கொரோனாக் கால பிக்னிக்/நாகேந்திர பாரதி


அது கொரோனாக் காலம் . வாசலில் விளக்கேற்றியும் கை தட்டியும் கொரோனாவை விரட்டப் பார்த்து விட்டு அடுத்த கட்டமாக ஊசி போட ஆரம்பித்திருந்த காலம் .ஊரடங்கு போடப்பட்டு வெளியில் எங்கும் நடமாட முடியாமல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு வந்தது .

ஊசிபோட்டவர்கள் முகக் கவசம் அணிந்து , போதிய இடைவெளியோடு பொது இடங்களில் நடமாடலாம் என்ற அறிவிப்பு வந்ததும் ராஜி துள்ளிக் குதித்தாள் .

‘அப்பா , அப்பா , ப்ளீஸ் அப்பா , இப்பதான் வெளியே போகலாம்னு சொல்லிட்டாங்களே . பக்கத்திலே இருக்கிற சுந்தர ஏரிப் பூங்காவுக்குப் போகலாம் ‘என்று கெஞ்சினாள் .

‘பாவம் குழந்தை . எத்தனை மாசமா சொல்லிக்கிட்டு இருக்கா , போகலாங்க ‘ என்ற மனைவியின் வற்புறுத்தல் வேறு .

‘ சரி போகலாம் ‘ என்று அவன் சொன்னதுதான் தாமதம் . ராஜி அவனைக் கட்டிப் பிடித்து முத்தமழை பொழிந்தாள் .

‘ போதும் , கொஞ்ச முத்தம் பாக்கி வச்சுக்க , அங்கே ஏரிப் பூங்காவில் கொடுக்கணும் , ‘ என்று செல்லமாகத் திட்டி விட்டு மகளைத் தன் பக்கம் இழுத்தாள் .

என்னதான் மகள் என்றாலும் அவன் முகத்தில் முத்தம் கொடுக்கும் முழுக் குத்தகையும் தான் தான் எடுத்திருப்பது போல் ஒரு போலி கோபப்பார்வையை அவன் மேல் வீசி விட்டு ‘ அப்பா , எவ்வளவு எச்சில் முகத்தில் ‘ என்று அவன் முகத்தை முந்தானையால் துடைத்து விடும் போது அவன் ரகசியமாக கிசுகிசுத்தான் .

‘என்ன , பொறாமையா , உனக்குத்தான் என் உடம்பிலே எவ்வளவோ இடம் பாக்கி இருக்கே முத்தம் இட ‘ என்றவனிடம் ’ குழந்தை பார்க்கிறா , கம்முன்னு இருடா ‘ என்று மெதுவாகச் சொல்லி விட்டு , சத்தமாக ராஜியை அதட்டினாள் ,

‘போ , போய் வேற டிரஸ் போட்டுக்க , தண்ணி எடுத்து வை , நான் போய் , ஸ்னாக்ஸ் ஐட்டம் எடுத்து வைக்கிறேன் . உங்களுக்கு ஒர்க் பிரம் பிக்னிக் பண்ணனும்னா கம்பியூட்டர் எடுத்து வச்சுக்கங்க . முகக் கவசம் முக்கியம் ‘ .
என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்தாள் . அரை மணி நேரத்தில் அனைவரும் ரெடி.

கால் மணி நேர ட்ரைவில் பிகினிக் ஸ்பாட் வந்தாச்சு . அந்த ஏரி ஓர மண்ணும் , மரங்களின் வாசமும் , தண்ணீரின் ஜிலுஜிலுப்பும் ஒரு புத்துணர்ச்சியை அளித்தன மூவர்க்கும் . கூட்டம் இல்லை .மணலில் சில பேரும் , மரத்தில் சில குரங்குகளும் தான் . மணலில் ஜமக்காளத்தை விரித்து மூவரும் அமர்ந்தனர் . ‘

‘ஏரிப்பக்கம் போகாம பக்கத்திலே விளையாடு ‘ என்றவுடன் இங்கும் அங்கும் ஓடிய ராஜியை அங்கு இருந்த ஒரு போலீஸ்காரர் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார் . எல்லோரும் கொரோனா பாதுகாப்பைச் சரியாகக் கடைப் பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதே அவர் வேலை . தன் முகக் கவசத்தைக் கைகளால் தொட்டுக் காண்பித்து விட்டு அம்மாவிடம் ஓடி வந்தாள் ராஜீ .

‘ அம்மா , அந்த போலீஸ்காரர் என்னையே பார்க்கிறார் . எனக்கு விளையாடவே பிடிக்கலை . பசிக்குது . அந்த ஸ்நாக்ஸ் எல்லாம் எடுத்து வை ‘ என்றவுடன் எடுத்து வைத்தாள் . அவனும் கம்பியூட்டரை ஓரமாகத் தள்ளி வைத்தான் . முகக் கவசங்களைத் தளர்த்திக் கொண்டனர் . அப்போது அந்த போலீஸ்காரர் அவர்கள் அருகே வந்தார் .

‘ சார் , இந்தப் பொது இடத்திலே , முகக் கவசங்களை கழற்றவே கூடாது, அரசாங்க உத்தரவு ‘ என்று எச்சரித்து விட்டு நகர்ந்து போனார் . மறுபடி முகக் கவசங்களை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு முன்னால் இருந்த ஸ்னாக்ஸ் களை பசியோடு பார்த்துக் கொண்டு பாவம் போல அமர்ந்திருந்தனர் மூவரும்

————-