பிக்னிக்/ரேவதி பாலு

டிசம்பர் மாத அதிகாலையில் தெருவில் தன் தம்பி பாலாஜியுடன் நடந்து கொண்டிருந்தாள் ரமா.
” இங்க பக்கத்துல ஒரு பூங்கா இருக்கு அதுல தான் நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வேன்.” என்றான் பாலாஜி. இருவரும் பூங்காக்குள் நுழைந்தார்கள். ஆஹா என்ன அழகான காட்சி. நாலா பக்கமும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, நடுவில் ஒரு குளம். முழுவதும் விரிய ஆதவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம். அதில் உல்லாசமாக நீந்தி கொண்டிருக்கும் வாத்துகள். பரவசப்பட்டு போன ரமா “திவ்யாவுக்கும் ஷங்கருக்கும் இதை காட்டணுமே” என்றாள் . திவ்யாவின் அரை வருட பள்ளி விடுமுறைக்காக ரமா திவ்யா சங்கர் மூவரும் பிலாயில் ரமாவின் தம்பி பாலாஜி வீட்டிற்கு வந்திருந்தனர். அடுத்த நாள் அவர்களை பிலாய்
ஸ்டீல் பிளாண்டுக்கு அழைத்து போய் சுற்றி காட்டுவதாக ஏற்பாடு . அதற்காக அனுமதி வாங்குவதற்காக பாலாஜி சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்திக்க வேண்டி இருந்தது.
அவன் சொன்னான். “நீ சங்கர் திவ்யா மூன்று பேரும் ஒரு பிக்னிக் மாதிரி மாலையில் இங்கே வரலாமே எனக்கும் வெளியே போக வேண்டி இருக்கிறது உங்களுக்கும் பொழுது நன்றாக போகுமே”
பாலாஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் அந்த ஊரில். ரமா எல்லாருக்குமாக இரவு டின்னருக்கு சமைத்து வைத்துவிட்டு கையில் சில சிற்றுண்டிகள் எடுத்துக் கொண்டு பூங்காவிற்கு தன் கணவர் மகளுடன் சென்றாள்.
பூங்காவில் நட்ட நடுவே இருந்த குளத்தையும் அதில் நீந்தி கொண்டிருந்த வாத்துகளையும் பார்த்து திவ்யா பரவசமாகி போனாள். “ஆஹா எனக்கு ஒரு வாத்து குட்டியை எடுத்து தூக்கிக் கணுமே ” என்றாள்.
” சும்மா கிட்ட போய் பாரு. பிடிக்க எல்லாம் வேண்டாம்” என்று சங்கர் அவளை கைபிடித்து குளத்திற்கு அருகே அழைத்துக் கொண்டு போனான்.
ஆர்வமாக எட்டிப் பார்த்த திவ்யா சட்டென்று கால் இடற குளத்திற்குள் தடுமாறி விழப்போனாள்.
சங்கர் அவள் கைகளைப் பிடிக்க ரமா ஓடி வர இருவருமாக அவளை மேலே தூக்கி கரையில் உட்கார வைத்தார்கள்.
சிறிது நேரம் திவ்யா எதுவும் பேசவே இல்லை. பயந்து போய் இருக்கிறாள் என்று நினைத்து சங்கர் அவளை முதுகில் தட்டிக் கொடுக்க ரமா அவளை பிடித்து தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டாள்.
” உங்கள மாதிரி அம்மா அப்பா கூட போய் இருந்தா நேத்திக்கு அவங்களையும் காப்பாத்தி இருக்கலாம் இல்லையா.” என்றாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் சங்கரும் ராமாவும் முழித்த போது அவளே சொன்னாள். “அதாம்மா நேத்திக்கி நம்ம டிவில பார்த்தோமே .ரெண்டு பசங்க என்ன மாதிரி தனியாக குளத்து கிட்ட போயிட்டு அதுல விழுந்து மூழ்கி போய்ட்டாங்க. அவங்கள காப்பாத்த யாருமே இல்லேன்னு.” என்றாள் திவ்யா.

ரமாவுக்கும் ஷங்கருக்கும் தூக்கி வாரி போட்டது. ஏழு வயது குழந்தை திவ்யா மனதை நேற்று டிவியில் பார்த்த சம்பவம் எப்படி பாதித்திருக்கிறது என்று நினைத்து அதிர்ந்து போனார்கள்.