வீடு/ஜெ.பாஸ்கரன்

எளிமையான அறநூறுஅடி ஃப்ளாட் அது. சீனுவின் அப்பாவும் அம்மாவும் முதன் முதலாக வாங்கிய வீடு. இரண்டு பெட் ரூம், ஒரு ஹால், கிசசன், வாசல் பார்த்த பால்கனி, புறாக் கூண்டு போன்ற சிறிய வீடு. அருகிலிருந்த வேப்ப மரக் கிளையொன்று பால்கனியில் எட்டிப்பார்த்தபடி இருக்கும்!
மாடிப்படியேறியவுடன் முதல் தளத்தில் வலது கைப்புறம் இருக்கும் இந்த வீடுதான் அங்கிருந்த 16 ஃப்ளாட்டுகளில் பெரியது!
திருப்பதியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு சாலை விபத்தில் சீனுவின் அம்மா மைதிலி இறந்துவிட, அவன் அப்பா ஆன்மீகம், ஜோதிடம் என்று ஊர் ஊராகச் செல்லத் தொடங்கினார். மைதிலியின் நினைவுகள் அவரை அந்த வீட்டில் இருக்க விடவில்லை. வாடகைக்கு விடவும் மனமில்லாமல், விற்கவும் விருப்பமில்லாமல் ஹாலில் மைதிலியின் பெரிய படத்தை வைத்து, அருகே அவள் ஆசையுடன் மீட்டும் தம்புரவையும் வைத்தார். தினமும் பூமாலை சார்த்தி, வத்தி ஏற்றி வீட்டை ஒரு கோயிலாகவே மாற்றி விட்டார். ஆரம்பத்திலிருந்தே அவள் வீட்டில் வேலை செய்த கனகத்திடம் மாதம் பணம் கொடுத்து, வீட்டைப் பராமரிக்கவும், தினமும் மைதிலியின் படத்திற்கு பூ வைத்து வத்தி ஏற்றி வைக்கவும் ஏற்பாடு செய்தார். கீழ் ஃப்ளாட் கிச்சாமியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்து, கரண்ட் பில், வீட்டு மெயிண்டெனன்ஸ் என எல்லாவற்றுக்கும், தான் எங்கிருந்தாலும், மாதா மாதம் பணம் அனுப்பிவிடுவார்.
இராமேஸ்வரம் சென்றிருந்த போது, திடீர் மாரடைப்பினால் சீனுவின் அப்பா மறைந்து போனார்.
யூ எஸ் ஸிலிருந்து வந்த சீனு, அப்பாவின் காரியங்கள் முடிந்து, கிச்சாமி மாமாவைச் சந்தித்து, “அப்பா போன பிறகு எனக்கு இந்தியாவில் யாரிருக்கா. இந்த வீட்டை வித்துடலாமென்று நினைக்கிறேன்” என்றான்.
“உண்மைதான். இங்க ஒரு ப்ராபர்டிய மெயிண்டைன் பண்றதெல்லாம் கஷ்டம்தான் பா” என்றார் கிச்சாமி.
சாவியை வாங்கிக்கொண்டு தன் ஃப்ளாட்டைப் பார்க்கப் போனான் சீனு. வாசலில் அழகான கோலம் போட்டிருந்தது. கதவைத் திறந்தவுடன், பூ வாசமும், வத்தியின் வாசமும் மனதுக்கு இதமாக இருந்தன. ஹாலில் டீபாய் மீது படத்தில் அம்மா சிரித்துக்கொண்டிருந்தாள். அருகில் இடது பக்கம், எப்போதும் அவள் பாடும்போது மீட்டும் தம்புரா நின்று கொண்டிருந்தது. கனகம் நன்றாகத்தான் வீட்டைக் கவனித்துக்கொள்கிறாள்.
“எப்படா வந்தே?”
“அம்மா…”
“இளைச்சுப் போயிட்டயே.. ஒழுங்கா சாப்பிடறயா இல்லையா? தலை வேற காடா வளர்ந்து கெடக்கு. ஹேர்கட் போறதுக்கு நேரமில்லையா?”
“அம்மா..”
சீனுவுக்கு அம்மா பேசுவதுபோலவே தோன்றியது. பால்கனியைத் திறந்தபோது, வேப்ப மரக் கிளை காற்றில் சிலிர்த்தது.
பால்கனி, கிச்சன், பெட் ரூம், ஹால் என எங்கும் அம்மா.. அம்மா.. அம்மா..
வீட்டைப் பூட்டி கீழே வந்தவன், ஒரு முடிவுடன், மாலை வருவதாக கிச்சாமி மாமாவிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.
‘இந்த வீட்ல அம்மாவோட ஆன்மா இருக்கறாமாதிரி எனக்குத் தோன்றது. அப்பாவும், அம்மா மேலயும் இந்த வீட்டு மேலயும் அவ்வளவு ஆசை வெச்சிண்டிருந்தா. அதனால இந்த வீட்டை விற்க வேண்டாம்னு முடிவுகட்டிடேன் மாமா. யூ எஸ் லேர்ந்து மாசா மாசம் பணம் அனுப்பிடறேன். இப்ப மாதிரியே பார்த்துக்கங்க மாமா’
அம்மாவின் படத்திற்குப் பக்கத்தில் அதே சைஸ் அப்பாவின் படத்தை வைத்தான் சீனு. மாலைகள் போட்டு, வத்தி ஏற்றி வைத்தான். உடல் தரையில் பட விழுந்து வணங்கினான்.
பால்கனியிலிருந்து வந்த வேப்பங்காற்று, அவன் தலையைக் கோதிச் சென்றது.
தம்புரா இப்போது அம்மாவுக்கு வலது புறம் இருந்ததை சீனு கவனிக்கவில்லை!
.