
இன்றைய விருட்சம் கவியரங்கில் எழுதி வாசித்த கவிதை
1)பூனை
பூனை தானே என்று
நினைத்தது தப்பாகப் போய்விட்டது
அதற்கும் எனக்கும்
வம்புதும்பு ஏதுமில்லை
இருட்டில் அடுக்களையில்
பாத்திரம் உருட்டாது
பூனையிலேயே
ஜென்டில்மேன் பூனை அது
எனக்கும் நாய்க்கும்
பேய்க்கும் ஆகாது
தெருவில் என் வீடு
மட்டுமா இருக்கிறது
என் வீட்டில்
குட்டி போட்டால்
அருவருப்புடன் தூக்கி
வாசலில் விட்டேன்
அப்பாடா நிம்மதி
என்று இருந்துவிட்டேன்
மீண்டும் என் அறையில்
குட்டிகளை கொண்டுவந்து
வைத்தது
நான் மட்டும் என்ன
இளிச்சவாயனா
கோபம் தலைக்கேறியது
இந்த தடவை குட்டிகளை
சற்று துாரமாய்
எடுத்துச் சென்று விட்டுவிட்டேன்
போச்சு தாய்ப்பூனை
வீட்டையே சுற்றி சுற்றி வந்தது
அதைக் காணும்போதெல்லாம்
கொலை செய்தது போன்ற
குற்றவுணர்வு எனக்கு
செய்தது தவறுதான்
புத்திக்கு எட்டியது
தவறு செய்வது
மனித இயல்பு என்று
அந்தப் பூனைக்குத் தெரியுமா?
2)தெரு
தெருவின் முட்டுசந்து
வீதியின் அடையாளம்
நகரில் உள்ள
அத்தனை தெருக்களும்
எங்களுக்கு அத்துப்படி
திருவிழா காலங்களில்
திண்ணையில் வந்து அமர்ந்துவிடுவோம்
காறித் துப்பினாலும்
கண்டு கொள்ளமாட்டோம்
எருமைமாடு மேல்
மழைபெய்த கதைதான்
இப்போது ஏதோ வாழ்கிறோம்
வீடு ஏதோவொரு
தெருவில் இருக்கிறது
பாரம் தாங்காமல்
நிமிர முடியவில்லை
எதிர்த்த வீட்டில்
யார் இருந்தால் என்ன
பக்கத்து வீட்டில்
யார் இருந்தா என்ன
தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு!
