இரு கவிதைகள்/பிரதீபன்


    அறம் - 1
         

பெருஞ்செல்வர் இல்லம் அது;
உட்புற வளாகச் சுவரில்
சுத்திகரிக்கும்
எந்திரம் வைத்து
வெளியே
வழிப்போக்கர்கள்
நீர் அருந்த
வகை செய்தித்தார்
அவர்,
குடிநீர்,வீணாக்க
வேண்டாம் என்று
அறிவிப்பும்
செய்திருந்தார்;

வழிநடந்துவந்த
முதியவருக்குத்
தாகம் ஏதுமில்லை;
இருப்பினும்
குழாயைத் திறந்து
ஒரு வாய்
நீர் அருந்தினார்;
சுற்றி
ஒரு முறை பார்த்துவிட்டுக்
குழாயை முத்தமிட்டார்;
பின்னர்
நடக்கலானார்;

ஆம், சிறுவனாய்
இருந்த போது
தண்ணீர்ப் பந்தலில்
நீர் அருந்திய
நினைவு அவருக்கு.

       அறம்.2
      

ஒளியுமிழும் விளக்குகளால்
பெருஞ்செல்வரின்
இல்லம்
அணிசெய்யப்
பட்டிருந்தது;
ஆம்,
அந்த இல்லம்தான்,
வழிப்போக்கர்கள்
நீர் அருந்த
வகைசெய்திருந்த
அந்த இலலம்தான்’

அண்டை அயலில்
உசாவி அறிந்ததில்
பெருஞ்செல்வரின்
இல்லத்தில்
திருமணம் என்பது
உறுதியாயிற்று;

மறுநாள் காலை
வழிப்போக்கர்களின்
சார்பாக
மணமக்களுக்கு
வாழ்த்துக்கள்
என்றொரு கடிதம்
அந்த
வாசலில் கிடந்தது.