டிக்கெட் : சுஜாதா

கதையைப் படிக்கும் முன்:
ஆனந்த விகடனில் பொறுப்பான பதவியில் (உதவி ஆசிரியர் என நினைக்கிறேன்) ஒரு காலத்தில் இருந்தவர் திரு. மணியன் அவர்கள்.
ஆனந்த விகடன் சார்பில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து அந்தப் பயணக் கட்டுரைகளை “இதயம் பேசுகிறது” என்ற தலைப்பில் எழுதி வந்தார். (அதற்கு முன் விகடனில் பல கதைகளையும் எழுதியுள்ளார் மணியன்).
பிறகு, மணியன் விகடனில் இருந்து வெளியேறி. சொந்தமாக வாரப் பத்திரிக்கை ஒன்று ஆரம்பித்து அதற்கும் “இதயம் பேசுகிறது” என்றே பெயரிட்டார்.
அன்றைய காலகட்டத்தில், வாரப் பத்திரிக்கை என்றால் சுஜாதாவின் தொடர்கதை / சிறுகதை/ கட்டுரை என ஏதோ ஒரு பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நியதியை இந்தப் பத்திரிக்கையும் கடைபிடித்தது. “பெண் இயந்திரம்” உட்பட சில கதைகளை இதயம் பேசுகிறது பத்திரிக்கையில் சுஜாதா எழுதினார்.
“இதயம் பேசுகிறது” வார இதழின் ஆசிரியர் மணியன் பிரபல தமிழ் எழுத்தாளர்களை வைத்து “அந்தாதி கதைகள்” என்ற பெயரில் வாரம் ஒரு கதை வெளியிட்டார்.
அந்தாதி என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். இந்த விதியின்படி ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளர் ஒரு சிறுகதையை எழுதுவார். அடுத்த வாரம், வேறு ஒரு எழுத்தாளர் கடந்த வாரம் சிறுகதை எந்த வரியில் முடிந்ததோ அதை வைத்து அடுத்த சிறுகதையை ஆரம்பித்து எழுதுவார். இது 12 வாரங்கள் தொடர்ந்தது.
11ம் வாரம் சிறுகதை எழுதிய திருமதி. அனுராதா ரமணன் கதையின் முடிவில் “ஒரு வழியாக கல்யாணம் என்ற வார்த்தையே மறந்து போயிற்று” என முடித்திருப்பார்.
ஒரு நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் , தன் தங்கைகளுக்கு, மிகுந்த சிரமங்களுக்கு இடையே அவர்களின் திருமணங்களை நடத்தி வைத்து வெறுத்து போய் இனி கல்யாணமே வேண்டாம் என்ற நிலைக்கு வருவதாக குறிப்பிட்டு, “ஒரு வழியாக கல்யாணம் என்கிற வார்த்தை அவனுக்கு நிரந்தரமாக மறந்து போயிற்று” என்ற வார்த்தையுடன் முடித்திருப்பார்.
அடுத்தவாரம் (12ம் வாரம்) சுஜாதா, அனுராதா ராமனின் “ஒரு வழியாக கல்யாணம் என்கிற வார்த்தை அவனுக்கு நிரந்தரமாக மறந்து போயிற்று” என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு ஒரு அட்டகாசமான, யாருமே எதிர்பார்க்காத கதையை எழுதியிருந்தார். சிறுகதையின் பெயர் : டிக்கெட்
இதைப் போன்ற மிக சாதாரணமாக, ஒரு மத்யமரின் பிரச்னையை வைத்துக் கொண்டு வந்த கதையின் முடிவை வைத்து, ஒரு சற்றும் எதிர்பாராத விஞ்ஞானப் புனைவு எழுதிருந்தார் சுஜாதா.

மிக அபாரமான அக்மார்க் சுஜாதா கதை. இவர் முடித்த விதத்தை வைத்து வேறு யாரும் அந்தாதிக் கதை தொடர முடியாது என்பதால் வாத்தியார் எழுதிய கதையோடு அந்த அந்தாதிக் கதை சமாச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் மணியன்..

இனி கதை……..
ஒரு வழியாக கல்யாணம் என்கிற வார்த்தை அவனுக்கு நிரந்தரமாக மறந்து போயிற்று.
முதலில் அதை தற்செயலாகத்தான் கவனித்தான். பொழுதே போகாதபோது மேஜையில் கலர், கலராக இறைந்திருந்த பத்திரிக்கைகளைப் புரட்டிக்கொண்டிருந்தான், ஏதோ ஒரு தொடர் கதையை ஏதோ ஒரு அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கினான்.
“கல்யாண காரியங்கள் மும்முரமாக நடக்கிறது….”
சற்று நெருடியது. என்ன காரியங்கள் ? க…..ல்…யா….ண….என்றால் என்ன அர்த்தம் ?
‘இனிமேல் இந்தக் கல்யாணத்தை யாராலும் நிறுத்த முடியாது…’
இதைப் படிக்கும்போது, ‘இனிமேல் இந்த …….யாராலும் நிறுத்த முடியது என்றுதான் அவன் மூளைக்குள் பதிந்தது. ஒரு முறை தலையைச் சிலிர்த்துக் கொண்டான்.
‘எவனோ முன்னே பின்னே தெரியாதவனை ……. பண்ணிண்டு திண்டாடறதுக்கு….’
‘ஒருவேளை, மனசுக்குப் பிடித்தமில்லாத இந்த …..திலிருந்து கழண்டுக்கற நோக்கத்தில்…..’
ஹேய், வாட்ஸ் ஹாப்பனிங் டு மி ? கல்யாணம் என்று வருகிற போதெல்லாம் அவனுக்குள் ஏதோ படக்கென்று ஸ்விட்ச் அணைந்து விடுகிறாற்போல…….
என்ன ஆயிற்று ?
சற்றே திகைத்துப் போய் சும்மா இருந்தான். மறுபடி அந்தத் தொடர்கதை அத்தியாயம் பன்னிரண்டைப் பார்த்தான். எதிரே படத்தில், ஜிப்பா போட்டுக்கொண்டு ஒருவன் அகலமான மார்பின் மேல் விண் என்ற மார்பகத்துடன் ஒருத்தி ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு சாய்ந்திருந்தாள். கொஞ்சம் நிறுத்தி, தாமதித்து மறுபடி பார்த்தான்….
‘………. காரியங்கள் மும்முரமாக நடக்கிறது…’
உதடு படிக்கிறது. மனது அல்லது ஞாபகம் அல்லது மூளை நிராகரிக்கிறது. அதன் அர்த்தம் கொஞ்சம் கூட உணர்வில் பட மறுக்கிறது.
க….புரிகிறது, ……. ல் …..புரிகிறது, யா…….புரிகிறது, எல்லா எழுத்துக்களும் இதோ இருக்கின்றன. ஆனால் அந்தச் சொற்றொடர் ? ஏன் இப்படி அதைச் சந்தித்ததும் அவனுக்குள் ஏதோ ஓட்டை விழுந்தது போல சுத்தமாக ஒன்றுமே தோன்றமாட்டேன் என்கிறது? அர்த்தம் தெரியாத தமிழ் வார்த்தையா?
ஆம். இந்த மாதிரி வார்த்தை தமிழில் கிடையாது. அதுதான் ! இது ஏதோ அச்சுப்பிழை இல்லை ! மூன்று இடத்திலுமா அச்சுப்பிழை ? மறுபடி அதைப் பார்த்தான்.
‘திருமணத்திற்குப் பிறகு இவனிடம் பழகுவது போல இத்தனை சுதந்திரமாக பழக முடியாது என்பதை உணரும்போது ….’
திருமணம் ?
‘ஹேமா, நாளைக்கு விடிகாலம்பரச் சத்திரத்துக்குக் கிளம்பனும்’ மறுபடி அந்த வார்த்தை ! அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நிச்சயம் அச்சுப்பிழை இல்லை, இதோ, இன்னொன்று……
‘ஏதோ இஷ்டமில்லாம ஒருத்தனைக் ……… பண்ணிக்க வேண்டியதை நினைத்து….’
பட்டென்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டான். நேராக நின்று பார்த்தான். கண்களில் இரண்டு விரல்களை அழுத்தி, கண்ணுக்குள் தீப்பிழம்பு போல் ஓடும் ஸர்ரியலிஸ்ட் (surrealist) காட்சிகளை நிறுத்திப் பார்த்தான்.
என்னவோ ஆகிவிட்டது எனக்கு?
சே ! நேற்று சரியாகாது தூங்கினேனே ! காலை சரியாகப் போனேனே ! ஒரு வேளை பசியோ ? இல்லை காஃபி சாப்பிட்டால் சரியாகி விடுமோ ?
அது என்ன வார்த்தை ? க இல் யாண இம் ! என்ன அது ?
அறையைப் பார்த்தான். காலண்டரில் ஒருத்தி சோப்புக்காக டாப்பை நீக்கியிருந்தாள். ஒரு கணம் அந்தப் பெண் அந்தப் பாறைகளையும், நீர்வீழ்ச்சியையும் விட்டு எழுந்துவருவது போலத் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டான்
தூரத்தில் ஒரே ஒரு பிழம்பு தெரிந்தது. “மாது” என்று கூப்பிட்டுப் பார்த்தான். மாதுவை போஸ்ட் ஆபிஸ் அனுப்பியிருப்பது ஞாபகம் வந்தது. டிகாஷன் இருக்கும். சொந்தமாக்க காஃபி போட்டு சாப்பிட்டுப் பார்க்கலாம். பக்கத்துக்கு அறைக்குச் சென்று நெருப்பெட்டியைத் தேடினான். கிடைக்காமல் அலமாரிக்கு வந்தான். அம்மாவின் இன்லண்ட் பிரிந்து இருந்தது.
‘பிரியமுள்ள துரை,நான் போன லெட்டரில் எழுதியபடி உன் …….. விஷயமாக….’
ஐயோ, மறுபடி அது ! படக்கென கடிதத்தை மூடி வைத்துவிட்டு நெருப்புப் பெட்டியுடன் உள்ளே சென்றான். காஸ் திறந்து, குச்சி கிழித்து இரண்டுக்கும் உறவு ஏற்பட்டு, நீலம் எரியும் வேளை அவனை அது தாக்கியது. கொஞ்சம் நேரம்தான். கொஞ்சம் நேரம்தான். கொஞ்சமோ கொஞ்சம் நேரம்தான்.
அவன் காதுகளுக்குள் விர்ர்ர் என்று ஒலி கேட்டது. அந்த ஒலியை அவன் அதன்முன் கேட்டதில்லை. வர்ணிக்கமுடியாத, கீழ் ஸ்தாயியில், ராத்திரி வேளையில் ஒரு புறாவை விரட்டினாற்போல, அந்தப் படபடப்புடன்…….
ஏதோ ஒரு வாத்தியத்தின் ராட்சத தந்தியைத் தட்டினாற்போல ! அதைத் தொடர்ந்து அவன் ஒரு செகண்டு அல்லது முப்பது செகண்டு அல்லது முப்பது நிமிஷம் நினைவிழந்தான். விழிப்பு ஏற்பட்டபோது அவனுக்கு உடம்பு பூரா வியர்த்திருந்தது. நாக்கைக் கடித்துக் கொண்டதில், தொட்டுப் பார்த்ததில், ரத்தம் தெரிந்தது. பூட்டுக்குப் பூட்டு வலித்தது. உடனே டாக்டரைப் பார்க்கத் தீர்மானித்தான்.
எட்டு பேர் காத்திருந்தார்கள். ரிஸப்ஷனில் இருந்த பெண் டெலிஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். இடையிடையே ஒரு போர்ட்டபிள் டைப்ரைட்டரில் டப் டப் என்று அமெச்சூர்தனமாக பில் அடித்துக்கொண்டிருந்தாள்.
ஒரு சிறுவன் துரையையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு மாமிகளுக்கு இடையே வைரக்கல் மின்னியது ! யார் பேசுகிறாள் என்று தெரியவில்லை……
“போன வருஷம்தான் மாமி…..ஆச்சு, அப்பவே சொல்லியிருக்கலாமில்லையோ !”
“சொல்லவே இல்லையா ?”
“இல்லையே ! இப்ப உண்டாயிருக்கு. இதுக்கு என்னன்னு சொல்வேன் …….. ஆயி தலை தீபாவளிக்குளே…..
இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் ?
“மிஸ்டர் துரை !” என்றார்.
திடுக்கிட்டு எழுந்தான்.
டாக்டர் அறையில் பேஸினில் கை கழுவிக்கொண்டிருந்தார். நர்ஸ் இவனை சந்தேகத்துடன் பார்ப்பது போல இருந்தது. அந்த ஆயுதங்களில் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை. காலண்டரில் சுஸ்ருதரோ யாரோ யாரையோ படுக்க வைத்து முன்னால் சுரண்டிக்கொண்டிருக்க பணிப்பெண்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“என்ன மிஸ்டர் துரை?”
“டாக்டர், இன்னிக்கு சாயங்காலம்தான் ஆரம்பிச்சது. ஒரு வினோதமான உணர்ச்சி. ரூம்ல உக்காந்துகிட்டு போது போகாம படிச்சுக்கிட்டே இருந்தேனா…..” சொன்னான்.
டாக்டர் முகத்தில் மாறுதல் ஏதும் இல்லாமலே கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் முகத்தில் மூக்குக்கு அருகில் இருந்த மரு ஒன்று திடீர் என்று பெரிசாகி விடும் போலிருந்தது. அவரைப் பார்பதைத் தவிர்த்தான்.தன் நகங்களைப் பார்த்துக்கொண்டே சொன்னான். நம்புகிறாரா தெரியவில்லை.
முழுவதும் கேட்டுவிட்டு சற்று நேரம் கழித்து, “ஆரா (aura) வந்ததுன்னு சொன்னிங்க இல்லை….”
“ஆரா ?”
“அ அதுதான் ஒரு மாதிரி சவுண்டு….”
“ஆமா டாக்டர், அந்த மாதிரி சப்தத்தை நான் இது வரை கேட்டதே இல்லை……”
“அது என்ன வார்த்தை சொன்னிங்க?”
“புஸ்தகம் படிச்சுக்கிட்டே இருக்கேனா….ஒரு வார்த்தை மட்டும் கன்சிஸ்டண்டா உதைக்குது. அதைப் பிடிக்கவே முடியவில்லை…”
“என்ன வார்த்தை?”
“தெரியலையே…..அது வந்தபோது மூளையில ஒருவிதமான பள்ளம். டோட்டல் பிளாங்க் !”
“அப்படியா ! படுத்துக்கங்க…”
நர்ஸ் பக்கத்தில் இருந்த திரைகளை விலக்க, சற்று உயரமாக இருந்த நீண்ட மேஜைமேல் படுத்தான். டாக்டர் ரத்த அழுத்தம் எடுத்தார். இதயத்தைக் கேட்டார். கண்களுக்குள் ஊசிபோல ஒளி செலுத்திப் பார்த்தார்.
“உங்க ஃபாமிலியில யாருக்காவது ஃபிட்ஸ் வருமா ?”
“எனக்குத் தெரிஞ்சவரைக்கும் இல்லை டாக்டர்…”
“இதுக்கு முந்தி உங்களுக்கு இது மாதிரி வந்திருக்கா?”
“இல்லை, இதுதான் முதல் தடவை”
“உடம்பு வலி இருக்கா?”
“இருக்கு. முறுக்கிவிட்டாற்போல”
“உங்களுக்கு என்ன வயது?”
“இருபத்தி அஞ்சு”
“கல்யாணம் ஆயியிடுச்சா?”
“என்ன கேட்டீங்க?”
“கல்யாணம் ஆயிடுச்சான்னு…”
“புரியலை”
டாக்டர் சற்று யோசித்து, “ஓ, அதுதான் அந்த வார்த்தையா?”
“எதுதான்…எந்த வார்த்தையா!”
“உங்களுக்கு ப்ளாங்க்கா இருக்குதுன்னு சொன்னீங்களே, கல்யாணம் ! அந்த வார்த்தைதானே ?”
“எழுதிக் காட்டுங்க”
டாக்டர் எழுதிக் காட்ட, “இதான் ஸார்” என்றான் பளிச்சென்று.
“கொஞ்சம் இருங்க! இதைப்பாருங்க” “திருமணம்” என்று எழுதினார்.
“ம்ஹும்” என்றான் துரை.
“இன்டரஸ்டிங்! சட்டையை போட்டுக்கங்க”
“வாட்ஸ் ராங் வித் மீ டாக்டர்?”
“இப்ப சொல்ல முடியாது. உங்களுக்கு ஜி.ஹெச்லே டாக்டர் கல்யாணராமனைத் தெரியுமா? நியூரோ சர்ஜன்.”
“டாக்டர், அது என்ன ராமன்?”
“ஓ .எஸ். புரியறது.ஒரு ஸ்கான் எடுக்கணும். அதுக்குதான். ஜி.ஹெச்லே எடுத்தா சார்ஜ் அதிகம் ஆகாது.”
“ஸ்கான்?”
“கம்பியூட்டரைஸ்ட் டோமோக்ராஃபிக் ஸ்கான். ஸிடி ஸ்கான்னு புதுசா வந்திருக்கு. அதில உங்க ப்ரைய்ன் ஸ்கான் பண்ணனும். கே.ஜே ல இருக்கு. ஆனா, கொஞ்சம் சார்ஜ் ஆகும். அப்புறம் சில எக்ஸ்ரேக்களும் எடுக்கணும். அதுவரைக்கும் தீர்மானமா எதையும் சொல்ல முடியாது. நீங்க நாளைக்கு காலைல வந்திங்கன்னா எழுதிக் கொடுக்கறேன். ராத்திரிக்கு இந்த மாத்திரை மட்டும் போட்டுக்கங்க. லைட்டா சாப்பிடுங்க. அஜீரணம் கூடாது. புஸ்தம், கிஸ்தகம் படிக்காதீங்க. டிவி பார்க்காதீங்க. சீக்கிரம் படுத்துக்கங்க. மாத்திரை தூக்கத்துக்குத்தான் கொடுத்திருக்கேன். டெஸ்ட் பண்ணப்புறம்தான் விஷயம் தெரியும். கவலைப்படாதீங்க…”
“டாக்டர், இது ஒண்ணும் ப்ரைய்ன் ட்யூமர், எபிலெப்ஸின்னு…”
“இமாஜின் பண்ணிக்காதிங்க. போயிட்டு வாங்க”
அவன் போனதும் டாக்டர் நம்பி ராஜன் மற்ற பேஷண்டுகளை சற்று அவசரமாகவே பார்த்தார். அவருக்கு ஷெரட்டனில் பார்ட்டியிருந்தது. அவசரமாக வீடு திரும்பி, தயாராகாத தன் மனைவியைக் கடிந்து கொண்டு, அவள் ஜோடித்துக் கொண்டு கிளம்பி அங்கே போவதற்குள் ஸ்வர்ணமுகி டான்ஸ் முடிந்துவிட்டது. எல்லோரும் காக்டெய்லில் இருந்தார்கள். ஓரத்தில் பாண்டு வாத்தியக்காரர்கள் ‘வாய்ஸஸ் இன்ஸைட் மை ஹெட்’ வாசித்துக்கொண்டிருந்தார்கள். வெய்ட்டர்கள் டாக்டர்களுக்கு நடுவே உலவிக் கொண்டிருக்க, யாரும் சாப்பிடப் போவதாக இல்லை. டெர்ரஸில் சென்னை விரிந்திருந்தது.
மனைவிகள் மனைவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“டாக்டர் ரெங்கசாமியுடைய ஒய்ஃபைப் பாத்திங்களா, புதுசா செயின் போட்டுண்டிருக்கா…பதினஞ்சு சவரன் இருக்கும்” என்ற மனைவியை உட்கார்த்தி வைத்துவிட்டு, சிவ்குமாரின் நரைத்த தலையைத் தேடினார்.
சிவ்குமார் நிம்ஹான்ஸில் பிரபலமான நியூரோ சர்ஜன்.அவரைப் பல இளம் டாக்டர்கள் சூழ்ந்திருந்தார்கள். நம்பி ராஜன் தானாகப் போய் அறிமுகம் செய்து கொண்டார்.
“நம்பி ராஜன், நம்பி ராஜன்….வெயிட் எ மினிட், உங்க பேப்பரை நான் படிச்சிருக்கேன்…..ஐ.எம்.ஜே ல ….”
“நான் அந்த நம்பி ராஜன் இல்லை, டாக்டர், ஒரு சாதாரண ஜி.பி !”
“இருந்தால் என்ன ? உங்கள் கையில் என்ன ஆரஞ்சு ஜுஸா ….டாக்டர்கள் குடிக்கக்கூடாது என்று மாதாஜி சட்டம் கொண்டு வரவில்லையே, டாக்டர். ஆ தட் ஸ்வர்ணமுகி ! மெட்ராஸ் டாக்டர்ஸ் யாராவது அவளுடைய ஜாய்ண்ட்ஸை எல்லாம் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா…ஐ திங்க் ஷி ஐஸ் மேட் ஆஃப் சிலிகோன்..”
“டாக்டர், இன்னிக்கு என் க்ளினிக்குக்கு ஒரு வினோதமான கேஸ் வந்தது. அதை உங்களிடம் சொல்ல விருப்பம்,”
“ப்ரெய்ன் என்றால் சொல்லுங்கள், எனக்கு அதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. அப்பெண்டிக்ஸ்னா நான் புஸ்தகத்தில் தேடுவேன்”
சின்ன டாக்டர்கள் விசுவாசமாகச் சிரித்தார்கள்.
“இல்லை, டாக்டர். இந்த மாதிரி கேஸை நான் பார்த்ததில்லை. அவன் சொல்கிறான், ஒரு வார்த்தை மட்டும், ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவனுக்கு சூன்யமா இருக்காம். அந்த வார்த்தையை மூணு, நாலு தடவை பார்த்ததும் எபிலெப்டிக் ஷீர் (epileptic sheer) மாதிரி வந்திருக்கு. ஹி டிஸ்க்ரைப்ஸ் என் ஆரா …..”
“வெயிட் எ மினிட், அது என்ன வார்த்தை?”
“கல்யாணம்”
டாக்டர் சிவ்குமார் விசிலடித்தார்.
“டாக்டர் நம்பி ராஜன், கொஞ்சம் தனியா வாங்க”
அவரை தொழில் அணைத்து அழைத்துச் சென்று, காலி நாற்காலியின் எதிரே உட்கார்ந்துகொண்டார். “என்ன சொன்னிங்க ? திருப்பி சொல்லுங்க”
நம்பி ராஜன் முதலிலிருந்து விவரிக்க, சிவ்குமார் மிகக் கவனமாகக் கேட்டார்.
:டாக்டர், இது ஒண்ணும் கற்பனை இல்லையே?”
“சேச்சே…!”
“நீங்க ராபின் குக் எழுதின ப்ரெய்ன் படிச்சிங்களா?”
“இல்லை, ஏன் ?”
“அதில் இப்படித்தான் சில பெண்களுக்கு ஒரு எழுத்து மட்டும் தெரியாமப் போயி, ஸி.ஐ.ஏ / ஃஎப்.பி ஐ (CIA / FBI) ன்னு என்ன என்னமோ வருது. ஆனா, நீங்க சொல்ற கேஸ் வேற மாதிரி இருக்கு. ஒரு வார்த்தை மட்டும்…அதும், கல்யாணம்….சம்திங் சீரியஸ், டாக்டர் அந்த ஆளை நான் பார்க்க முடியுமா?”
“தாராளமா. இட் வில் பி எ ப்ளெஷர். உங்க மாதிரி பிரபல டாக்டருக்கு ஆர்வம் ஏற்பட்டதுன்னா….”
“கிளினிக்கில் இருக்கானா ?”
“இல்லை. வீட்டுக்குப் போய்ட்டான். நாளைக்கு வரச் சொல்லியிருக்கேன்…”
“போச்சுரா”
“ஏன் டாக்டர் ?”
“நாளைக்கு அவன் வரலைன்னா?” அட்ரஸ் வாங்கி வெச்சிருக்கீங்களா?”
“அட்ரஸ் இல்லை. நாளைக்கு நிச்சயம் வருவான் டாக்டர். வராம எங்க போயிருவான்? டெஸ்ட்டே ஆரம்பிக்கலையே”
“எனக்கு நம்பிக்கை இல்லை”
“என்ன சொல்றிங்க, டாக்டர்?”
“இதப் பாருங்க, நம்பி ராஜன். நான் சொல்றது உங்களுக்கு இந்த யுகத்தில், இந்த தினத்தில், அபத்தமா படலாம். எனக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாது. அமெரிக்காவில் நான் டீச்சிங் அஸைன்மென்டுக்குப் போறபோது சில டாக்டர்களையம்,விஞ்ஞானிகளையும் சந்திச்சேன். எல்லோருக்கும் பொதுவா ஒரு ஆர்வம் எதிர்காலத்தில் ! ஃப்யூச்சராலஜி (Futurology), பயானிக்ஸ் (Bionics), குளோனிங் (cloning), டி.என்.ஏ (DNA) ஸின்தஸிஸ்னு ஃப்ராண்டியர் (Frontier) சப்ஜெக்ட்ஸ் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவோம். ஃப்ரெட் ஹாயில் (Fred Hoyle) , அஸிமோவ் (Asimov), ப்ராட்பரி (Bradbury), க்ளார்க் (Clarke), டாஃப்ளர் (Doffler) இந்த மாதிரி ஆட்களை எல்லாம் கூப்பிட்டு பேச வைப்போம். அதில டாக்டர் ஜான்ஸ்டன்னு (Johnston) ஒருத்தர் இருக்கார். பயோ கெமிஸ்ட்ரி, எலெக்ட்ரானிக்ஸ் இரண்டிலயும் விற்பன்னர். அவர் போன தடவை போயிருந்தபோது ஒரு சித்தாந்தம் சொன்னார். சொல்லி முடிச்சப்புறம் எல்லோரும் சிரிச்சோம்,ஏதோ போட்டுட்டு உளறார்ன்னு. ஆனா, இன்னைக்கு அவர் சொன்னதில் முதல் பாதி நடந்திருக்கு!”
“ஜான்ஸ்டன் மற்ற கிரகங்களில் அல்லது ஸூப்பர் நோவாக்களில் நம்மைவிட புத்திசாலித்தனமான உயிர்கள் இருக்கிறதை தீவிரமா நம்பறவர். அவங்கள்ளாம் நம்ம கூட மன அலைகள் (mind waves) மூலம் தொடர்பு கொள்ளுவாங்கன்னு நம்பறவர்”
“மன அலைகள்?”
“ஆமாம் ! அவர் என்ன சொன்னார் தெரியுமா? நம்ம நாகரிகம்,விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் அவங்க மாதிரி ஸூப்பர் நோவாக்களில் இருக்கிற ஸூப்பர் ப்ரெய்ன்களோடஒப்பிட்டால் ஒரு தூசிக்கு சமானமாகும்.அவங்க ஒரு கணத்தில் நம்ம உலகை எடுத்து ஆள முடியுமாம்”
“எப்படி?”
டாக்டர் சிவ்குமார் ஒரு முழுங்கு எடுத்துக்கொண்டு தொடர்ந்தார், “அங்கிருந்து அனுப்புற எண்ண அலைகள் மூலம் ! கேளுங்க ….ஒரு மனிதனுடைய மூளையில் ஒரு பாகத்தில் விதை விதைக்கிறாற்போல மையக் கேந்தித்திரத்தை உருவாக்கிப் படிப்படியா அந்தக் கேந்திரம் விரிவடைய, கொஞ்சம் கொஞ்சமா ஒரு நாள், இரண்டு நாளிலேயே அவன் மற்ற மனிதர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருவானாம். “எண்ணப் பார்வை” னு சொல்றார்.அதை, அந்தப் பார்வையில் ஒரு கட்டளை இருக்குமாம்.கொஞ்சம், கொஞ்சமா, அவன் மூளை விஸ்தாரம் அடைந்து அவன் தேசத்தை, அதுக்கப்புறம் அண்டை தேசத்தை, அப்புறம் ஒரு கண்டத்தை, அப்புறம் உலகையே தன்னுடைய ஆக்கிரமிப்பில் கொண்டு வந்திருவானாம்…”
“சேச்சே, என்ன டாக்டர் சயின்ஸ் ஃபிக் ஷன் மாதிரி ரொம்ப ரீலா இருக்கு!”
“அப்படித்தான் நானும் நினைச்சேன். டாக்டர் ஜான்ஸ்டன் ஸூப்பர் நோவாவைப் பற்றியும், ப்ராபபிலிட்டி (Probability) பற்றியும் பேசறதை நீங்க கேட்டிங்கன்னா இது நிச்சயம் சாத்தியம்ன்னு தோணும். அதைவிட…”
டாக்டர் சிவ்குமார் மற்றொரு ஸ்காட்ச் வாங்கிக்கொண்டு அதில் ஐஸ் கட்டிகளைக் குலுக்கி ஒரே விழுங்கில் துரத்தினார்.
“இதெல்லாம் நீங்க சொல்ற மாதிரி ரீல்னுதான் நானும் நம்பிக்கிட்டு இருந்தேன், இன்னிவரைக்கும்….”
“இன்னிக்கு என்ன?”
“நீங்க சொன்னிங்களே, மாலைல உங்களை வந்து சந்திச்ச பேஷண்ட் பத்தி…அதுதான் என்னைக் கொஞ்சம் திகைக்க வைக்கிறது,,”
“ஏன்/”
“டாக்டர் ஜான்ஸ்டன் சொன்னபடி முதல்ல அந்த விதையை எப்படி விதைப்பாங்க தெரியுமா? ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து, மன அலைகள் அல்லது தனிப்பட்ட ரேடியேஷன் மூலம் அவனுடைய மூளையின் ஒரு பாகத்தை ஆக்கிரமிப்பாங்களாம். அந்த ஆக்கிரமிப்புக்கிங்கிறது என்னன்னு அவர் சொன்னார் தெரியுமா? முதல்ல ஒரு வார்த்தை, ஒரு சித்தாந்தம் மூளையிலிருந்து நீக்கப்படுமாம். உதாரணத்துக்கு, என்ன வார்த்தை சொன்னார்…? கல்யாணம்….”
“மை காட்” என்றார் நம்பி ராஜன்.கொஞ்சம் நேரம் கழித்து நெர்வஸாகச் சிரித்தார்.
“சேச்சே …இம்பாஸிபிள் டாக்டர்”
“லெட்ஸ் ஹோப் ஸோ” என்றார் சிவகுமார்.
“நீங்க என்ன சொல்றிங்க டாக்டர்?”
“அந்த ஆள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள், இவன் மூலமா விண்வெளியில் உள்ள நம்மை விட மஹா புத்திசாலியான உயிரினங்கள் இவனை ஆக்கிரமித்து, இவன் மூலமா நம் உலகத்தை எடுத்தாளப் போறாங்க ! அதுனால நாளைக்கு உங்களைப் பார்க்க வரமாட்டான்னு சொல்றேன்”
“பின்ன எங்கே போவான்?”
“எங்க போவான்? டில்லிக்கு. முதல்ல இந்திய அரசாங்கத்தைக் கவர்ந்து கொள்ள….அங்க போய் ..” டாக்ட சிவ்குமார் சற்று நிதானித்து, தலையை குளித்த காகம் போல உதறிக்கொண்டார்.
“சே,அப்படி எதுவும் நடக்காது.எல்லாம் இந்த ஸ்காட்ச் செய்யற வேலை. டாக்டர் ஜான்ஸ்டன் ரொம்பவே அவுட் திங்க்கர் (Out thinker) ! நீங்க கவலைப்படாதீங்க நம்பி ராஜன்.எதுக்கும் நாளைக்கு காலைல அவன் வந்ததும் எங்கிட்ட கூட்டிட்டு வாங்க”

“சரி” என்றார் நம்பி ராஜன். அவர் விரல்கள் நடுங்கின. அவருக்கும் ஸ்காட்ச் சாப்பிட வேண்டும்போல இருந்தது.

துரை மணி பார்த்தான்.நல்லவேளை இன்னும் மூடியிருக்க மாட்டார்கள்.மூடியிருந்தால்தான் என்ன? திறக்க வைத்துவிடலாம் என்று தோன்றியது.
துரை ஏர்லைன்ஸ் கட்டடத்துக்குள் நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தான். நிதானமாக ஒரு கவுண்டரை நோக்கி நடந்தான். அங்கே டிக்கெட் பெண்ணுக்கு எதிரே நாற்காலியில் வீற்றிருந்தவர் இவனைப் பார்த்தவுடன் பயத்துடன் எழுந்து விலகி நின்றார்.
“கான் ஐ ஹெல்ப் யு சார் ?” என்றாள் பெண் மரியாதையுடன்.
“டில்லிக்கு நாளைக்கு ஒரு டிக்கெட் வேண்டும்” என்றான்.

https://www.facebook.com/groups/383390689085382/permalink/1423563455068095/?mibextid=Nif5oz