பிருந்தாவின் திருகாணி/மாதவ பூவராக மூர்த்தி

தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்” என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அன்றாட வாழ்க்கையில் நாம் பொருட்களைத் தொலைப்பது வழக்கம்.‌ இரண்டாக இருக்கும் பொருட்களில் ஒன்று தொலைந்து போனால் மற்றது பயனற்றதாகிவிடும். உதாரணமாக காலணிகள், காலுறைகள், கையுறைகள் தாயங்கட்டையில் ஒன்று.கேரம் போர்ட் காய்கள், செஸ் காய்கள், மூடிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

என் அனுபவத்தில் மறக்க முடியாத தொலைப்புகள் சில. ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு சென்றிருந்தோம்.காரத்திக் பூர்வஜா இருவரும் குழந்தைகள். ரயில் ரேணிகுண்டா சந்திப்பில் நின்று கொண்டிருந்தது. திருப்பதிக்கு புறப்பட சில நிமிடங்களே இருந்தது. நாங்கள் காபி குடித்த கப்புகளை கார்த்திக் ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விட்டான்.உடனே பூர்வஜா நானும் எறிவேன் என்று அழ ஆரம்பித்து விட்டாள். நான் அவளை சமாதானப்படுத்தி பூர்வஜா கப் இல்லை நீ வேனா இதை போட்டேன் என்று பிளாஸ்க் மூடியை அவள் போடமாட்டாள் என்று நினைத்து அவளிடம் கொடுத்தேன். அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பிளாட்பாரம் இல்லாத பக்கத்தில் எறிந்து விட்டாள். வண்டி புறப்பட்டு விட்டது. எடுக்க நேரமில்லை. பிருந்தா கோபமாக, “ஏன் அப்படி எறிஞ்சே?” என்று கோபபட்டாள். பூர்வஜா மறுபடியும் அழ ஆரம்பித்தாள். அழுதுகொண்டே, “நீ தானே அப்பா பேச்சை கேக்கனும்னு சொல்வே. அப்பா போடுன்னு சொன்னார் போட்டேன்” என்றாள். நானும் பிருந்தாவும் சிரித்து விட்டோம். பிளாஸ்க், மூடியில்லாமல் பயன் படவில்லை.

இன்னொரு முறை நானும் பிருந்தாவும் என் தங்கை ராதா வீட்டிற்கு ஸ்ரீரங்கம் போய்விட்டு காலை பல்லவனில் சென்னைக்கு வந்தோம். நல்ல கூட்டம், பிருந்தா அவசரமாக ஏறும் போது படியில் விழுந்து விட்டது. பின்னால் நிறைய பேர் ஏறினார்கள். என்னிடம் பிருந்தா, “ஒரு செருப்பு கீழே விழுந்து விட்டது” என்று சொல்லிக்கொண்டே வாசல் படியில் குனிந்து பார்த்தாள். ரயில் புறப்பட்டது. நான் “இன்னொரு செருப்பையும் பிளாட்பாரத்தில் போட்டு விடு” என்றேன். பிருந்தா அதையும் போட்டு விட்டு வருத்தப்பட்டு கொண்டே வந்து சீட்டில் உட்கார்ந்தாள். நான் அவளை சமாதானப்படுத்தி, “எடுப்பவர்களுக்கு இரண்டு செருப்பு இருந்தால் உபயோகமாக இருக்கும்” என்றேன்.

ரயில் லால்குடியை தாண்டும் போது ஒரு இளைஞன் யாரையோ தேடிக்கொண்டு வந்தான். பிருந்தாவைப் பார்த்ததும் அவன் முகம் பிரகாசமானது. அருகில் வந்து அவன் கையில் மறைத்து வைத்திருந்த ஒற்றை செருப்பை கீழே போட்டு விட்டு,”மாமி நீங்க ஏறும் போது ஒரு செருப்பு விழுந்தது. நான் எடுத்துண்டு ஏறிட்டேன். தேடிண்டு வந்தேன் ” என்றான். “ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு அவன் போனதும் ஒருவரையொருவர் அசடு வழிய பார்த்துக் கொண்டோம். அடுத்து வந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போட்டோம்.

போன மாதம் இன்னொரு சம்பவம் நடந்தது. பிருந்தா ஒவ்வொரு செவ்வாய்,வெள்ளி ஊரில் இருந்தால் தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் அவள் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து ஒரு சின்ன எவர்சில்வர் கப்பில் தோடு, திருகாணி, மூக்குத்தி, திருகாணியையும் போட்டு கிச்சன் மேடையில் வைத்துவிட்டு குளிக்க போவாள். சாயங்காலம் விளக்கு வைத்தவுடன் மறுபடியும் சின்ன ஸ்டூலில் உட்கார்ந்து மடியில் ஒரு துண்டை விரித்து கவனமாக எடுத்து போட்டுக் கொள்வாள். அப்போதும் திருகாணி கீழே விழுந்து விடும். மொசைக் தரையில் கண்டு பிடிப்பது கஷ்டம். தேடிப்பிடித்து போட்டுக் கொள்வாள்.

போன மாதம் மத்யானம் ஹாலில் T V ஓடிக்கொண்டிருந்தது.‌ பூர்வஜா பேரன் சமர்த் இருப்பதால் work from home இங்கு வந்து ஹாலில் இருந்தாள். சமர்த் மாடி வீட்டு தவினுடன் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் T V பார்த்து கொண்டருந்தேன்.

பிருந்தா தலைவலி என்று சிறிது நேரம் ரூமில் கட்டிலில் படுத்து விட்டு எழுந்து வந்தாள். ரூம் வாசலில் வந்து நின்று கொண்டு வலது காதை தொட்டுப் பார்த்துவிட்டு குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள். பூர்வஜா அதைப் பார்த்துவிட்டு “என்னம்மா என்ன ஆச்சு?” என்றாள். பிருந்தா கீழே பார்த்துக்கொண்டே “திருகாணி எங்கயோ விழுந்துடுத்து” என்றாள்.

பூர்வஜா”எனக்கு டக்குனு விழுந்த சத்தம் கேட்டது” என்றாள்.‌ சமர்த்தும் தன் பங்கிற்கு, “ஆமாம் பிந்தூஸ் எனக்கும் கேட்டுது” என்றான்.(அவன் பாட்டியை பிந்தூஸ் என்றுதான் கூப்பிடுவான்.அவனைப் பார்த்து தவினும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டான். என்னை மட்டும் தாத்தா என்று கூப்பிடுகிறான்.)

பூர்வஜா லேப் டாப் அப்படியே வைத்து விட்டு எழுந்து வந்தாள். சமர்த்தும் தவினும் கூட சேர்ந்து தேட ஆரம்பித்தார்கள். நான் என் பங்குக்கு ஹால் லைட் போட்டு வந்து அவர்களுடன் தேடும் படலத்தில் சேர்ந்து கொண்டேன்.‌

பூர்வஜா, “அம்மா மொசைக் தரையில் குனிந்து கொண்டு தேடினால் கிடைக்கும்” என்று வாசலுக்கு கொஞ்சம் தள்ளி ஹாலில் தரையில் படுத்து கண்ணை வாசல் பக்கம் கூர்ந்து பார்த்துவிட்டு இல்லை என்று உதட்டைச் பிதுக்கினாள்.

நான், “பிருந்தா T V சத்தத்தில சின்ன திருகாணி விழற சத்தம் கேட்காது.” என்றேன். “இல்லப்பா நன்னா கேட்டுது” என்றாள் பூர்வஜா. “பிருந்தா நீ இன்னொரு திருகாணியை கழட்டி போடு, சத்தம் கேக்கறதா,விழுந்து எங்க உருண்டு போறதுன்னு பாக்கலாம்” என்றேன்.

பிருந்தா என்னை முறைத்து விட்டு இன்னொரு காதை பிடித்துக் கொண்டு,” போறும் உங்க ஐடியா, போனதை தேடுங்கோ” என்று சொல்லி விட்டு மறுபடியும் தேட ஆரம்பித்தாள்.

எங்கள் வீட்டில் ரூமின் வாசல் கதவு வலது பக்கம் இருக்கும்.இடது பக்கம் மர பீரோ இருக்கும்.அதேபோல் வாசல் பக்கம் இடது பக்கம் மர பீரோவும், வலது பக்கம் T V க்கு அடியில் பெரிய ஸ்டூல் இருக்கிறது. பூர்வஜா, ‘அம்மா திருகாணி உருண்டு போயிருக்கும்”
என்று சொல்லி ஒவ்வொன்றாக நகர்த்தி விளக்குமாறால் பெருக்கி தேட ஆரம்பித்தாள்.

சமர்த், “தாத்தா உங்க போனை கொடுங்கோ” என்று என் போனை பிடுங்கி டார்ச் போட்டு அவனும் தவினும் ஹால் முழுவதும் தேடினார்கள். கிடைக்கவில்லை. நான் “பிருந்தா நீ கட்டிலில் படுத்து இருந்தாய் தலைகாணியிலோ, கட்டிலுக்கு அடியிலோ விழுந்திருக்கலாம்.” என்றேன். ஏதோ பிருந்தாவுக்கு என் இந்த ஆலோசனை பிடித்திருந்தது. அங்கேயும் கட்டிலில் தலைகாணியை நன்றாக உதறி. கட்டிலுக்கு அடியிலும் பெருக்கினாள். திருகாணி கிடைக்கவில்லை.பதிலாக சமர்த்தின் Ball ஒன்றும் பம்பரமும் கிடைத்தது. சமர்த் சந்தோஷமடைந்தான்.

பூர்வஜா,” அம்மா எங்கயும் போகாது விடு கிடைக்கும்
வீட்டுக்கு உள்ளதான் இருக்கும். இல்லன்னா GRTயில வேற திருகாணி வாங்கிக்கலாம் விடு” என்றாள்

“இல்லை பூர்வஜா அது சரியா வராது சுரை சரியா இருக்காது” என்றாள் பிருந்தா.
பிறகு தோடுகளை கழட்டி விட்டு பீரோவில் இருந்த வேறு ஜோடி தோடு எடுத்து போட்டுக் கொண்டாள்.

போக வர தரையை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஒருவாரம் ஆனது.” நான் பிருந்தா இதை போட்டு புதுசா வாங்கிடேன்” என்றேன்.
“பார்க்கலாம்” என்றாள். வழக்கமாக அன்று வியாழக்கிழமை ஆனதால் வீடு பெருக்கி, துடைக்க ஆரம்பித்து ஹால் ஃபேன் ஆஃப் பண்ணிவிட்டு முதலில் ரூமைப் பெருக்க ஆரம்பித்தவள் சில நிமிடம் கழித்து “மனுஷா என்னை கைவிட்டாலும், பகவான் எப்போதும் என்பக்கம்இருக்கார். திருகாணி கிடைச்சுடுத்து ” என்று பிரகாசமாய் கையில் திருகாணி எடுத்து உள்ளங்கையில் வைத்து என்னிடம் காட்டினாள். எனக்கும் சந்தோஷம். மறுநாள் பிருந்தா பழைய தோடுடன் ஜொலித்தாள்.