
போஸ்டல் காலனி வீட்டில் அணில் தொல்லை தாங்க முடியவில்லை. ஆனால் சியாமளாதான் அணிலைக் கண்டிப்பதில்லை. பாத்ரூம்தான் அணிலின் வாசம்.
ஒருநாள் சியாமளா உற்சாகத்துடன் கத்தினாள். அணில் குட்டி அழகாய் இருக்கிறது.
நான் சியாமளாவைத் திட்டினேன். அது பண்ணுகிற அட்டகாசத்தை யாராலும்
பொறுத்துக் கொள்ள முடியாது.
ஒரு தடவை அணில் குஞ்சு கூட்டிலிருந்து நழுவி கீழே விழுந்து செத்துப் போய் விட்டது.
நாங்கள் திகைத்துப் போய்விட்டோம்.
அதன்பின் நானும் சியாமளாவும் அந்த பாத்ரூமைப் பயன்படுத்தவில்லை. மூடி வைத்துவிட்டோம்.
சியாமளாவிடம் சொன்னேன்.
“இந்தமுறை அணில் கூட்டைக் கலைத்துப் போட்டுடலாம்.’
சியாமளாவிற்கு வருத்தம்.
நான் தெருவில் துப்புறவு பணியாளர் கூப்பிட்டு
அணில் கூட்டைப் பிரித்து விடலாமென்று நினைத்தேன்.
தெருவில் போய் நின்று யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன்.
ஒருவன் தென்பட்டான். வீட்டிற்குள் வந்து பாத்ரூமைப் பார்த்தான்.
நாற்றம் சகிக்க முடியவில்லை. நான் ₹ 200 தருகிறேன் என்றேன்.
“டிபன் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்,” என்று கிளம்பிப் போனவன்.
வரவே இல்லை. அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒரு மணி நேரத்திற்குமேல் வீணாகி விட்டது.
சியாமளா நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
நானே கூட்டை அப்புறப் படுத்தினேன். நாற்றம் குடலையே பிடுங்கியது.
கூட்டை முழுவதும் பிரித்து சுத்தம் செய்தேன்.
அணில் திரும்பவும் வராமலிருக்க கூடு கட்டிய இடத்தில் துணியை திணித்தேன்.
பார்த்துக் கொண்டே இருந்த சியாமளா என்னைத் திட்டினாள்.
நாம் இருப்பதைப்போல அதற்கும் இடம் கொடுக்க வேண்டுமென்றாள்.
எல்லாம் முடிந்து பாத்ரூம் சுத்தம் அடைந்தது. சியாமளா என்னை அருவெறுப்புடன் பார்த்தாள்.
சியமளா ஒன்று சொன்னாள்.
“நீங்கள் இதுமாதிரி செய்வதால்தான் என் வயிற்றில் கூட எதுவும் தங்கமாட்டேங்கறது. “
அவள் சொன்னதைக் கேட்டு திகைத்தேன்.
அணில் சுற்றி சுற்றி சன்னல் பக்கம் வந்தது. துணி அடைக்கப்பட்ட இடத்தில் எப்படிப் புகுவது என்று யோசித்துக் கொண்டிருந்தது.
ஜன்னல் பக்கம் வெளியே பார்த்தேன்.
அணில் ஒரு கொம்பைப் பிடித்துக்கொண்டு உச்சியில் எதையோ தேடிக் கொண்டிருந்தது.
பாவம் அணில்.

அபாரம்
அருமையான கருத்து.
எல்லா.உயிர்களையும் நாம் சகித்து கொண்டு வாழப் பழக வேண்டும்.. மனிதன் விலங்குகளாக மாறக்கூடாது.