கண்ணன் கல்யாணமும் மிளகாய் பொடி யும்/மாதவ பூவராக மூர்த்தி

ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.‌வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து கட்டுசாத மூட்டைகளை கொண்டு செல்லும் பழக்கம் இருந்தது.

ஒரு சுவையான அனுபவம். 55 ஆண்டுகளுக்கு முன் என் உறவினர் கண்ணன் திருமணத்திற்காக மாயவரத்திலிருந்து சேலம் செல்ல வேண்டியிருந்தது.நாங்கள் பெரியவர்கள் குழந்தைகள் எல்லாம் ஒரு முப்பது பேர்.‌எல்லாருக்கும் சேர்த்து காலை இட்லி மிளகாய் பொடி சட்னி, மதியம் புளியோதரை, தயிர் சாதம். அம்மா, அத்தை,பெரியம்மா எல்லாரும் அவைகளை தனித்தனி மூங்கில் கூடைகளில் வைத்து அதை வெள்ளை வேஷ்டி யால் கட்டி எடுத்து வந்தார்கள்.‌ சட்னி, மிளகாய்ப்பொடி, வடாம், ஊறுகாய், மோர்மிளகாய், சாப்பிட சருகு கட்டு எல்லாம் எங்களுடன் பயணித்தன. மிளகாய் பொடியை நல்லெண்ணெய் கலந்து பெரிய கண்ணாடி பாட்டிலில் வைத்து வெள்ளை துண்டில் கட்டி வந்திருந்தார்கள். கிட்டு மாமா ரயில் வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்னரே எங்களை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விட்டார். நாங்கள் சிறுவர்கள் அது எங்களுக்கு நீண்ட தூர பயணம்.மனம் ஆர்வத்தில் குதித்தது.

அப்போதெல்லாம் ரயிலில் முன் பதிவு செய்யும் பழக்கம் இல்லை. நிறைய Unreserved compartments இருக்கும்.‌ சென்னை செல்லும் வண்டி ஐந்தாவது பிளாட்பாரத்திற்கு வரும். நாங்கள் பிளாட்பாரத்தின் தென்கோடியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில் இருந்த மர நிழலில் தரையில் கூட்டமாக அமர்ந்து கொண்டோம். பெரியவர்கள் பழைய கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம்.

கிட்டு மாமா கனைத்துகொண்டு, “ரயில் வர நேரம் இருக்கு, பிளாட்பாரத்தில் தண்ணீர் வசதி இருப்பதால் இட்லியை இங்கே சாப்பிடலாம், என்றார். அப்பா சருகு கட்டில் ஒன்றை பிரித்து எல்லோருக்கும் கொடுத்தார்.‌அம்மாவும் பெரியம்மாவும் இட்லி, சட்னி எடுத்தார்கள். நாகி அத்தை மிளகாய்ப்பொடி பாட்டிலை எடுக்கப்போகும் போது அந்த விபரீதம் நடந்தது. மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் கலந்து இரத்த சிவப்பாய் இருந்தது. அப்பா கோபக்காரர். நாகி அத்தை அவரின் சகோதரி. அத்தை மிளகாய்ப்பொடி பாட்டிலை எடுக்கும் போது பாவம் கை தவறி பாட்டில் கீழே விழுந்து உடைந்து எண்ணெயுடன் கலந்து மிளகாய் பொடி இரத்த‌‌ சிவப்பாய் தரையில் சிதறியது. அப்பாவுக்கு மிளகாய் பொடி ரொம்ப பிடிக்கும். அது போன வருத்தம்.கீழே பாட்டிலை போட்ட கோபம் எல்லாம் சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்தது. பிளாட்பாரம் என்று கூட பார்க்காமல் பெரிதாக சத்தம் போட்டார். அம்மாவும் பெரியம்மாவும் அப்பாவை சமாதானப்படுத்தினார்கள்.

நாகி அத்தை அவமானம் தாங்காமல் அழுதுகொண்டே சிந்திய கலவையையும்,சிதறிய பாட்டில் துண்டுகளையும் உடைந்த பாட்டிலையும் மூட்டை கட்டினார். பிளாட்பாரத்தின் வடக்கு மூலையில் இருந்த கழிவறைகளுக்கு அருகில் போட்டு வர என்னையும் அழைத்துக்கொண்டு போனார்.

பாதி வழியில் ரயில்வே போலீஸ்காரர் அத்தையின் கையில் இருந்த மூட்டையில் இருந்து வழியும் சிவப்பு நிற எண்ணெயயை இரத்தம் என்று நினைத்து யாரையோ வெட்டி தலையை கொண்டு போவதாக நினைத்து எங்களை பின்தொடர்ந்து வந்து பிளாட்பார முனையில் போடும் போது கையும் களவுமாகப் பிடித்து விட்டார். எனக்கு போலீஸும் பார்த்து நடுக்கம் வந்து அத்தையுடன் ஒட்டிக் கொண்டேன். அத்தைக்கு ஒன்றும் புரியவில்லை.தைரியமாக அவரைப் பார்த்து, “என்னப்பா?” என்றார்.
அவர், “என்னம்மா ஒரு பொம்பளை, கொலை பண்ணி பகல் வேளையிலே பப்ளிக்கா ரத்தம் சொட்ட சொட்ட தலையை கொண்டு போறிங்க? நடங்க ஸ்டேஷனுக்கு.என்றார். அத்தை நிலமையை புரிந்து கொண்டு சிரித்து விட்டு “அப்பா இது கொலையும் இல்ல தலையும் இல்ல” என்று சொல்லி,”நீயே பாரு” என்று துண்டை கீழே வைத்து பிரித்து காண்பித்தார்.

அவரும் அதைப்பார்த்து விட்டு சிரித்தாலும் ஒரு கொலை கேஸ் இல்லாமல் போன வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது. அத்தையை போலீஸ் மடக்கியது பார்த்த அப்பா சாப்பிட்டு கொண்டிருந்த இட்லியை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தார். விபரம் தெரிந்து அவரிடம் கல்யாண கும்பல் என்று சொல்லி டிக்கெட் காண்பித்தார். பொலீஸ்காரரும், “போங்கம்மா” என்று சொன்னார். அத்தை அதை ஓரமாக போட்டுவிட்டு வந்தார். நாங்கள் மிளகாய் பொடி இல்லாமல் சட்னி தொட்டு கொண்டு இட்லி சாப்பிட்டோம். ரயில் வர ஏறி கடலூரில் இறங்கி சேலம் வண்டியில் ஏறி சேலம் டவுன் ஸ்டேஷனில் இறங்கி மண்டபம் போய் கண்ணன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இது நடந்து பல வருடங்கள் ஆனாலும் நினைவு பசுமையாக இருக்கிறது. நாகி அத்தையையும் மாயவரம் பிளாட்பாரத்தையும், இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.‌இந்த நிகழ்வை உங்களுடன் இன்று பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.