முண்டகோபனிஷத் என்ன சொல்கிறது ?/எஸ்ஸார்சி

அத்யாயம் 1

ஓம் கடவுளர்களே எது புனிதமோ
அதனை எங்கள் காதுகளால்
நாங்கள் கேட்கவேண்டும்.
வணக்கத்திற்குரியவனே,

எது புனிதமோ அதனை
எம் கண்களால் பார்ப்போமாகுக.
கடவுளால் கொடுக்கப்பட்ட
இவ்வாழ்க்கையை வாழ்வோமாக.

வலிமையான கை கால்களுடன்
கூடிய உடல்களோடு
உம்மைத் துதிக்கிறோம்.
இந்திரன் வலிமை வாய்ந்தவன்

பழம் புகழ் உடையோன்
எங்கள் வளத்தைக்காக்கட்டும்.
உணவு கொடுப்போன்
வளத்தின் பொறுப்பாளி

எங்களுக்கு எது நன்மை பயக்குமோ
அச்செல்வத்தை இந்திரன் அருளட்டும்.
விரைவான இயக்கத்தின் கடவுள்
எங்களுக்கு நன்மை அருளுக.
பெரு விஷயங்களைக் காக்கும்
அவர் எம்மையும் காப்பாற்றுக.

அத்யாயம் 1 பகுதி 1

1.அண்டத்தைப்படைத்துக்காக்கும் பிரம்மனே கடவுளர்களில் ஆதியில் உதித்தவன். பிரம்ம ஞானத்தை அவரே வகுத்தவர். பிரம்மஞானமே அனைத்து அறிவின் ஆதாரம். இதனை மூத்த குமாரன் அதர்வனுக்கு பிரம்மன் விளக்கினார்.

  1. பிரம்மா அதர்வனிடம் சொன்ன பிரம்மத்தைப்பற்றிய அறிவு அதர்வன் , ஆங்கிரனுக்கு ச்சொன்னான். ஆங்கிரன் பரத்வாஜ குடும்பத்தைச்சார்ந்த சத்யவாஹனுக்குச்சொல்ல சத்யவாஹன் ஆங்கிரசுக்குச்சொன்னான். குருபரம்பரையாக இந்த அறிவு பெறப்பட்டது.

3.சௌனகர் என்னும் உயர் குடும்பத்துக்காரர் புனித நூலின் படி ஆங்கிரசை அணுகினார். வினா வைத்தார். ஓ பகவானே, எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?.

4.சௌனகருக்கு ஆங்கிரஸ் விடை சொன்னார்.

இரண்டுவகை அறிவு
பெறப்படவேண்டும்.
வேதமும் பிரம்மமும்
அறிந்த உயர்ந்தோர்,
மற்றும் தாழ்ந்தோர். ( பர- அபர)

5.ரிக் யஜுர் சாம அதர்வ வேதங்கள்,
உச்சரிப்பு, கல்பம்,சடங்கு முறை,
இலக்கணம்,சொற் பத அறிவு,
அணி இலக்கணங்கள்,
ஜோதிடம் என்பன
அறிவின் தாழ் நிலையிலுள்ளவை.
என்றும் உள்ளதை
அறிய தேவையானது உயர் அறிவு.

6.எதனை க்காணமுடியாதோ,
பெறமுடியாதோ,
தோற்றமில்லாததுவோ,
குணவிசேஷமில்லாததுவோ,
செவியும் கண்ணும் இல்லாததுவோ,
என்றும் உள்ளதோ,
பலவாககாட்சி தருகிறதோ,
அனைத்திலும் விரவி இருப்பதுவோ,
மிக நுணுக்கமானதுவோ,
அழிக்கமுடியாததுவோ
அதனை ஞானி எல்லாவற்றிர்க்கும்
(பூதங்களுக்கும் அல்லது அனைத்து படைப்புக்களும்) மூலம் என்பதறிவான்.

7.சிலந்தி வலை பின்னுவதொப்ப,
பூமியிலிருந்து செடிகொடிகள் வளர்வதொப்ப,
வாழும் மனிதனிடமிருந்து
முடி முளைப்பது போல்,
பிரம்மத்திலிருந்து
இந்த பேரண்டம் துவங்குகிறது.

8.தவத்தால் பிரம்மன் உலகைப்படைக்க
அதனின்று உணவு பெறப்பட்டு,
உணவிலிருந்து உயிர், மனம்,
ஐம்பூதங்கள், உலகம்,செயல்
அதன் பலன்கள் வருகிறது.

  1. எல்லாமும் விவரமாய் அறிந்தவன்பிரம்மன்.
    யாருடைய தவம்,
    அறிவு, பிரம்மன், பெயர், உருவம் மற்றும்
    உணவு என்பவைக் கொணர்கிறதோ
    அவனே பிரம்மன்

அத்யாயம்1. பகுதி 2

  1. ஞானிகள் கண்ட வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யாக கிரியைகள் உண்மையானவை. திரேதா யுகத்தில் செயல்படுத்தப்பட்டன. உண்மையை நேசிப்பவர்கள் அவைகளை விடாமல் அனுசரிக்கவேண்டும். அதுவே உனது பாதை. அது நல் உலகிற்கு இட்டுச்செல்லும்.
  2. அக்னியை கிளரிவிட்டு ஜுவாலை அசையும் தருணம் யாகம் செய்பவர் நம்பிக்கையோடு ஹோம வஸ்துக்களை இரண்டு அக்னிகளுக்கிடையுள்ள இடத்தில் நெய்யை ஊற்ற வேண்டும்.
  3. அக்னிஹோத்ர யாகம் என்பதனை அமாவாசை பௌர்ணமி யாகங்களால்,சாதுர்மாஸ்ய யாகங்களால், அக்ராயன ( autumnal season) யாகங்களால் தொடரப்படாமல்,, அதிதி என்னும் விருந்தினர் வருகையில்லாமல், சரியான நேரத்திற்கு செய்யப்படாமல், விஸ்வதேவர்களுக்கு சடங்கு செய்யாமல், விதி எதுவோ அதன்படி செய்யாமல், செய்யப்படுவது ஏழுதலைமுறைகளை அழித்துவிடும்.
  4. தீயின் ஆடிக்கொண்டே இருக்கும் ஏழு கங்குகள், கலி ( கருப்பு) கராலி( வீர்யமானது) மனோஜவா( மனோ வேகமுடையது) சுலோஹிதா( கருஞ்சிவப்பு) சுதும்ரவர்னா( புகை நிறத்தவை) ஸ்புலிங்கினி ( ஒளிர்வது) விஸ்வரூபி அல்லது விஸ்வருசி. ( அனைத்து உருவங்களும் கொண்டது)
  5. அக்னிஹோத்திரத்தை தீ ஜ்வாலை வரும் சமயம் சரியான நேரத்தில் செய்பவன் சூரியக்கதிர்கள் வழி தேவர் தலைவன் வசிக்குமிடம் சென்றடைவான்.
  6. வருக வருக என்று சொல்லி அக்னிக்கு வணக்கம் செய்து யாகம்செய்பவனைக் கதிரவன் கதிர்களுக்கு கீழாக அழைத்துச்சென்று கதிரவனை ,புகழும் வார்த்தைகளான ‘பிரம்மனின் புனித உலகமிது உன் நற்செயல்களால் பெறப்பட்டது’ என்று சொல்லவைக்கவேண்டும்
  7. யாகத்திற்குத்துணை புரியும் 18 பேரும் தற்காலிகமானவர்கள் அழியக்கூடியவர்கள். இவர்களைத்தான் கீழான விழாக்கள் நம்பியிருக்கின்றன. இதையே ஆகச்சிறந்தது என்றெண்ணி மகிழும் அஞ்ஞானி மீண்டும் மீண்டும் வயோதிகனாகி மரணிக்கிறான்.

( 16 புரோஹிதர்கள், கர்த்தா அவர் மனைவி, ஆக 18 பேர்)

  1. அஞ்ஞானி

அஞ்ஞானத்தில் ஆழ்ந்துத்
தன்னைப் புத்திசாலி
அறிவாளி என்றுமே
கற்பனை செய்து
சுற்றிச் சுற்றி வருகிறான்.
குருடனை இன்னொரு குருடன்
வழி நடத்துவதுபோலே
துன்பப்பட்டுக்
கீழ் நிலை அடைகிறான்.

  1. அஞ்ஞானி அறிவில்லாது
    பல வழிகளில் உழன்று
    தான் ஒரு முடிவை
    எட்டி விட்டதாய் நினைக்கிறான்.
    அறிவில்லாது வினையாற்றுபவர்கள்
    தமது ஆசையினால்
    துன்ப நிலைக்கு வருகிறார்கள்.
    கர்மாவின் பலன் இருந்து
    அது தீர்ந்துபோனபின்னால்
    சொர்க்கத்தைவிட்டு
    நீங்கி விடுகிறார்கள்.
  2. யாகத்தையும் தானத்தையும்
    ஆகச்சிறந்ததாக எண்ணும்
    இந்த அஞ்ஞானிகள்
    அதற்கு மேல் உள்ள
    நல் விஷயம் அறியாதவர்கள்.
    தாம் செய்த நற்செயல்களால்
    உயர்ந்த சொர்க்கத்தில்
    இருந்து அனுபவித்துவிட்டு
    மீண்டும் இவ்வுலகிற்கோ
    அதற்குக் கீழான உலகிற்கோ
    சென்றுவிடுகின்றனர்.
  3. உறுதியை தவத்தைக்
    கைக்கொண்டு
    புலன்களை அடக்கிக்
    காட்டில் யாசகம் செய்து
    பாவங்களிலிருந்து விடுபட்டு
    வாழும் ஞானிகள்
    சூரியன் வழியாக
    என்றும் உள்ள அழியாப் புருஷன்
    இருக்கும் இடம் சென்று சேர்வர்..
  4. கர்மாவினால் பெறப்பட்ட
    இவ்வுலகத்தை ஆராய்ந்த
    பிராம்ணன்( பிரம்மத்தை விரும்பி)

அனைத்துஆசைகளினின்று
விடுதலை பெற்று
அழியா ஒன்றை கர்மாவினால்
பெறமுடியாது என்பதுணர்கிறான்
என்றும் அழியா ஒன்றின்
ஞானத்தை ப்பெற
கைகளில் சமித்தோடு
வேதம் அறிந்த குருவை ச் சேர்ந்தே
பிரம்மத்தோடு இணைகிறான்.

  1. மனம் அமைதியாகி
    புலன்கள் அடங்கி,
    வணக்கத்தோடு குருவை ச்சேரும்
    மாணவனுக்கு பிரம்ம ஞானம் வழங்கி,
    அதன்வழி உண்மையான
    அழிவேயில்லாதப் புருஷனை
    அறிய நல்லாசிரியன்
    போதனை செய்கிறான்.