வாழ நினைத்தால் வாழலாம்/ஹரணி

உச்சிக் கிளையில் கழுகின் கூடு
கிணற்றுச் சரிவில் பறவைக் குஞ்சுகள்
அழியும் இடத்தில் சிலந்தி வலை
வாழ நினைத்தால் வாழலாம்.

இயல்பாய் இருங்கள் மிகை இயல்பல்ல
இருப்பதைப் பேசிதற் பெருமை தவிர்க
புழுவின் வாழ்வும் சுயத்தில் உயர்வே
வாழ நினைத்தால் வாழலாம்.

உள்ளத்தில் ஈரம் உதட்டில் மென்னகை
ஊழின் ஒருவாய் சோறும் உயிர்ப்பே
உறவோடு யாரிடமும் உண்மை அன்பாம்
வாழ நினைத்தால் வாழலாம்.

மான்கள் மேய வாயருகே சிங்கம்
சிங்கங்களை மேயும் மரணமும் அருகே
அருகில் அழகிய பூவாய் வாழ்க்கை
வாழ நினைத்தால் வாழலாம்.