இனிக்கும் தமிழ் – 180/ டி வி ராதாகிருஷ்ணன்

நளவெண்பா

கற்பின்தாழ் வீழ்த்த கதவு
——————————-

எப்பப் பார்த்தாலும் அறம், பக்தி, துறவு, நிலையாமை என்று படிக்காமல்
இடையிடையே கொஞ்சம் ஜொள்ளு பாடல்களையும் அறிவோம்.

தமிழ் இலக்கியத்தில் . ஒரு எல்லை தாண்டாமல் மிக நளினமாக காதலை பார்ப்போம்

நள மன்னனுக்கும் தமயந்திக்கும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே
காதல். அன்னம் எல்லாம் தூதுவிட்டு முடிந்து விட்டது. நளன், தமயந்தி
இருக்கும் மாளிகைக்கு வருகிறான்.

முதன் முதலாக இருவரும் சந்திக்கிறார்கள்.

முதன் முதலாக காதலர்கள் சந்திக்கிறார்கள்.

என்னென்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.

புகழேந்தியும்..

மிக அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார்

நள மன்னனை பார்த்ததும் அவள் இது நாள் வரை கட்டுப் படுத்தி, அடக்கி வைத்து
இருந்த கற்பின் கதவு தாழ் திறந்தது என்கிறார்.

அவ்வளவுதான். மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறார்.

பாடல்

நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று

தீண்டும் அளவில் திறந்ததே – பூண்டதோர்

அற்பின்தாழ கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்

கற்பின்தாழ் வீழ்த்த கதவு.

பொருள்

நீண்ட கமலத்தை  = நீண்ட தாமரை போன்ற முகம் கொண்ட நளனை

நீலக் கடைசென்று = நீலோற்பலம் போன்ற கண்களை உடைய தமயந்தியின் கண்கள்

தீண்டும் அளவில் = தீண்டிய அந்த நேரத்தில்

திறந்ததே = திறந்து கொண்டதே

பூண்டதோர் = பூட்டி வைக்கப்பட்ட

அற்பின்தாழ = அன்பு மிக

கூந்தலாள் = கூந்தலை உடைய தமயந்தியின்

வேட்கை =  ஆசையை

அகத்தடக்கிக் = உள்ளத்துள் அடக்கி

கற்பின்தாழ் = கற்பு என்ற தாழ்பாள்

வீழ்த்த கதவு. = வீழ, திறந்து கொண்ட கதவு

என்ன ஒரு உவமை.

அவளுடைய மனம் என்ற அறையில், அவளுடைய நிறை தன்மை என்ற கதவுக்கு, கற்பு
என்ற தாழ்ப்பாள் போட்டு வைத்து இருந்தாள். நளனை கண்டவுடன், அவன் மேல்
கொண்ட காதலால் அந்த கற்பு என்ற தாழ்பாள் விலகி கதவு திறந்து கொண்டது
என்கிறார்.