பிருந்தாவின் நீலப்பேனா/மாதவ பூவராக மூர்த்தி

பிருந்தா வாழ்க்கையில் பல நல்ல பழக்கங்கள் கொண்டவள்.அதில் ஒன்று ராம நாம வங்கியிலிருந்து நோட்டு வாங்கிவந்து அதில் ‘ராம’ எழுதுவாள்.தினமும் இரண்டு பக்கம் எழுதுவாள்.சில நாள் விட்டுப் போகும்.நோட்டு முடிந்த பிறகு அதை அயோத்தியா மண்டபத்துக்கு பின் தெருவில் உள்ள தெரு ராம நாம வங்கியில் சேர்த்துவிட்டு புது நோட்டு வாங்கி வருவாள்.

பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.

என்னிடம் இருக்கும் ஒரு சில நல்ல பழக்கங்கள் என்று நான் நினைப்பதில் ஒன்று டைரி எழுதுவது. நான் பல வருடங்களாக டைரி எழுதுகிறேன். நான் கடிதம்,டைரி கணக்கு எல்லாம் கருப்பு பேனாவில்தான் எழுதுவேன். தினம் அன்றாட நிகழ்வுகளும் முக்கிய நிகழ்வுகள் வரை எல்லாமே எழுதி வைப்பேன். உதாரணத்திற்கு பிருந்தா மற்றும் மகள் பூர்வஜா நாள், கேஸ் வந்த தினம், ஊருக்கு போய் வந்த விபரங்கள், வீட்டிற்கு வந்து போகும் விருந்தாளிகள், வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் போன்றவை இடம்பெறும்.

தினமும் காலை எழுந்து முகம் கழுவி பல் தேய்த்து காபி குடித்து விட்டு டைரி எழுதுவேன். எப்படியும் பத்து மணிக்குள் எழுதி விடுவேன். இதில் பிருந்தாவின் ஒத்துழைப்பு அவசியமாக தினமும் தேவைப்படும். அதிலும் நேற்று சாப்பிட்ட டிபன் சமையல் மறந்து போகும். என் டைரி எழுதும் நேரம் பல சமயம் ஏன் எப்போதும் அவளுக்கு அசௌகர்யமாக இருந்து விடும். பெரிய மனது பண்ணி விபரங்களை சொல்வாள். சில சமயம் யோஜனை பண்ணுங்கள் என்று கட்டளையிடுவாள் .நான் டைரியை திறந்து வைத்துவிட்டு கையில் பேனாவும் வைத்துக்கொண்டு அவள் கட்டளைக்கு கீழ்படிந்து முயற்சி செய்வேன். தோல்விதான். பிறகு அவள் துணைகொண்டு எழுதி விடுவேன்.என் டைரி யின் முதல் இரண்டு வரிகள் ஒரே மாதிரியாக அமைந்து விடும்.

என் பேரன் சமர்த் (என் மகன் கார்த்திக்கின் மகன்) கோடை விடுமுறையில் நீச்சல் பயிற்சிக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். வார இறுதியில் கார்த்திக்கும் மீதி நாட்களில் அத்தை பூர்வஜாவும் அவள் கணவரும் அழைத்துக் கொண்டு போனார்கள்.அவனும் சமர்த்தாக இருந்தான்.

அவன் இரண்டாவது முடித்திருந்தான்.அடிக்கடி என்னிடம் கதை கேட்பான் நானும் என் அனுபவங்களை கதையாகச் சொல்வேன். ஒருநாள் நான் டைரி எழுதுவதைப் பார்த்து , ‘இது என்ன தாத்தா?’ என்று கேட்டான். நான் விபரமாக டைரி பற்றியும் அதன் உபயோகங்கள் மற்ற பற்றியும் சொல்லி நீயும் பெரியவனா ஆனதக்கு அப்பறம் டைரி எழுதனும் என்றேன். ‘நான் ஸ்கூல் டைரி எழுதுவேன் தாத்தா’ என்றான். ‘Very good ‘ என்றேன்.

“நான் படிக்கட்டுமா ?” என்றான். அவன் இப்பொழுதுதான் தமிழ் எழுத படிக்க ஆரம்பித்திருக்கிறான்.
“சரி” என்று சொன்னேன். டைரியை பிரித்து இரண்டு மூன்று நாள் பெரிதாக படித்தான்.

இன்னொரு நாள் காலை நான் டைரி எழுத டைரி, கண்ணாடி பேனா எடுத்து திவானில் வைக்கும் போது பிருந்தா காஃபி கொண்டு வந்து கொடுத்து விட்டு “முதல்ல காஃபியை குடிங்கோ அப்பறம் டைரி எழுதலாம் “
உத்தரவுக்கு கீழ்படிந்து காஃபியை ஆற்றி குடித்துகொண்டருந்தேன். சமர்த் என் பக்கத்தில் உட்கார்ந்து, “தாத்தா நான் உங்க டைரி எழுதறேன்” என்று சொல்லி பேனா எடுத்து நேற்றைய பக்கத்தில் எழுதி விட்டான். காஃபியை குடித்துவிட்டு திரும்பிய என்னிடம் தான் எழுதியதை காண்பித்தான். “காலை எழுந்தேன் காஃபி குடித்தேன்”
என்று குழந்தை கிறுக்கலில் எழுதியதைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்து விட்டது, ஆமாம் நான் அப்படித்தான் தினமும் ஆரம்பிப்பேன்.

போனவாரம் ஞாயிற்றுக்கிழமை நானும் பிருந்தாவும் தி.நகர் VRR LABல் காலை Sugar test கொடுக்கப் போனோம். திரும்பும் போது பக்கத்தில் இருந்த கடையில் பிருந்தா ராமஜெயம் எழுத பேனா வாங்கினாள். எழுதிப் பார்த்துவிட்டு “நன்றி எழுதறது” என்றாள். சரி என்று நானும் டைரி எழுத ஒரு கருப்பு பால் பேனா வாங்கினேன். 10/ரூபாய்.

அன்று இரவு கார்த்திக்கும் சமர்த்தும் கோவைக்கு புறப்பட்டார்கள். சமர்த் கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்து விட்டுப் போனதால் வீடு வெறிச்சோடியது. நல்ல வேளை நாளை இரவு நீலகிரி எக்ஸ்பிரஸில் கோவை போகிறோம்.

செவ்வாய் காலை கோவையில் இருந்தோம். நான் பதினைந்து நாட்கள் இருப்பதால் டைரி கருப்பு பால் பாயிண்ட் பேனாவும் பெட்டியில் எடுத்து வந்திருந்தேன். பிருந்தா ராமஜெயம் நோட்டும் நீல பால் பேனா வேரும் தன் பையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.

காலை கருப்பு பேனாவில்தான் டைரி எழுதிவிட்டு,டைரியையும் பேனாவையும் cub boardல் வைத்தேன். பிருந்தா நோட்டையும் cubboardல் வைத்தாள்.

புதன்கிழமை காலை டைரி எழுத நேரமில்லை. பிருந்தா மத்யானம் ராம் நோட்டில் எழுத ஆரம்பித்தாள். நானும் டைரி எழுத நினைத்து டைரி எடுத்தேன் பக்கத்தில் பேனா காணவில்லை.

தேடினேன் கிடைக்கவில்லை.எனக்கு மறதி அதிகம்.பேனா எங்கே வைத்தேன் என்பது சரியாக நினைவில் இல்லை. ராம எழுதிக்கொண்டருந்த பிருந்தா, “நன்னாதேடுங்கோ பெட்டியில் பாருங்கோ” என்றாள்.

தேடினேன் கிடைக்கவில்லை. மறுபடியும் cub boardல் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தேன். சமர்த் உள்ளே அவன் நண்பன் விஸ்வாவுடன்விளையாடிக்கொண்டிருந்தான்.அவனிடம் “சமர்த் தாத்தா டைரி எழதற பேனாவைப் பார்த்தியா? ” என்றேன். “நான் பாக்கலை தாத்தா ஒரு வேளை ஹால் ஜன்னல் ஸ்க்ரீன் பின்னால இருக்கும் ” என்றான். அங்கும் இல்லை.

மருமகள் மைதிலிக்கு மத்யானம்தான் ஸ்கூல். அவளிடம் கேட்டேன்.அவளும் “நான் பாக்கலை அங்கிள்” என்றாள். ஒரு வேளை cub board பின்னால் இருக்குமோ என்று cub boardயை கஷ்டப்பட்டு நகர்த்தி பார்த்தேன் அங்கும் இல்லை.

கடைசியாக கார்த்திக்குக்கு போன் பண்ணினேன். அவன் மீட்டிங்கில் இருந்தான் எடுக்க வில்லை. சாப்பிட்டோம் பிருந்தாவும் நோட்டை மூடி வைத்துவிட்டு சாப்பிட்டாள். என் மனம் கருப்பு பேனாவில்தான் இருந்தது.

மறுபடியும் எழுத ஆரம்பித்தாள்.மைதிலி பால் வாங்கப் போனாள். “மைதிலி ஒரு கருப்பு பால் பேனா வாங்கிட்டு வாம்மா” என்றேன். சரி அங்கிள் என்று வாங்கி வந்தாள்.நான் புது பேனாவில் டைரி எழுநி முடித்தேன். மனம் கருப்பு பேனா நினைவில் வந்தது.

காரத்திக் போன் பண்ணினான்.என்னப்பா என்றான். நான் cub board வில் பேனா பார்த்தாயா? என்றேன்.இல்லப்பா என்றான்.

பிருந்தாவிடம் ஒரு பழக்கம் இரண்டு பக்கம் எழுதிய பிறகு இன்னும் எவ்வளவு பக்கம் இருக்கிறது என்று எண்ணிப்பார்ப்பாள். இன்றும் பார்த்தாள்.எழுதியதைப் பார்த்தாள். “பூர்வஜா அப்பா என்னது பேனா கருப்பா எழதியிருக்கு” என்றாள். அவசரமாக வாங்கி பார்த்தேன். ஆம் கருப்பா கத்தார் இருந்தது. எனக்கு சட்டென்று புரிந்துவிட்டது. பிருந்தா என் பேனாவால் ராம் எழுதியிருக்கிறார். உடனே அவள் பர்ஸ் திறந்து பார்த்தேன். அவள் நீலப்பேனா பத்திரமாக இருந்து என்னைப் பார்த்து சிரித்தது.