ஐந்து நாட்களுக்கு முன்பு …/ராஜேஷ்குமார்

ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .
என்னை சந்தித்து ‘சார் ஒரு இரண்டு நிமிஷம் உங்களோடு பேச வேண்டும்’
என்றார்.
நானும் என்ன விஷயம் என்று கேட்டேன்.
அதற்கு அவர் “-சார் எனக்கு கல்யாணமாகி 25 வருடங்கள் ஆகிறது .
கல்யாணமாகி நான் என்னுடைய கணவர் வீடு சென்றதும்
என்னுடைய மாமனார் என்னைக் கூப்பிட்டு கண்டிப்பான குரலில் இந்த குடும்ப வழக்கப்படி இந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வாரத்திற்கு இரண்டு நாள் மௌன விரதம் இருக்க வேண்டும்.
நீ எந்த நாட்களை தேர்ந்தெடுக்கிறாய் என்று கேட்டார்.
நான் செவ்வாய் வெள்ளி என்று சொன்னேன்.
உன்னுடைய மாமியார் திங்கள் புதன் மௌன விரதம் இருப்பார்கள் .
நான் சனிக்கிழமை இருப்பேன். என்னுடைய மகன் ஞாயிற்றுக்கிழமை இருப்பான்.
மூத்த மகனும், மருமகளும் வியாழன், மற்றும் அமாவாசை,
பெளர்ணமி நாட்களில் மெளன விரதம் இருப்பார்கள்.” என்றார்.
அவர் சொன்னது போலவே
இந்த மெளன விரதங்களை கடந்த 25 வருட காலமாக கடைப்பிடித்து வந்தோம்.
என்னுடைய மாமனார் சமீபத்தில் தான் இறந்து போனார்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் என்னை கூப்பிட்டு
இத்தனை வருட மௌனவிரதம் உனக்கு கஷ்டமாக இருந்திருக்கும் .
நான் வேண்டுமென்றேதான் எல்லோரும் மௌன விரதம் இருக்க
வேண்டும் என்று சொன்னேன். ஏனென்றால் இது ஒரு கூட்டுக் குடும்பம்.
யாராவது ஒருவர் மௌனமாக இருந்தாலே பிரச்சினைகள் வராது என்பதால்
ஒவ்வொருவருக்கும் சில நாட்களை ஒதுக்கி கொடுத்தேன் என்று சொன்னார்.
நாங்கள் மௌனவிரதம் இருந்த வரை, எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையுமே
வரவில்லை. என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
இந்த முறையை இப்பொழுது உள்ள குடும்பங்கள்
கடைப்பிடித்தால் என்ன?
இதை வைத்து நீங்கள் ஒரு கதை எழுதுங்கள் என்று சொன்னார்
ஆஹா….. நான் எங்கே போனாலும் ஒரு கதைக்கான கரு
இலவசமாக கிடைத்து விடுகிறதே…..!

2 Comments on “ஐந்து நாட்களுக்கு முன்பு …/ராஜேஷ்குமார்”

  1. Super idea.
    முடிந்தால் வரும் புது தம்பதிகள் கடை பிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

  2. சண்டையை தவிர்க்க வித்தியாசமான மாமனார். இம்மாதிரியான ஒருவர் தேடினாலும் கிடைக்க மாட்டார்

Comments are closed.