நிலவில்லா வானம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

நீரில்லா கடலும்,நிழலில்லா
வடிவமும்,
காரில்லா மேகமும், கதிரில்லா
வயலும்
பேரில்லாப் பொருளும் வீண்.

ஊரில்லா மக்களும், உதவி
இல்லா
உறவும், கோடையில்லாக்
குளிரும்,
கொடையிலா வள்ளலும் வீண்.

ஏரில்லா கழனியும், எருதில்லா
கலப்பையும்,
சீரிலாப் புகழும், சிங்கமிலா
வனமும்,
மானமிலா வாழ்வும் வீண்.

கூரில்லா வாளும், குறிப்பில்லாப்
பாட்டும்,
நாரில்லா வாழையும். நலமில்லா
உடலும்,
உண்மை இலாப் பேச்சும் வீண்.

என்றாலும்

கதிரில்லாப் பகலும், காரிருள்
இல்லா
இரவும் என்றும் இல்லை.
ஒருஓரம்
மறைந்து நின்றே ,’நிலவிலா
வானம்’
பற்றி வையகத்தார் பேச்சு
கேட்டிருக்கும்
புதுமை நிலா.