
நேரம் முதிர
வெம்மையாய் விழும் காலையொளியில்
சிறிதேனும் அசையாது உறைந்துள்ள
அச்சிறு கிளை
கால்நுனி மீதிருந்த வெளிச்சம்
கரங்களை அடைந்தது
கைபேசியில் கவிந்துள்ள திரையின் உறக்கம்
அழைப்பை விழைந்திருக்க
யாருடன் முதலாவதாக பேச என்று எண்ணும்போது
செவிக்குள் கரைந்த கடைசி சொற்களிலொன்று
சிறகடக்கி அச்சிறு கிளை அசைய இறங்கிய
மணல் மேணி குருவியின்
இலைகளின் அடர்வில்
முதல் கிரிச்சிடலாய்க் கனிந்தது.
- எஸ் . சண்முகம் –
(எண் ; 110 )

