இனிக்கும் தமிழ் – 181/ டி வி ராதாகிருஷ்ணன்

இராமாயணம் – காமம் இல்லை எனின் துன்பம் இல்லை

காமம் இல்லையென்றால் துன்பம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும்
பெண்கள் மேல் கொள்ளும் காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால். நரகமும் இல்லை.

அப்படி என்றால் உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காமமே காரணம். இந்த
உலகில் மட்டும் அல்ல, இறந்த பின் நரகம் செல்வதற்கும் காமமே காரணம்.
தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். அது தோன்றும் போதெல்லாம் பூமியில்
பெரிய அழிவு தோன்றியிருக்கிறது. அது போல மங்கையர் மேல் காமம் கொள்ளும்
போதெலாம் பேரழிவு தோன்றுகிறது.

பாடல்

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின், கடுங் கேடு எனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே.’

பொருள்

தூமகேது = தூம கேது என்ற வால் நட்சத்திரம்
புவிக்கு எனத் தோன்றிய = இந்த உலகிற்கு தான் வரும்போதெல்லாம் பேரழிவைத்
தருவதைப் போல
வாம மேகலை = அழகிய மேகலை என்ற ஆபரணங்களை அணிந்த மங்கையரால் வரும் = பெண்களால் வரும்
காமம் இல்லை எனின் = காமம் இல்லை என்றால்
கடுங் கேடு எனும் = பெரிய கேடு என்ற
நாமம் இல்லை = பெயரே இருக்காது. துன்பம் என்ற வார்த்தையே இருக்காது
நரகமும் இல்லையே = நரகமும் இருக்காது.
(காமம் இல்லை என்றால் தவறு இல்லை, பாவம் இல்லை. இரண்டும் இல்லாவிட்டால்
யார் நரகத்திற்கு போவார்கள். அதை மூடி விட வேண்டியதுதான்.)
கொலை, களவு, சூது, பொய், கள் உண்ணுதல் என்ற அத்தனை பாவங்களையும் ,
குற்றங்களையும் விட்டு விட்டு காமம் ஒன்றையே பிரதானமாக சொல்கிறார்
கம்பர்.

                       -