வேலையில்லாப் பட்டதாரிகள்/புவனா சந்திரசேகரன்

இளம்பரிதி படித்து முடித்து வேலையில் சேர்ந்ததும் வீட்டில் அனத்த ஆரம்பித்து விட்டார்கள் அப்பாவும் அம்மாவும்.
” காலாகாலத்தில் உனக்கும் ஒரு கால்கட்டு போட்டு விட்டால் நாங்களும் நிம்மதியாகக்
கண்ணை மூடுவோம்.”
வழக்கமான பெற்றோரின் புலம்பல்கள்.
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரியான மிரட்டல் தான் பெற்றோர் தருவது.
“நல்லாப் படிச்சாத் தான் நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைக்கும்”
இது ஸ்கூலில் படிக்கும்போது.
“நல்லாப் படிச்சாத் தான் நல்ல வேலை கிடைக்கும்.”
இது கல்லூரிப் படிப்பின் போது.
அதுவும் முடிந்து வேலையிலும் சேர்ந்த பின்னால் இப்போது திருமணத்திற்கான புலம்பல்.
ஒருவழியாக அவர்களுடைய மிரட்டலுக்கும் அடி பணிந்து அவர்களே ஒரு தூரத்து உறவுக்காரப் பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்தாயிற்று. இரட்டை ஜடையுடன் களையான முகம். தட்டிக் கழிக்க முடியாமல்
இன்று இதோ அவளுடைய வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கயல்விழி அந்தப் பெண்ணின் பெயர். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சம்பளம் அவளுடைய தகுதிக்கும் வேலைக்கும் பொருத்தமாக நிச்சயமாக இருக்கும்.
இளாவின் மனதில் ஒரு பயமும் தயக்கமும் இருந்தது. இந்தக் காலப் பெண். அதுவும் அவனைப் போலவே நன்றாகப் படித்து நல்ல வேலையில் நன்றாக சம்பாதிக்கும் பெண். என்னவெல்லாம் நிபந்தனைகள் போடுவாளோ! ஆஃபிஸில் கூட வேலை பார்க்கும் நண்பர்கள் நன்றாகவே அவனை பயமுறுத்தி விட்டிருந்தார்கள்.
அதனால் மனதளவில் அவளுடைய கேள்விக் கணைகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் சென்றான் இளா.

பெண் பார்க்கும் படலம் என்றில்லாமல் சும்மா ஓர் இயல்பான சந்திப்பாகத் தான் இருக்க வேண்டும் என்று இளா ஏற்கனவே சொல்லியிருந்தான்.
அவர்களும் குடும்ப நண்பர் வீட்டிற்கு எல்லோரும் சேர்ந்து போவது போலத் தான் இருக்குமென உறுதியளித்தார்கள்.
கயல்விழியின் வீட்டை அடைந்து வழக்கமான உபசரிப்புகள், அறிமுகங்கள் தொடர்ந்தன. கயல்விழி இயற்கையான அழகுடன் எளிமையான, இனிமையான பெண்ணாகவே இருந்தாள். கயல்விழியின் பெற்றோர்க்கும் இளம்பரிதியை வெகுவாகப் பிடித்ததிருந்ததை அவர்கள் பேசிய விதத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் பரிதியும் கயலும் கயலின் வீட்டிற்கு அருகில் இருந்த கடற்கரைக்கு நடந்து சென்றனர். தனியாகப் பேசி ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகப் பெரியோரின் ஏற்பாடு.
பீச்சில் போய் ஓரிடத்தில் மணலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் வேலையைப் பற்றி அவர்களுடைய விருப்பங்கள் பற்றித் தெரிந்து கொண்டனர்.
சிறிது நேரத்திற்குப் பின் கயல்விழி தனது விருப்பத்தைச் சொன்னாள்.
” எனக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் எனக்குக் கல்யாணம் ஓகே தான். ஒரு கட்டாயமுமில்லை. எனது விருப்பத்தைக் கேட்டு விட்டு ஆற அமர யோசித்து உங்களுடைய உண்மையான கருத்தைச் சொல்லுங்கள்.”
சுவாரஸ்யத்துடன் கயலின் முகத்தைப் பார்த்தான் பரிதி.
” வேலையில்லாப் பட்டதாரி ஆக எனக்கு ஆசை.”
” என்ன?”
திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான் இளம்பரிதி.
“புரியலையே எனக்கு! கொஞ்சம் புரியும்படியாக சொல்லறயா?”
” அதாவது நாம் திருமணம் செய்து கொண்டால் ஒரு பத்து வருடங்களுக்கு நன்றாக வேலை பார்த்து முடிந்தவரை பணம் சம்பாதித்து சேமித்து வைக்க வேண்டும். அதற்குப் பின்னால் வேலையை விட்டுவிட்டு கிராமத்தில் போய் நிரந்தரமாக செட்டிலாக வேண்டும். வயலில் விவசாயம் அல்லது காய்கறி,பழத் தோட்டமோ நம்மால் முடிந்ததை செய்து கொண்டு நமது குழந்தைகளை கிராமத்தில் இயற்கையான சூழ்நிலையில் வளர்க்க வேண்டும். கிடைக்கும் வருமானத்தில் திருப்தியுடன் எளிமையாகக் குடும்பம் நடத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் ஏதாவது இடத்திற்கு சென்று சுற்றுப்பயணம் செய்து வரவேண்டும்.”
” இந்தக் காலத்தில் இப்படி ஓர் ஆசையா?”
“என்னுடைய ஆஃபீஸில் வேலை வேலை என்று தீவிரமாக வேலையில் ஆழ்ந்து குடும்பத்திற்குத் தேவையான அன்பையும் பாசத்தையும் தராமல் சின்னச் சின்ன இன்பங்களைக் கூட இழந்து நிற்கும் சீனியர் அதிகாரிகளை பார்த்து மனம் வருந்தி நான் எடுத்த முடிவு இது. வாழ்க்கையின் இன்பத்தையே தொலைத்துவிட்டு பணம் சேர்ப்பதால் என்ன பயன்? அதனால் ஒரு கட்டத்தில் நாம் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்க வேண்டும். காலம் கடந்தபின் பயனில்லை.”

தெளிவாகப் பேசிய கயல்விழியின் வார்த்தைகளில் தன்னை இழந்து நின்றான் இளம்பரிதி.

எதிர்கால வேலையில்லாப் பட்டதாரிகள் இருவரும் தங்களுடைய முடிவைச் சொல்ல வீட்டை நோக்கி நடந்தார்கள்.

One Comment on “வேலையில்லாப் பட்டதாரிகள்/புவனா சந்திரசேகரன்”

Comments are closed.