
2022ம் ஆண்டிற்கான ஞானபீட விருது கொங்கணி மொழி எழுத்தாளரான தாமோதர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் கேரளாவில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஒரு இலக்கியக் கருத்தரங்கில் அவரை சந்தித்தேன்.பல் வேறு மாநிலங்களிலிருந்து முக்கிய படைப்பாளிள் கலந்து கொண்டார்கள்.தமிழ் நாட்டிலிருந்து நானும் எழுத்தாளர் சல்மா அவர்களும் கலந்து கொண்டோம்.
மூன்றாவது நாள் எழுத்தாளர்களுடன் கேரள முதல்வர் தோழர்.பினராய்விஜயன் அவர்கள் கலந்து கொண்டு எங்களில் ஒருவராக நின்று கொண்டே எழுத்தாளர்களுடன் உரையாடிக் கொண்டே உணவருந்தினார்.அவருடைய எளிமையும் இயல்புத்தன்மையும் ஆச்சரியமாக இருந்தது.
மூன்றாவது நாள் மாலை நான் தெலுங்கு மொழியில் எழுதுகின்ற மதிப்பிற்குரிய எழுத்தாளர் சிவரெட்டி,கொங்கணி மொழி எழுத்தாளர் தாமோதர் ஆகிய மூவரும் வித்தியாசமாக ஏதாவது திண்பண்டங்கள் வாங்கிப் போகலாம் என்று ஒரு பெரிய பேக்கரிக்குள் நுழைந்தோம்.அவர்கள் இருவரும் அப்போதே சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்கள்.மூன்று பேரும் ஜிப்பா அணிந்திருந்தோம்.எங்கள் மூவரையும் கண்டவுடன் அந்த பேக்கரியின் உரிமையாளர் கல்லாவிலிருந்து இறங்கி ஓடி வந்து வரவேற்றார்.அவர் மலையாளத்தில் கேட்டது எனக்கும் புரிந்தது.
“நீங்கள் மூன்று பேரும் எழுத்தாளர்கள்தானே”
ஆம் என்று சொன்னவுடன் அவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.மூவரையும் கை குலுக்கி கட்டித் தழுவி வரவேற்று உட்கார வைத்தார்.ஏதோ காணாததை கண்டு விட்டது மாதிரி பேக்கரிக்குள் வருகிற வாடிக்கையாளர் ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
“என்னுடைய பேக்கரிக்குள்ளே மூன்று எழுத்தாளர்கள்”
ஒவ்வொருவருக்கும் ஐநூறு ரூபாய் மதிப்புள்ள கிஃப்ட் பாக்ஸ் கொடுத்தார்.நாங்கள் பணம் கொடுத்த போது வாங்க மறுத்து விட்டார்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் எங்களை எழுத்தாளர்கள் என்று மட்டும்தான் அறிவார்.எங்கள் எழுத்தை அவர் படித்ததில்லை.எங்கள் மூவரையும் இதற்கு முன் சந்தித்ததும் இல்லை.அவரோ மலையாளம் பேசும் கேரளத்துக்காரர்.எங்களில் யாரும் மலையாளிகள் இல்லை.ஒரே அடையாளம்”எழுத்தாளர்கள்”
இங்கே எழுத்தாளர் என்று சொன்னால் பத்திரம் எழுதுபவரா என்றும் ரைட்டர் என்று சொன்னால் எந்த ஸ்டேஷனில் வேலை பார்த்தீர்கள் என்றும் கேட்கிறார்கள்.
மிகக் குறைந்த மக்கள் தொகையினர் பேசக் கூடிய கொங்கணி மொழிக்கு ஞானபீடம் விருது மூலம் பெருமை சேர்த்திருக்கும் எழுத்தாளர் தாமோதருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பாராட்டுகள்.