ஆட்டோ ராணி/விஜயலக்ஷ்மி கண்ணன்

‘அல்லி ராணி’ என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். ஆனால் இவள் ஆட்டோ ராணி.

சென்னை மைலப்பூரில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிற ஆட்டோ தான் நம் ஆட்டோ ராணி அகிலா ஓட்டும் வாகனம்.

அகிலா 10வது வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பெண்கள் பள்ளியில் படித்து விட்டு வேலை த் தேடி அலைந்த பொழுது சட்டென்று இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.
நாம் நமக்காக ஒரு தொழில் செய்யலாமே, எதற்கு வேலை தேடிக் கொண்டு, வேகாத வெய்யல், கொட்டும் மழை என்று பாராமல் அலையா அலைய வேண்டும் ? யோசித்து யோசித்து முடிவுக்கும் வந்துவிட்டவள் உடன் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் அவளுடைய தாய் மாமாவிடம் சென்று கடன் உதவி வேண்டும் என்று கேட்டாள்.

மாமாவுக்கு மிகுந்த ஆச்சரியம்.

பெண் ஆட்டோ ஒட்டுவதா என்று கேட்டு மறுத்த நிலையில் தன்னுடைய பிடிவாதத்தை விடவில்லை அகிலா.
ரொம்பவும் சொல்லிப் பார்த்தும். அகிலா விடாப் பிடியாக உறுதியுடன் இருந்தது கண்டு மாமாவும் சம்மதித்தார்.
உன் அம்மா அப்பாவைக் கேட்டு பிறகு ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி விட்டு அகிலாவைக் கிளப்பி அனுப்பி வைத்தார் மாமா தயாளன்.

முதலில் போய் டிரைவிங் பள்ளிக்குச் சென்று ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்ட அகிலா, பிறகு ஓட்டுநர் லைசென்ஸ், டோக்கன் ஆகியவை எல்லாம் வாங்கி தன்னை தயார் செய்து கொண்டு கடன் அப்பிளிகேஷன் விவரம் தெரிந்து கொள்ள மாமா தயாளன் வங்கிக்குச் சென்றாள்.

என்ன ஆச்சரியம்?

வாசலில் புதிய ஆட்டோ புது மண ப் பெண் போல மங்களகரமாக நின்று கொண்டு இருந்தது.
அகிலா சந்தோஷத்தில் குதித்தாள்.

ஆட்டோவை தடவிக் கொடுத்த அகிலா ஒரு மழலையை ரசிப்பது போல் ரசித்து ரசித்து மாமாவை அழைத்துக் கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் போகும் வழியில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று, ஆட்டோவிற்கு பெரிய ரோஜா மாலை ஒன்றை வாங்கிக் கொண்டு பூசாரியிடம் கொடுத்து சாவியையும் வைத்தது அர்ச்சனை செய்து கொடுக்கச் சொன்னாள்.
தட்டை வாங்கிக் கொண்டு பூஜை செய்து சாவியை எடுத்து அகிலாவின் கையில் கொடுக்கையில் மாமாவை அழைத்து வாங்கிக்கொண்டாள்.பக்குவம் தெரிந்த பெண்.
பிறகு ஆட்டோ வண்டி வீதியில் தேர் போலப் பறந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் அகிலாவையே, பார்த்து
அவள் தன்னம்பிக்கை கண்டு வியந்து போனார்கள்.
வீட்டுக்குப் போய் திருஷ்டி சுத்தி போட வேண்டும் என்று மாமா சொல்லிக் கொண்டே கூட வந்தார்.
பெண் என்றால் என்ன சாதாரணமா?
இந்த நூற்றாண்டின் சாதனைப் பெண்கள், சோதனைகள் பலவும் கடந்து சென்று வெல்லும் புதுமைப் பெண்கள் அல்லவோ?

“மாமா, மீட்டர்க்கு கட்டணம், மீட்டர் மேலே, கீழே என்று எதுவும் வாங்க மாட்டேன்.”

“பெண்களுக்குத் தான் முதல் வாய்ப்பு.பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டும் என்றால் நான் ஏற்றிக் கொள்ள மாட்டேன் மாமா” என்று தன்னுடைய உறுதி மொழியை சொல்லிக் கொண்டே வண்டி மயிலாப்பூர் நோக்கிச் சென்றது.

போகும் வழியில் ஒரு நடுத்தர வயது அம்மா நிறை மாத கர்ப்பிணியைக் கைப்பிடித்துக் கொண்டு இடது கை தூக்கி ஆட்டோவை நிறுத்திவிடும்படிக் கேட்கவே, “மாமா நீங்கக் கொஞ்சம் இறங்கி பாதை ஓரமாக நில்லுங்கள். நான் இவர்களை ஏத்திக்கிட்டு மருத்துவமனை வரை கொண்டுவிட்டு வந்துவிடுகிறேன்”,
என்ற அகிலா பம்பரம் போலச் சுழன்று தாயும் மகளும் ஏறி அமர்ந்து கொண்டவுடன் இசபெல்லாவை நோக்கிச் சென்றது ராணி. அது தான் ஆட்டோவுக்கு அகிலா வைத்திருந்த பெயர்.