என்ன செய்ய…?/கு.மா.பா.திருநாவுக்கரசு

ஓரிருவர் செய்தபிழை
ஒருசில நொடியில்,
ஓராயிரம் பயணிகளை
விபத்துக்குள்ளாக்க,

ஒரிசா மாநிலத்தில்
ஒதுங்கியே நின்றிருந்த
சரக்கு ரயில் மீது
இருப்பூர்திகள் ரெண்டு,

எதிர் எதிரே மோத
இடம்பெயர்ந்த பெட்டிகளுள்,
யார் யாரோ? எவர் எவரோ?
உதிரம் வழிய, உடல்கள் சிதைய

பரிதாபமாய்ப் பலரும்
பாலாசோர் பகுதியெங்கும்
அநியாயமாய்ப் பலியாகி
அறியாமலே மடிந்தார்!

அறிவியல் காலமிதில்
ஆபத்தைத் தவிர்த்திருக்க,
உணரிக் கவசமுண்டு – இவ்
வூர்திகளில் ஏன் இல்லை?

பிணங்களின் குவியல் கண்டு,
பிரளயத்தின் ஓலம் கேட்டு,
கனத்த மனங்களுடன்
கண்ணீரில் நனைகிறோம்!

இனியொரு நிகழ்விதுபோல்
ஏற்படாது என்பதற்கு,
எச்சரிக்கையாக இனி
என்ன செய்யப் போகிறோம்?