
(மே 26 ஆம் தேதி நடந்த கவிதை நிகழ்வில் படித்த மூன்று கவிதைகள்)
பூனை
உன் கண்களின் பளபளப்பை
எந்தப் பளிங்கினால் செய்தார் கடவுள்.
மெல்ல நடந்து அடுக்களைகளில் திருடி
நானா அது என்று ஒய்யாரமாய் பார்ப்பாய்.
புலி குடும்பத்தில் நீ பிறந்தாலும்
சூடு போட்டுக் கொண்டதால்
ஏமாற்றுகிறாயே உன்னையே நீ
நானும் என்னை அப்படித்தான் மாற்றி
மாற்றி ஏமாற்றிக் கொள்கிறேன்.
நீ கொடுக்கும் புனுகு தேவனுக்கும் மனிதனுக்கும்
நான் அதில் உன்னிடம் தோற்றேன்.
ஆனால் ஒன்று தோழி
உன்னைப்போல் என் குட்டியில்
ஒன்றை நான் உண்பதில்லை.
நீ ஒரு பெண் பூனை
நான் ஒரு பூனை பெண்
கண்ணாடி
பார்க்கப் பிடிக்கவில்லை அதை
இடதை வலமாக காட்டும்
வலதை இடமாக காட்டும்
ரகசியம் தெரிந்த அதற்கு
இனிய முகங்களை யாவது நிரந்தரமாக
வைத்திருக்கத் தெரியவில்லை
நிழலை நிஜம் என்று நம்பும் நீ
நிஜத்தை நகல் என்று நகைக்கிறாய்.
தெரு
அது நினைவில் அலையும் தெரு
மருதாணி மரம் சாமரம் வீசும்.
பிச்சிப் பூக்கள் கொஞ்சிப் பேசும்.
மணி ஓசையுடன் நடக்கும் களிறு.
சலங்கையுடன் ஆடும் பகல் வேடக்காரர்கள்.
சைகைகளால் பேசும் பெண்கள் பிடித்துள்ள ஜன்னல்
புத்தகத்தை வைத்து நடந்து கொண்டே
கள்ளப் பார்வையில் எதிர் வீட்டு அண்ணன்.
கீரையும், கனியும், அவலும்,
தலைசுமையாய் வந்து கூவும் குரல்கள்.
வாயில் தோறும் வெள்ளை பொடி கோலம்
இடுப்பின் வளைவில் அமர்ந்துள்ள நீர் குடம்
தலையில் வேடு கட்டிக் கொண்டே பேரம் பேசும் மகளிர்.
துளசி மாடத்தில் நீரூற்றும் தலைவிகள்
ராகம் போட்டு பாடம் படிக்கும் சுப்பிரமணி
தனக்குள்ளேயே பேசிக்கொள்ளும் பேச்சுப் பித்தி
அவளைக் காட்டியே உணவு ஊட்டும் அன்னையர்
இல்லாத கம்பீரத்துடன் தெருவில் போகும் ஆண்கள்
இன்றில்லை இன்று இல்லை
எந்த வீட்டின் கதவும் திறக்கவில்லை
திறந்தாலும் வெறிச்சென்று இப்போது இருக்கிறது
நினைவில் அலையும் தெரு
