நேற்றிரவு கொஞ்சம் திண்டாடிப் போனோம்/எஸ் வி வேணுகோபாலன்

சாப்பிட்டு விட்டுத் தான் வந்தோம்
என்று சொல்வது முதல் முறையல்ல
அதற்கு ஒரே பொருளும் அல்ல

அன்பை மட்டும் அள்ளியள்ளிப் பருகி
விடை பெற நேரும்
எளிய மனிதர்கள் இல்லத்தில்
சொன்னதுண்டு
அவர்களது பரிதவிப்பை ஊகித்து..

நிலவரம் சரியில்லாத
கலவர நேரத்தில் நுழைந்துவிட்டு
வேகவேகமாக இயல்புக்கு மீண்டதாய்க்
காட்டிக்கொண்டு தவிக்கும்
உறவுகள் பார்க்கையில்
ஓசைப்படாமல் சொல்வதுண்டு

இன்னும்
என்னென்னவோ சூழல்களில்
சாப்பிடா விட்டாலும்
சொல்லிவிட்டு நகர்வது
வழக்கம் தான்…

உண்மையிலேயே
உணவு முடித்துக் கொண்டு
வீடு திரும்பும் வழியில்
நேற்றிரவு
திடீர் நினைப்பில்
பார்க்கப் போன
நண்பர் இல்லத்தில்

தங்களுக்கென்று
வரவழைத்த உணவுப் பொட்டலங்களை
உற்சாகமாகப் பிரித்தபடி
பிடிவாதமான அன்பைப்
பெருமழையாய்ப் பெய்வித்து
முகம் குழைய
முகம் தொட்டு
முகம் மலர
சாப்பிட்டுத் தான் போகணும்
சாப்பிட்டு விட்டுத் தான் போகணும்
என்றே துள்ளிக் குதிக்கும்
பேரக் குழந்தையிடம்
உண்மையைச் சொல்லி விடை பெறத்
திண்டாடிப் போனோம் நேற்றிரவு

சாப்பிட்டுத் தான் வந்தோம்
ஆனாலும்
அளப்பரிய அவன் நேயத்தை !

7 Comments on “நேற்றிரவு கொஞ்சம் திண்டாடிப் போனோம்/எஸ் வி வேணுகோபாலன்”

  1. மறுப்பு சொல்ல முடியாத தருணங்கள், அன்பின் உண்மை நிலை முன்னே
    அதுவும் மழலையின் முன்னே.

  2. உடலால் முதுமை வந்தாலும், உள்ளத்தால் குழந்தைகளாகவே நாம் இருந்தால் ஏது பிரச்னை??

  3. உணவு சுவை மட்டும் தருவதில்லை. மனதிற்கு மகிழ்ச்சியையும் தரும் . அதுவும் குழந்தைகளின் அன்பான இயல்புகளின் வழியாக.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    நன்றி

Comments are closed.