பிக்னிக்/புவனா சந்திரசேகரன்

சங்கர் அவசர அவசரமாக அலுவலகத்திற்குச் கிளம்பிக் கொண்டிருந்தான். யாமினி தயங்கியபடி அருகில் வந்தாள்.

” என்னங்க, மறந்துராதீங்க. குழந்தை கிட்ட நாளைக்கு பிக்னிக் கூட்டிட்டுப் போறதா பிராமிஸ் பண்ணிருக்கீங்க. அடுத்த வாரம் ஸ்கூல் வேற திறக்குது. லீவுக்கும் எங்கயும் கூட்டிட்டுப் போலை. கேன்ஸல் பண்ணினா ஏமாந்து போயிடுவா. ஞாபகம் வச்சுக்கங்க” என்று யாமினி சொல்ல, சங்கர் தன்னுடைய மனதில் பொங்கிய எரிச்சலை அடக்கிக் கொண்டு அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

” தெரியும் யாமினி. நல்லா ஞாபகம் இருக்கு. மஹிமாக் குட்டி எனக்கும் செல்லப் பொண்ணு தான். உனக்கு மட்டும் இல்லை. நாளை காலையில் முட்டுக்காடு போகலாம். நீ ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிக்கோ. மத்தியானம் வெளியே சாப்பிட்டுட்டு வரலாம்” என்று சொல்ல, யாமினியும் மகிழ்ச்சியை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சங்கர், சென்னையில் இருக்கும் ஒரு பிரபல வக்கீலின் அலுவலகத்தில் வேலை பார்க்கிறான். சில சமயம் முக்கியமான வேலை இருக்கும் போது விடுமுறை நாட்களிலும் போக வேண்டி இருக்கும். அதற்காகத் தான் யாமினி பயப்பட்டாள்.

யாமினி பயந்தது போலவே ஆனது. அடுத்த நாள் வரச்சொல்லி வக்கீல் சொல்ல, சங்கர் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வாக்களித்திருப்பதைப் பற்றி மெல்ல அவரிடம் எடுத்துச் சொன்னான். அவர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தன. கோபத்துடன் அவனை வெறித்தார். அவருடைய வாயிலிருந்து வசை மொழிகளின் அணிவகுப்பு ஆரம்பிப்பதற்குள் அவருக்கு ஏதோ தொலைபேசி அழைப்பு வந்துவிட்டது.

” ஓ, அப்படியா? சரி, நல்லதாப் போச்சு ” என்று பேசிவிட்டு நிமிர்ந்தவர், சங்கரை பார்த்து,

” உன்னோட அதிர்ஷ்டம் கேஸோட ஹியரிங் தள்ளிப் போயிடுச்சாம். நாளைக்கு உன் பொண்ணோட பிக்னிக் போயிக்கோ தாராளமா. ஆனா, நாளை மறுநாள் வேலையை ஆரம்பிச்சிரணும்” என்று ஒருவழியாக அனுமதி வழங்க, சங்கரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

மாதக் கடைசி ஆகிவிட்டதால், வங்கியிலும் பேலன்ஸ் குறைந்து சுருங்கியிருந்தது. இருந்ததை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவர்கள் கிளம்பும்போது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அஞ்சலை, கண்ணீரும் கம்பலையுமாக வந்து சேர்ந்தாள். முதல் நாள் சாயந்திரம் பெய்த பேய் மழையில் அவளுடைய குடிசை வீடு இடிந்து பொருட்களும் நாசமான தகவலைச் சொல்லி அழுதாள்.
“குழந்தைங்களுக்கு சாப்பிடக் குடிக்கக் கூட ஒண்ணும் இல்லைம்மா” என்று அழுதவளைப் பார்த்தால் பரிதாபமாகத் தான் இருந்தது.

சங்கர் ஒன்றும் பேசாமல் பர்ஸில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட, யாமினியும் பிக்னிக்குக்காக செய்து வைத்த தின்பண்டங்களை அஞ்சலையிடம் கொடுத்து விட்டாள்.

அஞ்சலை கிளம்பிச் சென்றதும், சங்கரும், யாமினியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றார்கள்.

” அப்பா, டோன்ட் வொர்ரி. அடுத்து எப்பவாவது லீவு கெடைக்கும் போது பிக்னிக் போயிக்கலாம்” என்று சிரித்தபடி சொல்ல, சங்கர் தனது மகளைப் பெருமையுடன் பார்த்தான்.

‘ பணம் இல்லாட்டி என்ன? நம்மை மீறி நடக்கற விஷயங்களைப் புரிஞ்சுக்கற குழந்தையைக் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி’ என்று நினைத்தபடி மனைவியைப் பார்க்க அவளும் அவனுடைய மனதில் ஓடிய எண்ணத்தைப் புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.

” ஸ்நாக்ஸ் இல்லாட்டி என்ன? வெளியே ஹோட்டலில் சாப்பிட முடியலைன்னா என்ன? பிளான் பண்ணியபடி பிக்னிக் போயிட்டு வரலாம். சேந்து இருக்கிறது தான் முக்கியம். சாப்பாடு முக்கியமில்லை ” என்று சங்கர் சொல்ல, மூன்று பேரும் கை கோர்த்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.