்சம் பொறு”

மாமாவின் அலுவலகத்தில் பணிபுரியும் பிரேமா சூட்டிகையான பெண். மத்தியதரக் குடும்பம். அவளும் வீட்டுக்கு ஒரே பெண். அவளிடம் சுதாகரைப் பற்றிப் பேசினார் மாமா.

“நல்ல பையன், நல்லா சம்பாதிக்கிறான். ஒரே பிள்ளை, அப்பா கிடையாது. ஆனா அம்மா ரொம்ப பொஸஸிவ் டைப். எங்கே தன் பிள்ளையைப் பிரிச்சுடுவாளோன்ற பயத்தில், சின்ன சின்ன விஷயங்களைக் காரணம் காட்டி, பார்க்கிற பெண்களையெல்லாம் வேண்டாம்னு தவிர்க்கறா..”

“நியாயம்தானே சார். கல்யாணத்துக்கப்புறம் மனசு ஒத்துப்போகாமே, சண்டை, சச்சரவு, விவாகரத்துன்னு போயிடறதே இப்பொல்லாம். அதுக்கு வழியில்லாமெ, நல்ல மாப்பிள்ளையோ, நல்ல பெண்ணோ அமையற வரைக்கும் தேடறதுலெ தப்பில்லையே சார்.”

பிரேமாவின் யதார்த்தமான பேச்சு மாமாவுக்குப் பிடித்துப்போக, சுதாகரிடம் பேசினார். பிரேமாவைச் சந்தித்துத் தன் அம்மாவின் பாசத்தையும், அவள் பயத்தையும் பற்றிக் கூறினான். பிரேமாவுக்கும் சுதாகரைப் பிடித்துப் போக, கோமளாவைச் சம்மதிக்க வைக்க ஒரு திட்டம் போட்டார்கள் மாமாவும் சுதாகரும்.

அம்மாவுக்குப் பிடித்த மாதிரி, உடை, பேச்சு என எல்லாம் சொல்லிக்கொடுத்தான் சுதாகர். “நீ நாச்சுரலா நாங்க சொல்றபடி இருந்தாத்தான், இந்தக் கல்யாணம் நிச்சயமாகும்.”

“உங்க அம்மவை ஏமாத்தற மாதிரி எதுவும் இல்லையே?” பிரேமாவின் குரலில் உண்மையான கரிசனம் இருந்தது.

“நிச்சயமா இல்லெ, அது என்னால முடியவும் முடியாது. அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரவேண்டும் என்ற எண்ணம்தான். மேலும், அவங்களை நீ நல்லாப் புரிஞ்சிப்பேன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு”

இதோ, பிரேமா அம்மாவுக்குப் பிடித்த மாதிரி அழுத்தமான மெரூன் கலரில் புடவை கட்டி, தலை வாரிப் பின்னிப் பூ வைத்துக் கையில் தட்டில் காப்பியுடன் பதுமை போல நடந்து வந்தாள்.

அம்மாவின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. வரும்போது இருந்த புன்னகை மட்டும் அப்படியே முகத்தில் ஒட்டியிருந்தது.

“உட்கார்ந்துக்கோம்மா”

அமைதியாக சோபாவில் அமர்ந்தாள் பிரேமா. “உனக்கு சுதாவைப் பிடித்திருக்கிறதாம்மா?”

குனிந்திருந்த தலை மெதுவாக ஆடியது.

“சரிம்மா, நீ பாடுவியா?”

சுதாகரும், மாமாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ‘இது பற்றி பிரேமாவிடம் சொல்லவில்லையே, என்ன ஆகுமோ? கடவுளே’

பிரேமா சொன்னாள்: “இல்லேம்மா. பாட்டெல்லாம் கற்றுக்கொள்ளவில்லை. எந்த சங்கீதமானாலும் கேட்கப் பிடிக்கும் -சினிமாப் பாடல்களையும் சேர்த்து..”

“நீ சொல்றதும் சரிதான். கலைகளை ரசிக்கவாவது தெரியணும். இசையா சாப்பாடு போடப்போகுது?” புன்னகையுடன் சொன்னாள் கோமளா.

பிரேமாவின் அம்மாவிடம், “எங்களுக்குப் பிரேமாவை மிகவும் பிடித்து விட்டது. திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யலாம்” என்று சொல்லி, பிரேமாவை அழைத்து, நெற்றியில் முத்தமிட்டாள்.

திரும்பி வரும்போது கோமளா, “என்னை விட பிரேமா உன்னை நன்றாக கவனித்துக் கொள்வாள்” என்று சொன்னாள். சுதாகரும் மாமாவும் “ஆமாம், நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும்” என்றார்கள்.

கோமளா சிரித்துக்கொண்டாள்.

“உங்க மகனை உங்கள மாதிரியே பார்த்துப்பேன். உங்களுக்கு என் மேல நம்பிக்கையும் அன்பும் இருந்தா இந்தத் திருமணத்திற்கு சம்மதிங்க. இல்லைன்னா, என்னை வேண்டாம்னு நிராகரிச்சிடுங்க. சுதாகரை எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவு உங்களையும் எனக்குப் பிடிக்கும். இப்படிப்பட்ட அம்மாகிட்ட எதையும் நான் மறைக்க விரும்பல. உங்க பிள்ளை, என் கணவன் எல்லாத்தையும் தாண்டி, இது நம்ப குடும்பம்ன்னு நான் நம்பறேன்”

ஒரு வாரம் முன்பு, ஒரு மதியம் பிரேமா வீட்டிற்கு வந்து போனதை நினைத்துக் கொண்டாள் கோமளம்.