ஆர்க்கே.!
“பேப்பர் பழைய பேப்பர்”
என்று கூவிச்சென்றவனை
மாடிக்கழைத்து
நாளிதழ் மற்றும் புத்தகங்களை
எடைக்குப்போட்டேன்.
தனித்தனித் தாள்களில்
எழுதப்பட்ட என் கவிதைகளை
தனியே பிரித்து வைத்தான்.
” இது தேறாது” என்றான்.
“ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்”
தருபவனும்
“ஓட்டை ஒடசல்களுக்கு
பிளாஸ்டிக் வாளி” தருபவனும்
“பழைய சரிகைப்புடவைக்கு
நல்லவிலை” தருபவனும்
நான் எழுதிய கவிதைத்தாள்களை
சீண்டவே இல்லை.
புத்தகமாக்கினால் எடைக்காகுமா
என யோசனை வந்தது.
ஏதோ ஒரு உணர்வில்
கவிதையெழுதிய காகிதங்களை
கற்றை கற்றையாய்
கிழித்தெறிந்தேன் வாசலில்.
தெருவில் திரிந்த கழுதையொன்று
நிதானமாகத் தின்றுவிட்டு
என்னிடம் சொன்னது
“இன்னும் நிறையக்கவிதை எழுது.
சொல்லியனுப்பு
நான் தின்ன வருகிறேன் “
என்றது.
என் கவிதைகள் முக்தியடைந்தது.!

கணினி யுகத்துக்கு ஒத்துவராத கவிதை! யாரய்யா இப்பொழுது காகிதத்தில் எழுதுகிறார்கள்? மேலும், மாம்பலத்தில் கழுதைகள் ஏது? சரி, hard disc தின்னும் கழுதைகள் உண்டா?