(09.06.2023 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற கூட்டத்தில் வாசித்த கவிதை)
–

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை
அண்ணா சொல்வார்
‘தாங்க முடிலெ இவ பட்டுப் பொடவெ மோகம்
சம்பாதிப்பதெல்லாம் அதுக்கே போறது’
தோழி சொல்வாள்
‘எம்பையன் எல்லாத்திலெயும் நல்லவந்தான்
ஆனா படிக்கறதே இல்லெ’
என் மருமகள் அலுத்துக் கொள்வாள்
என் பேத்தி சாப்பிடுவதே இல்லையென
நான் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை
என் படுக்கையறை பிரச்னையை
என் வேலைக்காரியின் பிரச்னை
அவள் குடிகார கணவன்தான் என
அவளுடைய ரத்தம் கொட்டும் நெற்றி
ஊருக்கே அறிவித்துவிடும்
சில பிரச்னைகள்
வருடக் கணக்காய் தீருவதில்லை
அண்ணாவின், தோழியின், மருமகளின்
பிரச்னைகளை போல
தீர்ந்துவிடுகின்றன
ஒரு சில
என்னுடையதை
என் வேலைக்காரியுடையதைப்
போல
யமனுடைய தயவால்

அருமை.