சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின்/அவினாஷ் ஸ்ரீகாந்த்

சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின் கூடத்தில் சுவாமியின் எதிரில் அமர்ந்திருந்தேன்.

“நண்பா ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்திரி’ என்ற நூல் பற்றி அறிவாயா?”

“அறிவேன் சுவாமி. ஆனால் படித்தது இல்லை சுவாமி.”

“சாவித்திரி புத்தகத்தை யாரோ இந்த பிச்சைக்காரனுக்குக் கொடுத்தார்கள். இதை உனக்குக் தருகிறேன். இதை நீ படிக்க வேண்டும் என இந்த பிச்சைக்காரன் விரும்புகிறான். இந்த நூல் எத்தனையோ சாதகர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த பிச்சைக்காரன் இந்நூலைக் கண்டிப்பாக நீ படிக்க வேண்டும் என விரும்புகின்றான்.”

“நான் படிக்கிறேன் சுவாமி.”

புத்தகத்தை சுவாமியிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். இரண்டு தினங்கள் சுவாமியுடன் இருந்துவிட்டு ஊர் திரும்பினேன்.

ஊர் திரும்பியதும் சுவாமி கொடுத்த சாவித்திரி நூலைப் படிக்க ஆரம்பித்தேன்.

அது ஒரு ஆங்கிலக் கவிதை நூல். அந்நூலில் என்னால் ஒரு சொற்றொடரைக்கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் அறிந்த சில சுவாமி பக்தர்கள் அந்த நூலைப் படித்து பரவசமாகி எப்போது என்ன பேசினாலும் சாவித்திரி நூலையே மேற்கோள் காட்டி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல், மிகுந்த வருத்தத்தோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் சாவித்திரியைப் புரிந்து கொள்வது என் சக்திக்கு அப்பாற்பட்ட காரியம் என அறிந்து கொண்டேன். சுவாமியிடம் சென்றேன்.

“சுவாமி என்னால் சாவித்திரி நூலைப் படிக்கவே முடியவில்லை. அதிலிருந்து எதையுமே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.”

சுவாமியிடம் மிகுந்த துயரத்தோடு கூறினேன்.

சுவாமி என்னைக் கனிவோடு பார்த்தார்.

“நண்பா, சில அன்பர்களுக்கு சாவித்திரி மிகவும் சுலபமாகவும், சக்தி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். மற்றும் சிலருக்கு J.K. சுலபமாக இருக்கும். எனவே கவலை வேண்டாம் நண்பா. சாவித்திரியில் எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என் தந்தை ஸ்ரீ அரவிந்தர் திருவாயிலிருந்து வந்தது. எனவே சாவித்திரி நூலை உனக்குப் புரிகிறதோ இல்லையோ, ஒரு தடவை முழு நூலையும் வாசித்துவிடுவாயாக. ஒரு உன்னதமான மஹானின் சொற்களை நீ உச்சரிப்பதாலேயே என் தந்தை உனக்கு அருள்பாலிப்பார். எனவே சாவித்திரியை ஒரு முறை வாசித்துவிடு நண்பா.”

சுவாமியின் கருணை மிகுந்த அருள் என்னை சாவித்திரி நூலை வாசித்து முடிக்க வைத்தது.

சாவித்திரி நூலைப் படித்து முடிக்க எனக்கு சுமார் மூன்று மாத காலம் ஆனது. ஆனால் அதன் பயன் இன்றுவரை தொடர்கிறது.

எளிதில் கோபமும், வேகமும் அடையக்கூடிய என்னை சுவாமி சாவித்திரி நூலைப் படிக்க வைத்து கோபத்தையும் வேகத்தையும் கெடுத்தாண்டார் என்பதை அறிந்து கொள்ள எனக்கு வெகுகாலம் ஆயிற்று.

யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா