மூன்று கவிதைகள்/ சுரேஷ் ராஜகோபால்

இன்றைய (26/05/2023) கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் தலைப்புக்கு எழுதி படித்த கவிதைகள் மூன்று (3)

மின்னல்

இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
விளைவாகப் பெரிய இடியோசை
இம்சை செய்தது, வினாடி
பொழுதில் பளிச்சென்ற
மின்னல் கண்களைக் கூசியது
அதிர்ச்சியைத் தந்தது
மீண்டபின் பார்த்தேன்
பெருமழை பெய்தது
இடியும் மின்னலும் நடுவே வந்துபோயின…

கண்ணாடி

அழகான ஒப்பனை செய்தது
திருப்தி தராமல் சரிசெய்யக்
கண்ணாடியைத் தேடினேன் அந்த
அறையில் இல்லையே ஏன்?
வெளியே வந்த பொழுது
எதிரே ஆளுயர கண்ணாடி
வரவேற்றது ; ஓடிச் சென்று
ஒப்பனை சரியா என்று பார்த்தேன்
திருப்தி இல்லை; ஒப்பனையில் குற்றமா?
ஆடியில் குற்றமா?

பூனை

மரத்திலிருந்து கீழே குதித்த
பூனை ஒன்று எதிரே அமர்ந்தது
“மியாவ்” என்ற போது புரியாமல்
“என்ன சொல்கிறாய்” என்றே கேட்டேன்
வீட்டில் பழகிய பூனையானதால்
உரிமையுடன் உள்ளே சென்றது
மகன் ஓடிவந்து சிறுதட்டினில்
பால் எடுத்து வைத்தான்
சத்தமிடாமல் சாப்பிட்டுச் சென்றது
“மியாவ்”வின் அர்த்தம் இப்போது புரிந்தது….

One Comment on “மூன்று கவிதைகள்/ சுரேஷ் ராஜகோபால்”

Comments are closed.