
எழுத்தாளர்களுக்கு
மௌனம்
விருப்பமொழி.
அதை
பொக்கிஷமாய்
பொதித்து வைத்திருந்தது
அந்த நூலகம்
ஒவ்வொரு
ரேக்கிலும்
பல அறிஞர்கள்.
தொட்டுத் தூக்கி
புரட்டப்
பின்னோக்கியக்காலம்
சிறு குழந்தையெனக்
கைப்பிடித்தபடி
நிற்கிறது
பணிக்காய்
குழந்தையை விட்டுச்செல்லும்
தாயைப்போல்
நினைவுகளைச் சுமந்தபடி
கடக்கிறேன்
ஒவ்வொரு ரேக்கைவிட்டு
தேவையானப்
புத்தகத்தை
கையில் எடுத்து
திரும்புகையில்
கைநீட்டி
தூக்கச் சொல்லும்
குழந்தைகளாய்
நிற்கின்றன
அத்தனை
புத்தகங்களும்
நாளைய வரும்வேளையில்
அழைத்துச்செல்கிறேன்
பொய்வாக்குறுதியோடு
மனம் கனத்தபடி
நகர்கிறேன்.
