
கண்ணாடி
என்னை எனக்குக் காட்டுகிறது;
என் முகத்தை
உள்ளது உள்ளபடி காட்டுகிறதா?
எனக்குத் தெரியவில்லை!
சில நேரம்
என் முகத்தைக் கொஞ்சம்
குறைத்துக் காட்டுவது போல்
எனக்குத் தோன்றும்!
வ.வே.சு என் கவிதைகளைப்
பாராட்டுவது போல்
கண்ணாடி
என் முகத்தைப் பாராட்டினால்
நன்றாகத் தான் இருக்கும்;
இதை எண்ணிக் கொண்டே
கண்ணாடியைப் பார்த்தேன்;
கண்ணாடி என்னை
முறைப்பது போல் உணர்ந்தேன்!
“உன்னை உனக்குத்
தெளிவாகக் காட்ட
மேலோர் நூல்களால் ஆகும்”
என்றொரு குரல்!
பக்கத்தில் யாருமில்லை ;
கண்ணாடியா பேசியது?
திகைத்தேன்!
அசரீரி மெல்லத் தேய்ந்து
எனக்குள் இறங்கியது!
