பூனை நல்ல பூனைதான்/அனங்கன்

1)

பாற் கடலில் திரண்ட பாலை
பூனை நக்க வற்றுமோ… வாழ்வில்
நமக்கானது எதுவென்று சொல்ல வந்த…
பூனை நல்ல பூனைதான்.

                (2)

பூனை கண்ணை மூடிக் கொண்டதால்….
உலகம் இருண்டு போனது…நம்மிடையே
இதுபோல பலகோடிப் பேருண்டு…ஆனாலும்
பூனை நல்ல பூனைதான்.

                (3)

அழகுக் காட்சிதனில் பூனை நடை…
பூனைபோல பெண் நடந்தால் போதும்.
தெருவினிலே நீநடந்தால் கேலிதான் மிஞ்சும்….
பூனை நல்ல பூனைதான்.

                (4)

பூனைக்கு மணி கட்ட வேண்டும்….
எலிகள் கூடிப்பேசின இரவெல்லாம் ஓயாமல்….
நிதியில்லை என்றானதும்
ஒன்றாய்க் கூவின…
பூனை நல்ல பூனைதான்.

                    (5)

திரட்டுப் பாலை திருடிய பூனையிடம்…..
திருந்த வேண்டுமெனக் கவிதை படித்தேன்…
கண்ணை மூடிக் கேட்டது பாவம்…
பூனை நல்ல பூனைதான்.

One Comment on “பூனை நல்ல பூனைதான்/அனங்கன்”

Comments are closed.