
என் பெரியம்மாவிடம்
ஒரு ஊசி நூல் இருந்தது….
கையில் அல்ல, அது
அவள் மனசில்….
அதை வைத்து தைத்தாள் உறவுகளை…
எப்போதும் கனலும்
சினத்துடன் இருக்கும்…
பாட்டியை தன் மனத்துடன் பிணைத்தாள்
அண்ணியை அண்ணனுடன்;
அடங்கா தம்பியை,
தன் வேலை பிழைப்பு டன்,
அக்காவை அவள்
புக்ககத்து உறவுகளுடன்;
பெரியப்பாவை தன்
மூத்த மகனுடன்;
தைத்தவள் …
தன்னை மட்டும்
தனியளாக்கி கொண்டாள்.
ஏனென்று கேட்டதற்கு;
“இதாண்டி சௌகரியம்”
எல்லோருக்கும்
எனக்கும்; என்றாள்: சிரிப்பு
முகம் மாறாமல்
பார்வை மட்டும்
எங்கோ! அடுத்த தையல் எதிர் நோக்கியா?
