இனிக்கும் தமிழ் – 184/-டி வி ராதாகிருஷ்ணன்

முத்தொள்ளாயிரம்..பெண்ணின் நாணம்

முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறியலாம்.

முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் 2,700 பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. ஆனாலும் முத்தொள்ளாயிரம் தொகுப்பில் மூவேந்தர்களைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் முன்னூறு பாடல்களாக மொத்தம்
தொள்ளாயிரம் பாடல்களே இருந்தன எனப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1943-ஆம் ஆண்டில் வசந்தம் என்ற இதழில் எழுதியுள்ளார்

முத்தொள்ளாயிரத்தில் இருந்து பெண்ணின் நாணம் குறித்த பாடல் ஒன்றை காண்போம்

பெண்கள் , தங்கள் உணர்ச்சிகளை சாதரணமாக உடன் வெளிப் படுத்துவது இல்லை. தன்னை அவள் காதலிக்கிறாளா? அதை வாய் திறந்து சொல்ல மாட்டாளா? என ஏங்கும் காதலர்கள் பலர் பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டக் கூடாது என்று இல்லை. ஆனால்
ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவர்களை தடுக்கிறது.

அதையும் மீறி அவர்கள் தங்கள் காதல் மற்றும் காமத்தை வெளிப்படுத்தும் போது அது மிக அழகாக இருக்கிறது.

வள்ளுவர் சொல்வார்..

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் (1094)

நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும்,நான் பார்க்காத
போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது
கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பில்லையா?

என எண்ணுகிறான் காதலன்.

ஆனால் அவளுக்கோ அவனை நேருக்கு நேர் பார்ப்பதை நாண்ம் தடுக்கிறது.
வெட்கம் கலந்த காதல் ஒரு அழகு தான்.
ஆணைப் போல அவளும் முரட்டுத் தனமாய் இருந்தால் , அதில் என்ன இன்பம் இருக்கப் போகிறது

ஆணுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை ஆனால். பெண்ணிடம் தயக்கம் இருக்கும்,
பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும்…..இவற்றிற்கு
நடுவில் அவர்களால் தங்கள் காதலை எந்த வகையில் சொல்ல முடியும்

இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல….தொன்று தொட்டு வருகிறது.

பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவளோஒரு சாதாரண குடும்பப் பெண்.
பாண்டியன் மேல் காதல் கொள்கிறாள். அரசனிடம் சொல்லவா முடியும் ? ஆனால்
அவனை கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த
பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து செல்கிறது.

யானையிடம் தலைவி சூஅல் நினைக்கிறாள்…”ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான்
போயேன்…என்ன அவசரம் ..” என்று அதே நேரம் யானை பதிலுக்கு , “ஏன் என்னை
மெதுவாக போகச் சொல்கிறாய் ” என்று கேட்டால் . பாண்டிய மன்னனை நான் மேலும்
பார்க்க வேண்டும்..அதனால்தான் என யானையிடம் சொல்லவா முடியும் ?

அதனால்..அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் பரிவுடன் சொல்வது போல
சொல்கிறாள் ” நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில்
உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல் , ஒரு பெண்
இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே , மெல்லமா போ “
என்கிறாள். என்னவோ , அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல.
சொல்கிறாள்

பாடல்

எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல் நெடு நல் வேல் மாறன் – உலாங்கால்
பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப் படுவது உடைத்து

பொருள்

ஏய்..(எலா) பெண் யானையே.. எங்கள் கூடல் நகரத்து கோமான், எதிரிகளின்
புலால் இருக்கும் நீண்ட வேலைக் கொண்ட
பாண்டிய மன்னன் உலா வரும் போது ..மெல்ல நடக்கவும்..தெளிந்து செய்யவில்லை
என்றால் உன் பெண்தன்மை சந்தேகத்திற்கு இடமாகும்.

மெதுவாக நடந்து போ…என்கிறாள்.
ஏய் , யானையே, கொஞ்சம் மெல்ல போனால் என்ன ?
எவ்வளவு நளினமாக, மென்மையாக, விரசம் கலக்காமல் தன் காதலை வெளிப் படுத்துகிறாள்.

One Comment on “இனிக்கும் தமிழ் – 184/-டி வி ராதாகிருஷ்ணன்”

Comments are closed.