நான்கு கவிதைகள் /நாகேந்திர பாரதி

நவீன விருட்சம் தொடர் கவிதை வாசிப்பு நிகழ்வில் (9/6/23) வாசித்த நான்கு கவிதைகள் /நாகேந்திர பாரதி

  1. விட்டுக் கொடுத்து வாழலாம்

விட்டுக் கொடுப்பதில்
ஒரு சுகமும் உண்டுதான்
ஒரு சோகமும் உண்டுதான்

பெற்றோருக்காய் விட்டுக் கொடுத்த
பெரும் படிப்பு ஆசைகள்

நண்பனுக்காய் விட்டுக் கொடுத்த
விளையாட்டு வெற்றிகள்

காதலிக்காய் விட்டுக் கொடுத்த
களியாட்ட இரவுகள்

மனைவிக்காய் விட்டுக் கொடுத்த
மாதச் சம்பளம்

பிள்ளைகட்காய் விட்டுக் கொடுத்த
வார இறுதி ஓய்வுகள்

பேரருக்காய் விட்டுக் கொடுக்கும்
தொலைக் காட்சித் தொடர்கள்

விட்டுக் கொடுப்பதில்
ஒரு சுகமும்உண்டுதான்
ஒரு சோகமும் உண்டுதான்

  1. முடிவிலும் தொடரலாம்

மேம்போக்காக மேம்பாலத்தில்
நடக்கும் இனிமை

மேலே வந்து மோதும்
காற்றின் குளுமை

காதில் வந்து பாயும்
இசையின் இனிமை

கீழ்ப் பாலத்தில் பளிச்சிடும்
விளக்கின் புதுமை

கீழே ஓடும் ஆற்றின்
வேகத்தின் இளமை

எப்போதாவது வரும்
பேருந்தின் கடமை

ஆகாயத்தில் ஒளிரும்
நிலவின் வெண்மை

நடைப் பயணம் முடித்துத்
திரும்பும் தனிமை

முடிவிலும் தொடரும்
நினைவின் இனிமை

  1. எரிக்கும் இரவுகள்

கொஞ்சம் பொறுடி கண்ணே
கோபம் வேண்டாம் பெண்ணே

நெஞ்சம் உனக்குத் தாண்டி
நேரம் கொஞ்சம் வேண்டி

படிப்பை முடிக்க வேண்டும்
பாடம் பயத்தில் மீண்டும்

துடிக்கும் மூளைக்குள்ளே
துள்ளும் கல்வி தள்ளி

வேலை தேடும் படலம்
வேர்வை ஊறும் உடலும்

காலை மாலை சாலை
கடந்து வேலை ஓலை

பணத்தைச் சேர்த்து வைத்து
பருவ கால வித்து

இனத்தைச் சேர்க்கும் கயிறு
இரவுக் கால உயிரு

இத்தனை செய்து முடிக்க
இன்னும் நேரம் துடிக்க

எரிக்கும் இரவுகள் தானே
எனக்கும் உனக்கும் மானே

  1. சூரிய நிலாக்கள்

அவளைப் பிரிந்து
அமைதி இழந்து

தனிமை வாட்ட
துயரைக் கூட்ட

கண்கள் பொங்க
கவலை தங்க

தூக்கம் போக்கும்
துன்பம் ஆக்கும்

ஒவ்வொரு இரவும்
உயரச் சந்திரன்

சூரியனாய் மாறி
சுட்டுத் தகிக்கிறான்