இனிக்கும் தமிழ் – 185/டி வி ராதாகிருஷ்ணன்

திருவருட்பா – அடிவயிற்றை முறுக்காதோ ?

பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை
புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான்.. என்று உணர்ந்து
செயல்பட்டால் ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார்
வள்ளலார்..திருவருட்பாவில் இந்த பாடலின் மூலம்

பாடல்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!

பொருள்

எது சரி..எது தவறு என்று நமக்கேத் தெரியாமல்..மற்றவர்களுக்கு நாம்
நினைப்பதுதான் சரி என விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.பொழுதை வீணே
கழிக்கின்றோம்.நாம் உண்பதற்காக மற்ற உயிர்களை கொல்கிறோம்.அர்த்தமில்லாமல்
..வெட்டிப்பேச்சு பேசி..சிரிக்கிறோம்.கையில் விளக்கு இருந்தும் பாழும்
கிணற்றில் விழும் அறிவிலிகள் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

(அறிவு இருந்தும்,நல்லது,கெட்டது தெரிந்தும்)கருத்து இருந்தும் கருதாமல்
விட்டு விடுகிறோம்.

ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம்
நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது
என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும் நாம் நினைத்துக்
கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம்
வர வேண்டாமா ?

கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும் உலகத்தாரே!

உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன் வரும்போது
அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்

என்கிறார் வள்ளலார்.

சிந்திப்போம்

                  - 

One Comment on “இனிக்கும் தமிழ் – 185/டி வி ராதாகிருஷ்ணன்”

Comments are closed.