தண்ணீர்க்குடம்/நாகேந்திர பாரதி

‘மத்தியானம் ரெண்டு மணிக்கு தெறிக்கிற வெயிலில் தான் தண்ணி எடுக்க போகணுமா’ பூவாயி எப்பவும் போல் பொலம்ப, கேட்காதது போல் கையிலும் தலையிலுமாக குடங்களை தூக்கிக்கொண்டு தூரத்துக் கண்மாய்க்குக் கிளம்பினாள் சுந்தரி .’பதில் சொன்னால் பதிலுக்குப் பதில் வரும் போய்த் தண்ணி எடுத்து வந்த மாதிரி தான்’ அந்த கண்மாயின் ஊத்து கிணற்றில் சொட்டு சொட்டாய் ஊற ,தண்ணிக்கு காத்திருக்கணும் . இரண்டு குடம் ரெம்பறதுக்கு எம்புட்டு நேரம் ஆகும் .சாயந்திரம் போனா ஊர்க் கூட்டம் சேர்ந்திடும்.அப்புறம் சண்டையில வேற நேரம் போய்விடும்.

‘வயக்காடு தான் கக்கூஸ் ன்னா இந்த ஒத்தையடிப் பாதையிலுமா’ என்ற அலுத்தபடி கவனமாக நடந்து போனாள் . சூரியன் ‘சுள்’ என்று அவளைச் சுட்டது. திரும்பி வரும்போது தண்ணீரோடு சேர்ந்து உடம்பு வேர்வை வேறு. முகத்தை துடைத்த முந்தானையிலும் வேர்வை ஈரம்.

‘ உஷ்’ என்று மூச்சு வாங்க குடங்களை இறக்கி வைத்துவிட்டு மூக்குச் சளியோடு வந்த பிள்ளைக்கு முந்தானையால் மூக்கைத் துடைத்துவிட்டு ‘அப்பாடி’ என்று படுத்தாள். ‘இதையெல்லாம் பார்த்துத் துடைக்காம ஏதோ நினைச்சுக்கிட்டு பாக்கை இடிச்சுக்கிட்டு படுத்துக் கிடக்க வேண்டியது ‘என்று முணுமுணுத்தாள்.

அதைக் கூட பூவாயி காது கிரகித்து வாங்கி விட்டது. ‘ஆமாண்டி நானே கண்ணு கெட்டுப் போயி கிடக்கேன். இதெல்லாம் தெரியுதா ‘ என்றபடி , பகல் முழுக்க முள்ளு வெட்டிவிட்டு சாயந்திரம் அலுத்துப் போயி வீடு திரும்பி வரும் முனுசாமிக்கு மூட்டிக் கொடுக்க என்ன சொல்லலாம் என்று யோசித்தபடி இருக்கும் பூவாயியைப் பார்க்க சில சமயம் பாவமாக இருக்கும் சுந்தரிக்கு, ‘ வாழ்ந்து கெட்டு ஓஞ்ச கட்ட’ என்று நினைத்தபடி எழுந்து காபி தண்ணி போட்டு வந்து கொடுத்தாள் சுந்தரி, தன்னுடைய சேலைத் தலைப்பில் சூடான தம்ளரைப் பிடித்துக் கொண்டு உறிஞ்சிக் குடித்த பூவாயி ‘சூடு கம்மி’ என்று அதிலும் ஒரு குத்தம் சொன்னாள் .

சுந்தரி எல்லாத்தையும் கண்டு கொள்வதில்லை. பெருக்கி முடித்து நிமிர்ந்த சுந்தரிக்கு வாசலில் சப்தம். ‘வந்தாச்சு சாராய சாமி ‘என்று நினைத்துக் கொண்டாள் . ‘கரிக்காசுக்காக வெயில்ல கிடந்து கருவ வெட்டிட்டு வர்ற புள்ளைக்கு சாராயம் தான் சுகம் ‘என்று அதுக்கும் வக்காலத்து வாங்குவா அம்மாக்காரி.

முனுசாமி நுழைந்த வேகத்தில் அந்தத் தண்ணி குடத்தில் இருந்து டம்ளரில் மொண்டு முகத்தில் படபடவென்று தண்ணீர் அடித்துத் தேய்த்துக் கொண்டு வந்து உட்கார்ந்தான்.
‘ ஏ புள்ள சோத்தப் போடு’ என்றதும் புள்ளையக் கொண்டு வந்து அவன் மடியில் உட்கார்த்தி விட்டு தட்டை எடுத்து வந்து போட்டு, பழைய சோறு, ஊறப் போட்ட மிளகாய் வைக்க, பையனுக்கும் ஊட்டிவிட்டபடி சாப்பிட்டான் முனுசாமி. உள்ளே இருக்கின்ற சாராயத்திற்கு உரமாகப் போய் விழுந்தது அரிசிச் சோறு .

‘ஏண்டா நேத்துல இருந்து கேட்கிறேன். வெத்தலை வாங்கிட்டு வந்தியா ,வழக்கம்போல மறந்துட்டியா , பொண்டாட்டி வந்ததும் அம்மாவ மறந்துட்டியா’ என்று பூவாயி கேட்டாள் . இடுப்பு வேட்டிக்குள் சொருகி இருந்த வெத்தலையை எடுத்து நீட்டினான் அவன். ‘அவ்வளவு ஞாபகம் இருக்கா’ என்றபடி வாங்கிக் கொண்டாள் . ‘ இடிச்சு வச்ச பாக்குக்கு ஜோடி கிடைச்சாச்சு. போட்டுக் குழப்பிக்கிட்டு பழைய நிலைக்குப் போக வேண்டியதுதான்’ என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி. ‘ஆமாண்டி பழைய நினைப்புத்தான் ‘ என்றாள் பூவாயி. நாம நினைக்கிறது கூட இந்தக் கிழவிக்கு எப்படிக் கேக்குது , அய்யய்யோ , கிழவி ன்னுட்டமே ‘ என்று பார்க்க பூவாயி இவளை முறைத்துப் பார்த்து விட்டு அந்தப் பக்கம் திரும்பி முனகினாள் . . ‘ம் , இந்தப் பவிசு எத்தனை நாளைக்கு இவளுக்கு, என் வயசும் வரத்தானே போகுது ‘

இப்போது முனுசாமிக்கு சாராயம் வேலை செய்ய ஆரம்பித்தது. ‘ உதைச்சேனா’ என்று காலைத் தூக்கி முழங்காலை மடித்து தண்ணி குடத்தைப் பார்த்து உதைக்கப் போனான் கால் நின்னுடுச்சு . தண்ணி குடத்துக்கு பக்கத்துல புள்ள கிடக்கிறதைப் பார்த்து மடக்கின கால அடக்கிட்டான், கால் நின்னுடுச்சு . தண்ணி குடத்துக்குப் பக்கத்துல புள்ளயைப் படுக்கப் போட்டது சுந்தரி. ‘ வெயில்ல காஞ்சி எடுத்து வந்த தண்ணி ஆச்சே’ .’ எத்தனை பேரை எப்படி எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு ‘ என்று நினைத்தபடி படுத்த சுந்தரி மேல் விழுந்தது முனுசாமி கை .’இது வேற ’ என்றபடி ஒதுக்கித்தள்ளி விட்டு திரும்பிப் படுத்தாள் .
———————————–