கம்பனைக் காண்போம்—6
ஐந்து அம்புகளும் இரண்டு அம்புகளும்
ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம். [13]
[ஆசு=குற்றம்; பொறி=புலன்; காசு=ஒருவகைமாலை; அலம்பு=ஒலித்தல்;
ஆற்றுப்படலத்தில் கம்பன் கோசலநாட்டில் பாயும் சரயு நதியை நமக்கு அறிமுகம் செய்யப் போகிறான். முதலில் கோசலநாட்டைப் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டில் இருக்கும் ஆடவர் அனைவரிடமும் குற்றத்தை அதிகமாகச் செய்கின்ற மெய், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐந்து பொறிகளாகிய அம்புகள் உள்ளனவாம். அந்நாட்டில் வாழும் பெண்களிடம் இரண்டு அம்புகள் உள்ளனவாம். அவை அவர்களின் முகத்தில் இருக்கும் இரு கண்களாம்.
இப்படிப் போர் புரியும் ஆயுதங்களான அம்புகளைப் பெற்றிருந்தாலும் அன்பு நெறியை விட்டுவிட்டுப் புறம் செல்லாத மக்கள் வாழும் கோசல நாட்டில் பாயும் சரயு ஆற்றின் அழகினை இனி கூறுவோம் என்று முதல் பாடலில் தொடங்குகிறான். அந்நாட்டின் பெண்கள் தம் கழுத்தில் காசு என்னும் இரத்தின மாலைகளை அணிந்துள்ளனராம். அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து அவர்களின் மார்புகளில் ஒலிகள் எழுப்புகின்றனவாம். ஆண்டாள் நாச்சியார் கூடத் திருப்பாவையில் ‘காசு’ என்னும் மாலையை ஆயர்குலப் பெண்கள் அணிந்திருப்பதைக் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்று பாடுவார்.
