கண் மூடா தியானம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

மாட்டினத்தைச் சேர்ந்த Yak என்பதை தமிழில் கடமா என்று மொழிபெயர்க்கிறார்கள். செய்தித்தாளில் கடமாவை உணவுக்கான விலங்குகளில் ஒன்றாக அரசாங்கம் அனுமதி அளித்த செய்தியை வாசித்து அயர்ந்து போனேன். கடாமாவின் கறியும் பாலும் சந்தைப்படுத்தப்படுமென்றால் அதன் வருவாயைக்கருதி பலரும் அதை வளர்ப்பார்கள் கடமாத்தொகை வளரும் என்பது இந்த அறிவிப்புக்குப் பின்னுள்ள தர்க்கமாம். எனக்கு கடமாக்கள் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டு. அவற்றை நான் திபெத்திய காட்டெருதுகள் என்றே முன்பெல்லாம் பெயரிட்டு அழைத்திருக்கிறேன். பெரிய கண்களும் வலுவான உடலும் கொண்ட கடமாக்கள் தங்கள் வலு அறியாத அப்புராணிகள். சிக்கிம் சென்றபோது காங்டாக் நகரத்திற்கும் மேலே உள்ள ஏரியை கடமாவின் மேல் சவாரி செய்து சுற்றி வந்ததிலிருந்து எனக்கு கடமாக்கள் மேல் சிநேகம் உண்டானது. அதிலிருந்து கடமா செய்திகளை அவ்வபோது வாசித்து என் நட்பை உறுதிப்படுத்திக்கொள்வேன் ஏற்கனவே கடமாத்தொகை 58000 ஆக 2019 கணக்கெடுப்புபடி இருந்ததிலிருந்து 25 சதவீதம் குறைந்துவிட்டது. இப்போது உணவு மிருகமாக அறிவிக்கப்பட்டதால் கறிக்காக எத்தனை கொல்லப்படும் என்று நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. சாந்தமான கடமா சவாரியில் மலையுச்சி ஏரி ஒன்றை சுற்றிவருவது போன்ற கண் மூடா தியானம் வேறொன்று எனக்கு வாய்த்ததில்லை. என்னுடைய நாட்குறிப்புகளில் கடமா சவாரியின்போது எனக்கு மனதிற்குள் தோன்றிய கம்பனின் சுந்தரகாண்ட வரி ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்’ ஐ குறித்து வைத்திருக்கிறேன். ஏனிந்த தொடர்புறுத்தல் என்று எனக்கு நனவுபூர்வமாகத் தெரியவில்லை. கடாமாவின் கண்களால் ஐம்பூதங்களின் கலவையினால் உருவாகும் விகாரங்களைக் கண்டதால் இருக்கலாம். விழிப்படலங்களற்ற கடமாவின் அகன்ற விழிகள் காண்பதுதான் என்ன?