மௌன சாமியார்/ரேவதி பாலு

” எப்படி உட்கார்ந்து இருக்கிறார் பாரு உங்க அப்பா. சரியான மவுன சாமியார்” என்றாள் கௌசல்யா கோபமாக. “கவுண்டமணி படத்துல வர மாதிரி பக்கத்துல தட்டுல வேணா மிச்சர் வைத்துவிடலாமா அம்மா” பெரிய பையன் ரவி கேலியாக
சொன்னான்.

வீட்டில் பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது அந்த வீட்டுப் பெண் கலா ,ரவியின் கங்கை, தான் யாரையோ காதலிப்பதாக சொன்னதிலிருந்து வீட்டில் ஒரே ரகளை. கௌசல்யா, ரவி, அவன் தம்பி சேகர் என்று ஆளாளுக்கு தங்கள் அபிப்ராயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் கள். மொத்தத்தில் எல்லோரும் கலா செய்வது கொஞ்சம் கூட சரியே இல்லை என்று தான் சொன்னார்கள். கலா கோபமாக இவர்கள் அபிப்ராயங்களை மறுத்து பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக அவள் காதலிப்பதாக சொன்ன பாஸ்கரை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லி பேசிக்கொள்ளலாம் என்ற முடிவு எடுத்தார்கள் . இந்த விவாதத்தின் போது கலாவின் அப்பா ஒன்றும் பேசாமல் மௌனம் சாதித்தது அவர்கள் கோபத்தை கிளறியது.

விவாதம் முடிந்து எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க போனதும் கௌசல்யா காபியுடன் கணவர் அருகே வந்தாள்.

” உங்க பொண்ணு கல்யாணத்த பத்தி உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா” என்றாள் கோபமாக.

அவர் சாந்தமாக அவளை ஏறிட்டார்.
” நானும் இதில் தலையிட்டு பேசி குழப்பாமல் இருந்ததால் தானே நீங்கள் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கிறீர்கள்? குடும்பத்தில் இந்த மாதிரி விவாதங்களின் போது எல்லோரும் பேசி குட்டையை குழப்பாமல் ஒருவர் பேசாமல் இருப்பதும் நல்லது தானே?”

நியாயமான அவருடைய வார்த்தைகளுக்கு கௌசல்யாவால் பதிலளிக்க இயலவில்லை