கீரனூர் ஜாகிர்ராஜா கவிதை

பாம்புகளுடனான
சிநேகம் எனக்கு
ஆதியிலிருந்தே
உண்டாயிருந்தது
ஒரு ஆறேழு
பாம்புகளிருக்கும்.
பாம்புகளென
அறிந்தேதான்
அவற்றுடன்
பழகிவந்தேன்.
உடன் பயின்றவர் போன்ற
பாம்பு இரண்டு
சக ஊழியர் மாதிரி
ஒரு பாம்பு
பக்கத்து
வீட்டுக்காரப் பாம்பு
ஒன்று
சிஷ்யனைப்போல
வலம் வந்த
ஒரு பாம்பு
இப்படியாகப்
பாம்பு ஜீவிதம்
எனக்குப் பழகி
விட்டிருந்தது.
காலம் கடந்தது
ஒரு
கீரிப்பிள்ளையுடன்
எனக்கு சிநேகிதம்
இருப்பதாகச் சந்தேகித்து
மூன்று பாம்புகள்
என்னை
நட்புவிலக்கம்
செய்தன.
நான் வளர்த்த
கோழிக்குஞ்சுகளை
விழுங்கிவிட்டதாகக்
கருதி நானே
இரணடைத்
துரத்தினேன்.
ஆகக்கடைசியாக
ஒரு பாம்பு மட்டும்
எஞ்சியிருக்கிறது.
நான்
கூறுவதையெல்லாம்
பொறுமையாக
டிக்டேட் செய்து
கொடுத்து
அனுசரணையாக
இருக்கிறது.
ஆயினும்
நான் கொல்வேனோ
என்று அதுவும்
அது கொத்துமோ
என்று நானும்
அஞ்சியபடியேதான்
எங்கள்
காலம் கழிகிறது.