தேவை/ஆர். வத்ஸலா



பரங்கி தேசத்திற்கேற்ற சீருடையை
நம்மூரில் தாங்கி
புழுங்கி நிற்கும் சிறார்
தேர்வுக்கு முன்
ஓடியபடி கை கூப்ப

சூடிதார்களும்
புதிதாக ஏறிய முழுக் கால் சராய்களும்
இவருக்கு பக்தி செலுத்தும் சாக்கில்
தங்களுக்குள் புன்னகை பரிமாற்றம் செய்து கொள்ள

கடவுளை மறுக்கும் குழுவிலிருப்பவர்
பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வன்று
தோழர் பார்க்காத நொடியில்
சட்டென்று வணங்கி நிமிர

முன்னுச்சி நரையை சாயத்தில் மறைக்கும்
அடுத்த தெரு கன்னி
தன் பணியில் சேர்த்த சவரன்களில் திருப்தியடையும்
‘வரனை’ அனுப்பி வைக்க வேண்டி
ஒரு நிமிடம் உருகி நிற்க

கைத்தடியும்
நெஞ்சை உலுக்கும் இருமலுமாய்
எதிர் வீட்டு மாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்தே
கண்ணை இடுக்கிப் பார்த்து
தலையில் குட்டிக் கொண்டு
ஆதங்கத்துடன் ‘அநாயாஸேன மரணம்’
மந்திரம் முணுமுணுக்க

இப்படி எல்லாவற்றிற்கும் வசதியாய்
மூலைக்கு மூலை திடீரென முளைத்து
பிறகு
எப்போதைக்குமாக அமரும்
மற்ற பிள்ளையார்களை போலத்தான்
கொலுவீற்றிருந்தார்
அவரும்
எங்கள் பேருந்து நிலையத்தருகே
ஒரு மரத்தடியில்
மரத்தில் கட்டப்பட்ட ஒரு உண்டியுடன்

யதேச்சையாக காரை நிறுத்தி
மோதிரக்கை கூப்பிய
கனவானின் ‘கொள்ளை’ ஆசை நிறைவேற
அடித்தது அதிர்ஷ்டம் அவருக்கு

மேல் தட்டு தெய்வங்கள் பெற்று தந்த
அரசு நிலத்தில்
கனவானின் கொள்ளையிலொரு சதத்தால்
கலச கோபுரங்களும் நவகிரகங்களுமாய்
உருவான பெரிய கோவிலில்
காவி உடை தெய்வத்தின் அருளாசியுடன்
அமர்த்தப்பட்டு
பட்டு வைரம் வெள்ளைத் தோல் படை சூழ
பல கால பூசைகளுக்கு உரித்தவராய்
பதவி உயர்வு பெற்று போய்விட்டார்
அவர்

வெறிச்சோடி கிடந்தது சில காலம்
மரத்தடி

பின்பொரு நாள் முளைத்தது
குட்டிப் பிள்ளையார் ஒன்று
மறுபடியும் மரத்தடியில்
சிறு உண்டியுடன்
குட்டிக் கொள்ள
உருகி நிற்க
சட்டென்று வணங்கி நிமிர
இளசுகள் புன்னகை பரிமாற்றம் செய்து கொள்ள
ஓடியபடி கை கூப்ப