இலக்கிய இன்பம் 8

கோவை எழிலன்

கருமரத்தால் செய்த கதவு

தலைவன் வீடு திரும்புகிறான். தலைவியின் மீது கொண்ட காதல் துரத்த வேகமாக வந்து தன் வீட்டு வாயில் அடைகிறான். கதவைத் தட்டலாம் என்று எண்ணி கதவின் மீது தன் விரலை வைக்கிறான். உடனே திறந்தேன் என்ற குரல் கேட்கிறது.

“என்னடி தட்டும் முன்பே கதவைத் திறந்து விட்டாயே? எவ்வாறு நான் வந்து விட்டேன் என அறிந்தாய்? “ என அவன் வினவ அதற்கு அவள் “தாங்கள் வெளியே சென்றது முதல் எப்போது திரும்புவீர்கள் என வழி பார்த்து கதவென வாயிலில் நின்றிருந்த என் மீது தான் தாங்கள் விரலை வைத்தீர்” என்கிறாள்.

பாவேந்தரின் இந்த அருமையான கதவு பேசுமோ என்ற பாடல் இங்கே.

“காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்
ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்
தெருக்கதவில் ஊன்றினான். “திறந்தேன்” என்றோர்சொல்
வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?
“என்ன புதுமை” எனஏங்க, மறுநொடியில்
சின்னக் கதவு திறந்த ஒலியோடு
தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்!
புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான். “என்னேடி
தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே” என்றுரைத்தான்.
விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு.”