ஆசாரக் கோவை 33—35/வளவ. துரையன்

பாடல் 33 : மலஜலம் கழிக்கும் திசை

பகற்றெற்கு நோக்கார்; இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

பொருள் :
பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கி
அமர்ந்து மலஜலம் கழியார். பகல்பொழுதில்
தீயினுள் நீர் ஊற்றார்.

பாடல் 34 : மலஜலம் கழிக்கும்போது

பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத் தல்லால் உமிவோ டிருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.

பொருள் :
பத்துத் திசையும் மறைத்திருப்பதாக மனதில்
பாவித்து அந்தரத்தில் செய்வதாக நினைத்து
எச்சில் உமிழ்தலும் மலஜலம்
கழித்தலும் செய்யவேண்டும்.

பாடல் 35 : வாய் கழுவக்கூடாத நிலைகள்

நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்;
வழிநிலை நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண் டல்லது பூசார்; கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.

பொருள் :

பாத்திரத்தில் நீர் எடுத்து வாய் கழுவ வேண்டும்.
முடியாதபோது நீர்நிலையில் நின்று கொண்டோ
நடந்து கொண்டோ வாய் அலம்புதல் கூடாது.
மனத்தால் பத்துத் திசையும் மறைத்து
அந்தரத்தில் செய்வதாகவே
பாவித்து செய்ய வேண்டும்